Published:Updated:

மோடி மீண்டும் போட்டியிடும் தொகுதி...! தேர்தல் அறிவிப்பு தாமதமாவது ஏன்?

மோடி மீண்டும் போட்டியிடும் தொகுதி...! தேர்தல் அறிவிப்பு தாமதமாவது ஏன்?
மோடி மீண்டும் போட்டியிடும் தொகுதி...! தேர்தல் அறிவிப்பு தாமதமாவது ஏன்?

புதுடெல்லியில் பி.ஜே.பி. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாரணாசி தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்றும், அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதி எது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனினும் மற்றொரு தொகுதி பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் 17-வது மக்களவையை ஏற்படுத்துவதற்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வாரத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அப்போது 9 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் தமிழகத்தில் அனைத்து 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இந்தச் சூழலில் மார்ச் 8-ம் தேதி (நேற்று) நாடாளுமன்றத் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிடவில்லை.

இதற்கிடையே, பி.ஜே.பி. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் யுக்திகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக பி.ஜே.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. தவிர, தற்போது வாரணாசி தொகுதி எம்.பி.-யாக இருக்கும் பிரதமர் மோடி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கடந்த முறை (2014) வதோதரா மக்களவைத் தொகுதியிலும் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது, வாரணாசி தவிர்த்து, இன்னொரு தொகுதி எது என்பதை பி.ஜே.பி. நாடாளுமன்றக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.பி.ஜே.பி. கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

தவிர, இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வயது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாம். அதாவது, மிக அதிக வயதானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக்கூடாது என்பதில் கட்சி மேலிடம் தீவிரம் காட்டியதாகவும், அது குறித்தும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.

மேலும் பி.ஜே.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட தொகுதியில் அவரின் வெற்றிவாய்ப்பை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 

பி.ஜே.பி. நாடாளுமன்றக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் கூறுகையில், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் பி.ஜே.பி. கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே இந்த அமைப்பு, பி.ஜே.பி. தலைமையிலான மாநில அரசில் பங்கு பெற்றுள்ளது. அந்த வகையில், பி.ஜே.பி. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், எஞ்சியுள்ள ஒரு தொகுதியில் மாணவர் சங்கமும் போட்டியிடும்" என்றார்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும், ரயில்வே திட்டங்கள், மேம்பாலத் திட்டங்கள், அனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தல் போன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், அதுவரை நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளிவராது என்று புதுடெல்லியில் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் காரணமாகவே மார்ச் 8-ம் தேதியன்று, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும், வரும் 15-ம் தேதிக்கு முன்பாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு வாய்மொழியாக அறிவுறுத்தல் சென்றிருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

கடந்த முறை 9 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது போலவே, இந்த முறையும் எட்டு அல்லது ஒன்பது கட்டங்களாக நடைபெறக்கூடும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே, அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.