Published:Updated:

முடிவாகாவிட்டால், தனித்துப் போட்டி? - பிரேமலதா கொந்தளிப்பின் பின்னணி

ஆ.விஜயானந்த்
மலையரசு
முடிவாகாவிட்டால், தனித்துப் போட்டி? - பிரேமலதா கொந்தளிப்பின் பின்னணி
முடிவாகாவிட்டால், தனித்துப் போட்டி? - பிரேமலதா கொந்தளிப்பின் பின்னணி

அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கும்போதே, தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க பொருளாளர் துரைமுருகனைச் சந்தித்தனர். அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டணி பேசவே வந்தனர் என்றார் துரைமுருகன். ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் சுதீஷ். ``துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகவே எங்கள் மாவட்டச் செயலாளர்கள் சந்தித்தனர். தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, முதன் முதலில் அ.தி.மு.க பா.ஜ.க-வுடன்தான் நாங்கள் பேசிவருகிறோம். துரைமுருகன் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் என்ன ஆகும். அவரது கட்சி பற்றி, தலைமை பற்றி அவர் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும்" எனக் கூறினார் சுதீஷ். 

இவரைத் தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. அதில்,  ``தேர்தல் ஆதாயத்துக்காக தே.மு.தி.க-வை தி.மு.க பயன்படுத்தியுள்ளது. தே.மு.தி.க-வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க செய்த சூழ்ச்சியே இது" என்று கூறினார். தி.மு.க குறித்துப் பேசும்போதே அதிமுகவையும் அவர் விட்டுவைக்கவில்லை. ``சென்ற தேர்தலில், அ.தி.மு.க தனியாக நின்று 37 இடங்களை வென்றது. ஆனால், அதனால் தமிழகத்துக்கு என்ன நல்லது நடந்தது? அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னதாக ஜெயலலிதா, விஜயகாந்த் மீது பல அபாண்டமான வார்த்தைகளைக் கூறினார். ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையிலேயே குரல்கொடுத்தவர் விஜயகாந்த் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். இன்றுவரை அ.தி.மு.க ஆட்சியில் உள்ளது என்றால், அதற்கு தே.மு.தி.க-தான் காரணம்" எனக் கொட்டித்தீர்த்தார். 

அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், பிரேமலதா பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், பிரேமலதா பேச்சுக்கு எதிர்ப்புக்காட்டிவருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது பிரேமலதா ஏன் இப்படிப் பேசினார் என்பது குறித்து தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கேட்டோம். ``கடந்த தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த முறை அப்படியல்ல.  நாங்கள் பேசிய மறுநாளே பா.ம.க உடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டனர் அ.தி.மு.க-வினர். பா.ம.க-வுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோதே எங்களையும் சேர்த்து ஒப்பந்தம் போட்டிருக்கலாமே என்பதுதான் எங்கள் வருத்தம். 

மோடி பிரதமராக வர வேண்டும் என்று ஆரம்பம் முதலே தே.மு.தி.க கூறிவருகிறது. ஆனால் பா.ம.க நிறுவனம் ராமதாஸோ மோடியின் ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண்கள் கொடுத்தவிட்டு, சந்தர்ப்பவாதமாக கூட்டணி வைத்துள்ளார். அவருக்கு ஏழு தொகுதிகள் கொடுத்துள்ளனர். ஆனால், ஆரம்பம் முதலே மோடியைப் பிரதமராக முன்னிறுத்திவரும் தே.மு.தி.க-வுக்கு எதிர்பார்க்கும் தொகுதிகளைக் கொடுப்பதில் என்ன தவறு. இதனால்தான் நேற்றைய பிரஸ்மீட்டில் அப்படிப் பேசினார். எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைக்காவிட்டால், தனித்து போட்டியிடலாம் என யோசித்து வரப்படுகிறது. அதனாலேயே, தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஃபார்முலாவைக் கொண்டுவந்தது விஜயகாந்த் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒருவேளை தனித்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிற்கும் ஏழு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம். அப்போது, அ.தி.மு.க-வின் ஊழல்கள், அன்புமணி ராமதாஸின் மீதான ஊழல் வழக்குகள் குறித்தும் பிரசாரத்தில் பேச வாய்ப்பிருக்கிறது" என்றார். எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடும் முடிவை தே.மு.தி.க எடுத்துள்ளது, அக்கட்சியினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.