Published:Updated:

“நடக்கின்ற விஷயங்களை கேப்டனுக்கு வேறு மாதிரி சொல்வார்கள்!” - விளாசும் வி.சி.சந்திரகுமார்

“நடக்கின்ற விஷயங்களை கேப்டனுக்கு வேறு மாதிரி சொல்வார்கள்!” - விளாசும் வி.சி.சந்திரகுமார்
“நடக்கின்ற விஷயங்களை கேப்டனுக்கு வேறு மாதிரி சொல்வார்கள்!” - விளாசும் வி.சி.சந்திரகுமார்

ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது, பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியது, கூட்டணி அமைக்கக் கடுமையான பேரத்தினை முன் வைப்பதாகச் சொல்லப்படுவது போன்ற பிரேமலதா விஜயகாந்தின் செயல்பாடுகளால், தே.மு.தி.க மீது கொஞ்ச நஞ்சமிருந்த நல்ல அபிப்ராயமும் சுக்கு நூறாக உடைந்திருக்கிறது. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் தே.மு.தி.கவை பலரும் வறுத்தெடுக்கின்றனர். பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய சுயநல அரசியலுக்காகச் செய்யும் இத்தகைய செயல்களால், தே.மு.தி.க.,வின் இமேஜ் நாளுக்கு நாள் டேமேஜாகி வருவதாகக் கட்சிக்குள்ளே பலரும் கொதித்துக் கிடக்கின்றனர்.

ஏன் கூட்டணி அமைப்பதில் பிரேமலதா விஜயகாந்த் இவ்வளவு இழுத்தடிக்கிறார்? அவர்களுடைய உண்மையான டிமாண்ட் என்ன? கூட்டணி அமைப்பதில் பிரேமலதா விஜயகாந்தின் செயல்பாடு எப்படி?...போன்றவை குறித்து தே.மு.தி.கவின் முன்னாள் முக்கியப் புள்ளியும், இன்னாள் தி.மு.க பிரமுகரான வி.சி.சந்திரகுமார் அவர்களிடம் பேசினோம். “எப்பவுமே தேர்தல் நேரத்துல தே.மு.தி.க எல்லா பக்கமுமே கதவை ஓப்பன் பண்ணி வெச்சுப்பாங்க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்துல பிரதமர் மன்மோகன்சிங்கை பார்க்க எம்.எல்.ஏக்களை கூட்டிட்டு போய் பேசுனார் கேப்டன். ஆனா, போய்ட்டு வந்த 15-வது நாள்லயே பா.ஜ.கவுடன் கூட்டணின்னு அறிவிச்சார். அதேமாதிரி, 2016 தேர்தல் சமயத்துல மக்கள் நலக் கூட்டணி, பி.ஜே.பி எல்லாம் வீட்டுல வந்து சந்திச்சு பேசிட்டு போறாங்க. ஆனா, கேப்டன் தி.மு.கவுல உள்ள முக்கியப் புள்ளி ஒருத்தரைத் தனியா சந்திச்சு கூட்டணி சம்பந்தமாக பேசுனார். இப்படி எப்பவுமே தேர்தல் சமயத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தன்னுடைய பேரத்தை வலிமையாக்குவதற்கும், அதிகப்படுத்துவதற்கும் செய்கின்ற யுக்தியாக தே.மு.தி.க இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது” என எடுத்த எடுப்பிலேயே காட்டமானார். 

தொடர்ந்து பேசியவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்ததிலேயே தே.மு.தி.க தான் பெரிய கட்சி. அவங்க சொல்றத தான் பா.ஜ.க கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துச்சி. இப்போது கூட பா.ஜ.க தலைமையிடம் தான் தே.மு.தி.க தரப்பு கூட்டணிக்காக பேசி வருகிறது. ஆனால், இதற்கிடையே அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்து அதற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை பிரேமலதாவால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியலை. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணைய ரெக்கார்டு படி மூணாவது இடத்தில் நாம இருக்கையில், பா.ம.கவுக்கு எப்படி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது தான் பிரேமலதாவின் பிரதானமான கோபம். இப்போதும் தே.மு.தி.கவின் நிபந்தனைகளை அ.தி.மு.கவினர் நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள். தே.மு.தி.க கேட்கின்ற பணத்தையும் அ.தி.மு.க தரப்பில் கொடுத்திடுவார்கள். ஆனால், தே.மு.தி.க பணத்துக்காகத் தான் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்கின்ற விஷயம் மக்கள் மத்தியில் பரவிவிட்டது. அதனால் தான் வேண்டுமென்றே இத்தனை தொகுதிகள் வேண்டும்! இடைத்தேர்தலிலும் சீட் வேண்டும்! நாங்கள் கேட்கின்ற தொகுதி வேண்டும்!... என நாங்கள் காசுக்காக பேரம் பேசவில்லை என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.  

அனகை முருகேசன் மற்றும் இளங்கோவனை ஒரு கார்ல துரைமுருகன் வீட்டுக்கு அனுப்பிட்டு, பியூஸ் கோயலை சந்திக்க சுதீஷ் போறார். பியூஸ் கோயல்கிட்ட உட்காந்துக்கிட்டு, ‘எங்க ஆளுங்க ரெண்டு பேர் இப்போ துரைமுருகன்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. நீங்க ஒரு முடிவுக்கு வரலைன்னா, நாங்க துரைமுருகன்கிட்ட பேசி முடிச்சிக்கிறோம்’ என லேசாக மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவிடம் பேரத்தை கூட்டுவதற்காகத் தான் இந்த வேலை நடக்கிறது என்பதை ஸ்மெல் செய்த துரைமுருகன், ‘தி.மு.க கூட்டணி பங்கீடு முடிந்துவிட்டது. தே.மு.தி.கவினர் வந்து என்னிடம் பேசியது ஸ்டாலினிடம் சொல்லும் அளவிற்கு முக்கியமான விஷயம் அல்ல!’ எனப் பேட்டி கொடுத்தார். தி.மு.கவை வைத்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவை மிரட்டிப் பார்க்கலாம் என தே.மு.தி.க கணக்குப் போட்ட வேளையில், துரைமுருகனின் இந்தப் பேட்டியால் பா.ஜ.கவிடம் தே.மு.தி.கவின் இமேஜ் ஒட்டுமொத்தமாக உடைந்தது.

இனிப் பா.ஜ.கவிடம் எப்படி பேரம் பேசுவது, அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தி.மு.க நம்மைத் தள்ளிவிட்டதே! என்ற கோபத்தில் தான் சுதீஷை வைத்து பேட்டி கொடுக்கின்றனர். அது ஒர்க்கவுட் ஆகாததால் பிரேமலதா பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். ஏற்கெனவே கோவம், விரக்தி, இயலாமை போன்றவற்றில் இருக்கும் பிரேமலதா அதை பத்திரிகையாளர்களிடம் ஒருமையில் பேசி நேரடியாகக் காட்டுகிறார். இவ்வளவு சங்கதிகள் நடந்தாலும், நிச்சயமாக பிரேமலதா அ.தி.மு.கவுடன் தான் கூட்டணி வைப்பார். ஆனால், அ.தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளில் நிச்சயமாக தே.மு.தி.க டெப்பாசிட் கூட வாங்காது. பிரேமலதாவின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டு கட்சி நிர்வாகிகள் பலரே கடுப்பில் இருக்கின்றனர். ‘அ.தி.மு.க கூட கூட்டணி வைக்கிறோமுன்னா, எதுக்குங்க தி.மு.கவை பார்த்து பேசிகிட்டு இருக்கீங்க’ என நிர்வாகிகள் பிரேமலதாவிடம் எகிறியிருக்கின்றனர்.

நடக்கின்ற விஷயங்கள் ஒருசிலவை கேப்டனுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தாலும், ஒருசில விஷயங்களை பிரேமலதாவை மீறி கேப்டனால் செய்ய முடியாது. கேப்டனுக்கு நடக்குறது எல்லாம் தெரியும். ஆனா, எல்லாத்தையும் வேற மாதிரி திசை திருப்புவாங்க. அவரை டி.வி பார்க்க, பேப்பர் படிக்க விட மாட்டாங்க. இவங்க சொல்றது தான் செய்தி. இவங்க சரியாக இருந்த மாதிரியும், தி.மு.க மேல கோபத்தை வரவைக்கிற மாதிரி சொல்லி வைப்பாங்க. கேப்டனின் அஜாக்கிரதை, அளவுக்கு மீறிய குடும்ப பாசம் எல்லாம் தான் இன்றைக்கு தே.மு.தி.கவை இப்படி நிறுத்தியிருக்கு. ஒருபக்கம் நாம இருந்த இயக்கம் இப்படி வீணா போகுதேன்னு வருத்தம் இருந்தாலும், அவர் உடம்பு சரியில்லாம இருக்க இந்த நேரத்துல அவரை எதிர்த்து பேசுற சூழ்நிலை உண்டானதை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றார்.