Published:Updated:

``கூட்டணிப் பேச்சுவார்த்தை: தே.மு.தி.க-வுடன் இழுபறி ஏன்?’’ - தமிழிசை சௌந்தரராஜன்

"தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை முன்னிறுத்தியே பி.ஜே.பி-யின் பிரசாரம் இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே தோல்வியடைந்த கூட்டணி. பத்து வருடங்களாக அவர்கள் கூட்டணியில்தான் உள்ளனர். தமிழகத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

``கூட்டணிப் பேச்சுவார்த்தை: தே.மு.தி.க-வுடன் இழுபறி ஏன்?’’ - தமிழிசை சௌந்தரராஜன்
``கூட்டணிப் பேச்சுவார்த்தை: தே.மு.தி.க-வுடன் இழுபறி ஏன்?’’ - தமிழிசை சௌந்தரராஜன்

தே.மு.தி.க-வுடன் பி.ஜே.பி-க்கு நல்லுறவு உள்ளது என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி சேரும் என்றும் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் இரண்டு முக்கிய தேசியக் கட்சிகளான பி.ஜே.பி-யும் காங்கிரஸும் தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களிலும் தங்களுக்கான சேஃப் ஸோனில் கூட்டணியை இறுதிசெய்துவிட்ட நிலையில், மாநிலக் கட்சியான விஜயகாந்த்தின் தே.மு.தி.க மட்டும் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதி யாருக்கு, பிரசார யுக்தி, தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு எனத் தேர்தல் களம் சூடாகி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த தமிழக  பி.ஜே.பி தலைவர் தழிசை சௌந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... 

 ``உங்களுடைய கூட்டணிக் கட்சிகளின் பலம் குறித்து..?’’ 

``தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளோடு பி.ஜே.பி ஏற்படுத்தியுள்ள கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்துக்கு  மத்திய அரசு என்னவெல்லாம் செய்துள்ளது என்பதைத் தேர்தல் யுக்தியாக முன்வைத்து பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பாக, வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து பிரதமர் பேசுகிறார். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் `கூட்டணி கட்சித் தலைவர்களை நாங்கள் மிரட்டி, எங்கள் கூட்டணியில் இணைய வைத்திருப்பதாகப் பேசி வருகிறார். எங்களைக் குறைசொல்வதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார் அவர். தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறும் ஸ்டாலினுக்கு திரும்பத் திரும்ப என்னுடைய சவாலான பதில் என்னவென்றால், இதுவரை தமிழகத்துக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்துள்ளோம். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக அரசு எந்த அளவுக்குப் பயனடைந்துள்ளது என்பதை என்னால் சொல்ல முடியும். குறிப்பாக, முத்ரா வங்கித் திட்டத்தைச் சொல்லலாம். 1.9 கோடி பேர் இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். இலவச எரிவாயுத் திட்டத்தில் 40 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என மேலும் பல திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். நாங்கள் திட்டங்களைப் பட்டியலிடுகிறோம். எதிரணியினர் எங்களைத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கிற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுக்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களைப் புரிந்துகொண்டு வாக்காளர்கள் எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, நாற்பதும் நமதே நாளையும் நமதே.’’

``எதை முன்னிறுத்தி பி.ஜே.பி-யின் பிரசாரம் இருக்கும்?’’ 

``திட்டங்களை முன்னிறுத்தியே எங்களின் பிரசாரம் இருக்கும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே தோல்வியடைந்த கூட்டணி. 10 வருடங்களாக அவர்கள் கூட்டணியில்தான் உள்ளனர். தமிழகத்துக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது அவர்கள், காவிரிப் பிரச்னையைத் தீர்த்தார்களா, முல்லைப் பெரியார் பிரச்னையைத் தீர்த்து வைத்தார்களா. காங்கிரஸ் அரசின் தோல்வியையும் எங்களின் வளர்ச்சித் திட்டங்களையும் எடுத்துரைத்து மக்களிடம் வாக்குக் கேட்போம்.’’

``தேர்தல் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறதே பிரதமர் மோடி நிறைவேற்ற உள்ள திட்டங்கள்தான் அதற்குக் காரணம் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?’’

எமர்ஜென்சியைக் காரணம்காட்டி ஒருகாலத்தில் தேர்தலை ஒத்திவைத்தது காங்கிரஸ் கட்சிதான். தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. தற்போது இந்தியா பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதனால், தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். ஆனால், உரிய கால அவகாசத்தை அது தாண்டாது. தகுதியான நேரத்தில் தேர்தல் பற்றி உறுதியாக  அறிவிப்பார்கள்.’’

``தூத்துக்குடியில் நீங்கள் நிற்கப்போவதாகச் சொல்லப்படுகிறதே, தி.மு.க சார்பில் கனிமொழியும் அந்தத் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகிறதே?’’

``நான்  எங்கு போட்டியிட வேண்டும் என்பதை எங்களுடைய கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். கட்சி முடிவு செய்வதை ஏற்று செயல்படுவேன். யூகத்தின் அடிப்படையிலான தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடி தொகுதியை நாங்கள் கேட்டிருக்கிறோம். கட்சி மேலிடம் எந்தத் தொகுதியில் யாரை நிறுத்துகிறதோ அதற்கேற்ப செயல்படுவோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியைத் தேர்ந்தேடுத்திருக்கலாம். அதுபற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

 ``தே.மு.தி.க-வின் நிலைப்பாடு என்ன... பி.ஜே.பி இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு வருகிறதா, இன்னும் இழுபறி ஏன் ?’’ 

``தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில் பேசும்போதே, பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சுதீஷ், ஆரம்பத்தில் கூறியிருந்தார். எங்களுக்கும் தே.மு.தி.க-வுடன் நல்ல உறவு இருக்கிறது. எனவே, எங்களுடன் தே.மு.தி.க வரும் என்று நம்புகிறோம். அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படலாம். அதனால் ஏற்படும் தாமதத்தை நாம் இழுபறி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.’’