பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

ன்னும் பதவியேற்கவேயில்லை, அதற்குள்ளாகவே மும்மொழிக்கொள்கைப் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி, எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு மேல் முறையீடு என்று தமிழக அரசியல் களம் சூடேறத் தொடங்கியுள்ளது. மற்றொரு புறத்தில் 2 ஜி வழக்கில் மேல் முறையீடு, ஐ.என்.எஸ் மீடியா நிறுவன வழக்கு சி.பி.ஐ நீதிமன்றத்திலிருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் என, தமிழக எம்.பி-க்கள் மீதான கெடுபிடிகளும் இறுகத்தொடங்கியுள்ளன. இதுவும் போதாதென்று, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 37 பேரைப் போலவே, இவர்களும் ‘வேஸ்ட்’ என்று விமர்சனங்கள் விரட்டுகின்றன. இந்தச் சூழலை தி.மு.க கூட்டணியின் 37 எம்.பி-க்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் தமிழக மக்களின் பேராவலாக இருக்கிறது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம்.

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி பலமாக அமைந்து விட்டதால், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 37 எம்.பி-க்களும் ‘வேஸ்ட்’ என்கிற கருத்தை, சிலர் பரப்புகின்றனர். தமிழக மக்களை மட்டுமல்ல, மத்திய பி.ஜே.பி அரசையும் சேர்த்து அவமதிக்கிற ஒரு விஷயமாக இதைப் பார்க்கிறேன். இது ஜனநாயக நாடுதானே, மத்தியில் அமைந்திருப்பது ஒன்றும் சர்வாதிகார அரசு இல்லையே... பிறகு ஏன் தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றாது என்கிற கருத்தைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கும் மோடிதான் பிரதமர் என்பதை, இதுபோன்ற கருத்தைப் பரப்புபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் முக்கியத் தேவைகளை எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகச் சொல்லியிருக்கிறோம். அந்த வாக்குறுதிகள் எல்லாமே நியாயமானவை. அவற்றை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை என்று கருதுகிறோம். எனவே, அவற்றை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் ஜனநாயக முறைகளில் வலியுறுத்துவோம். மோடி அரசும், தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் என்றும், தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றும் என்றும் நம்புகிறோம். தமிழ்நாட்டு மீதான தன்னுடைய அணுகுமுறைகளைப் பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையுடன் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்.”

‘‘இந்தியாவின் 65 ஆண்டுக்கால நாடாளுமன்ற வரலாற்றில், கடந்த ஐந்தாண்டுகளைத் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் எதிர்க்கட்சியினருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டுக்கால பி.ஜே.பி ஆட்சிதான் அதை முற்றிலும் மறுத்தது. இந்தத் தடவை பிரதமர் மோடி கடந்த காலத்தைப்போல இருக்கமாட்டார் என்று நம்புகிறோம். ஜனநாயகபூர்வமாக நாடாளுமன்றம் செயல்படும், எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிப்பதற்கு இடமளிப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் செல்கிறோம். நரேந்திரமோடியும், அமித் ஷாவும் சேர்ந்து மக்களவையில் மிகமுக்கியப் பொறுப்புகளில் இருக்கும்போது, நாடாளுமன்றம் ஜனநாயகபூர்வமாகச் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிப்பதற்கு உரியநேரம் கொடுக்கப்பட வேண்டும்.

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

கடந்தமுறை பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் சேர்ந்து ‘மேட்ச் ஃபிக்சிங்’ செய்து கொண்டதுபோலச் செயல்பட்டார்கள். மத்திய ஆளும்கட்சியின் அடிமைகள்போல அ.தி.மு.க எம்.பி-க்கள் செயல்பட்டார்கள். இந்தமுறை அப்படி இருக்காது. தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளுக்காக ஒட்டுமொத்தமாக 37 எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்.

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி, மும்மொழிக் கொள்கை ஆகிய விஷயங்களைப் பார்க்கும்போது, பி.ஜே.பி-யின் ஆதிக்க மனப்பான்மை தெரிகிறது. ஒரு மொழி, ஒரு மதம், மற்றவர்களெல்லாம் எங்களுக்குக் கீழே இருப்பவர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ஸின் நோக்கம் இவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது. மற்றவர்களின் குரலுக்கும் கருத்துக்கும் எந்த வகையிலும் இடம்கொடுக்க மாட்டோம் என்கிற வெறுப்புணர்வின் வெளிப்பாடாக இது இருக்கிறது. அது, அரசின் முடிவுகளிலும் இருப்பது தெரிகிறது. தொகுதி மக்களின் பிரச்னைகள், தென் தமிழகத்தின் பிரச்னைகள், தமிழக மக்களின் உரிமைகள் ஆகியவை குறித்துப் பேச எங்களை அனுமதிப்பார்கள் என்று நம்புகிறோம். பேசவிடவில்லை என்றால், எங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். பிறகு, கூச்சல் குழப்பம் ஆகிவிட்டது என்று சொல்லக்கூடாது.”

‘‘தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதற்கு உறுதுணையாக மத்திய அரசு இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.  தமிழக மக்கள் பி.ஜே.பி-க்கு வாக்களிக்கவில்லை என்கிற காரணத்தால், தமிழ்நாட்டை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது. உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தால்தான் நிதி தருவோம் என்று மாநில அரசுகள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதைப்போல, மத்திய அரசால் நடந்துகொள்ள முடியாது. இவர்களாகவே நீட் தேர்வைக் கொண்டுவந்தார்கள், மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்,  எட்டு வழிச்சாலையைக் கொண்டு வந்தார்கள். இவற்றையெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து யாராவது கேட்டார்களா? மக்கள் கேட்காத திட்டங்களை மட்டுமே கொடுப்போம் என்று மத்திய அரசு அடம்பிடிக்க முடியாது.

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

தமிழக மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் மத்திய அரசிடம் எங்களால் கேட்டுப்பெற முடியும்,  மத்திய அரசை நிர்பந்தித்துப்பெற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதற்கு, மாநில அரசும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை அனுமதிப்பது ஆகியவற்றில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்குமோ, அதைப் பொறுத்து எங்களுடைய நடவடிக்கைகள் இருக்கும்.”

‘‘பிரச்னைகளைப் பேசுவது, விவாதிப்பது என்பது நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்களின் முக்கியமான செயல்பாடு. ஜனநாயக விதிகளை எந்தளவுக்கு பி.ஜே.பி அரசு அனுமதிக்கப்போகிறதோ, அந்தளவுக்குத்தான் உறுப்பினர்களால் பேச முடியும். அதைத்தாண்டி நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது. தீர்மானங்கள் கொண்டுவரலாம். கேள்விகள் எழுப்பலாம்.

 அமைச்சகங்களுக்குப் போய் நம்முடைய தொகுதி விவகாரங்களை எடுத்துச் செல்லாம். தனிநபர் மசோதாக்கள் கொண்டு வரலாம்.

என்ன செய்யப்போகிறார்கள் எம்.பி-க்கள்?

இந்த மாதிரி நாடாளுமன்றத்துக்குள் பலவிதமான செயல்பாடுகள் உள்ளன. அவை அனைத்திலும் நாங்கள் முழுமையாகக் கவனம் செலுத்துவோம். என்னைப் பொறுத்த அளவில், சட்டமன்றத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவேன்.

தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுவோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது உட்பட முக்கியமான பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. மாநில உரிமைகளுக்காக நாங்கள் போராட வேண்டியிருக்கும். எங்களுக்கு அவையில் பெரிய பலம் இல்லை என்பதாலேயே இவற்றை விட்டுவிட முடியாது. கல்விக்கடன் ரத்துசெய்யக் கோரி வலியுறுத்துவோம். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கல்விக்கு ஆறு சதவிகித ஒதுக்கீடு என்பதை வலியுறுத்துவோம். சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை அதிகரிக்க வலியுறுத்துவோம். என்னுடைய தொகுதிக்குச் சில வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளேன். அவற்றை நிறைவேற்ற எல்லா வகையிலும் வலியுறுத்துவேன்.

எங்கள் கட்சியில் இரண்டு எம்.பி-க்கள் இருக்கிறோம். 543 எம்.பி-க்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் இருந்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதில் எங்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. அதன்படி செயல்படுவோம். ஜனநாயக முறையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்.”

இவர்களிடம் எக்கச்சக்கமாய் எதிர்பார்க்கிறது தமிழகம், ஏன், இந்தியாவும்கூட. என்ன செய்யப்போகிறார்கள் 37 எம்.பி-க்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்!

- ஆ.பழனியப்பன்; படங்கள்: தி.விஜய், எஸ்.தேவராஜன், ஆர்.முத்துராஜ், ம.அரவிந்தன்