பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இது வெறுமனே வீடு அல்ல!

இது வெறுமனே வீடு அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
இது வெறுமனே வீடு அல்ல!

இது வெறுமனே வீடு அல்ல!

மிழக அரசியலில் நேர்மை என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் - கக்கன். இன்றைய தலைமுறை கக்கனை மறந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழக அரசோ கக்கனின் குடும்பத்துக்கு அநீதி இழைத்திருக்கிறது.

இது வெறுமனே வீடு அல்ல!

சென்னை சி.ஐ.டி நகர் மறுசீரமைப்புத் திட்டத்துக்காக, வீட்டுவசதித்துறை அங்கே குடியமர்த்தியவர்களை காலி செய்கிறது சென்னை மாநகராட்சி. இதற்கான நீதிமன்ற அனுமதியையும் பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாழ்ந்துவந்த வீட்டையும் இடிக்கத் தொடங்கி விட்டார்கள். எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் நல்லகண்ணுவுக்குச் செய்யாமல், உடனடியாக வீட்டை காலி செய்ய வைத்திருக்கிறார்கள். ‘எனக்கு எதுவும் செய்ய வில்லை என்றாலும், கக்கன் குடும்பத்துக்காவது முறையாக மாற்று ஏற்பாடு செய்யுங்கள்’ என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வேறு வீடு தேடிச் சென்றார் நல்லகண்ணு. ஆனால், கக்கன் வாழ்ந்து மறைந்த வீடு இப்போது இடிக்கப்பட உள்ளது. அவர் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசினேன்.

“அப்பாவோடு ஊட்டியில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, நினைவுப்பரிசாக பைனாகுலர் கொடுத்தார்கள். கிரிக்கெட் மேட்ச் பார்க்க அதை எடுத்துச் சென்றபோதுதான், பைனாகுலர் குறித்து அப்பா விசாரித்தார். ‘அமைச்சருக்கு நினைவுப்பரிசு கொடுக்கலாம், அமைச்சர் மகனுக்கெல்லாம் நினைவுப்பரிசு கொடுக்கக் கூடாது’ என்று  அந்த பைனாகுலரை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்க உத்தரவிட்டார்.  இதுதான் அப்பா. தன்னுடைய இறப்பு வரையிலும் இதே நேர்மையோடு வாழ்ந்து மறைந்தவர். அவர் பெயருக்கு எங்களால் எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது. அதனால்தான் பலரும் வற்புறுத்தியும், எங்கள் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரவில்லை’’ என்று கக்கன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், அவர் மகன் சத்தியநாதன்.

இது வெறுமனே வீடு அல்ல!

விடுதலைப்போராட்ட வீரராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கக்கன், இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் என்று எத்தனையோ பதவிகள் வகித்தி ருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இவர் பணியாற்றிய போதுதான் வைகை அணை, சாத்தனூர் அணை, மணிமுத்தாறு அணை எனத் தமிழகத்தின் முக்கியமான அணைகள் கட்டப்பட்டன.

1967 சட்டமன்றத் தேர்தலில்  தோல்வியடைந்த கக்கன், அதன்பிறகு தேர்தலில் போட்டியிடவில்லை. பிறகு, 1972 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர், 1973-ல் முழுநேர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு குடும்பத்துடன் தன்னுடைய இறுதிக்காலத்தைச் செலவிட்டார். கக்கனுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அவர்களில் இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். மூத்தவர் பாக்கியநாதன். அடுத்து கஸ்தூரி பாய், சத்தியநாதன். அடுத்து நடராஜ மூர்த்தி. கக்கன் வாழ்ந்தவீட்டில், இப்போது சத்தியநாதன் வசித்துவருகிறார்.

இது வெறுமனே வீடு அல்ல!

‘`தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 1971-ல்  தி.மு.க ஆட்சியில் கக்கனுக்குச் சென்னை சி.ஐ.டி நகரில் வீடு ஒதுக்கப்பட்டது. வாடகை கொடுத்தே அதில் குடியிருந்தார் கக்கன். அடுத்துவந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சொந்த வீடு கக்கனுக்குக் கொடுக்கப்பட்டது. நோயுற்றிருந்த காலகட்டத்திலும் இந்த வீட்டில் தான் வசித்துவந்தார்.  காமராஜர் இந்த வீட்டுக்கு வந்து அப்பாவுடன் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார். இந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இருவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர்’’ என்று வீட்டின் நினைவுகளோடு மேலும் பேசினார்.

“காமராஜர் மட்டுமல்ல, ஜெகஜீவன்ராம், ஜோதி வெங்கடாசலம் என முக்கியத் தலைவர்கள் அப்பாவைப் பார்க்க அடிக்கடி இங்கு வருவார்கள். அப்பா நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அப்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார். மதுரையிலிருந்தபோது அப்பாவுக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவம் படித்துவந்த நான், அப்பாவுக்காகப் படிப்பைப் பாதியில் விட்டேன். ஒன்பது வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் படிப்பைத் தொடர்ந்தேன்.

மதுரை  ராஜாஜி மருத்துவமனையில் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கான சலுகையில், அப்பாவுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வந்துபார்த்து, ‘ஏ’ வார்டுக்கு மாற்றினார். முறையான மருத்துவ வசதி கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். மறுநாளும் வந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்தார். அப்போது எம்.ஜி.ஆர் கொடுத்த எந்த உதவியையும் மறுத்துவிட்டார் அப்பா. எம்.ஜி.ஆர் அங்கிருந்து கிளம்பும்போது, என் சித்தப்பாவை அழைத்த அப்பா ‘எம்.ஜி.ஆரிடம் நம் குடும்பத்து ஆட்கள் யாரும் எந்த உதவியும் பெறாமல் பார்த்துக்கொள்’ என்றார். படுத்தபடுக்கையிலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார். அப்பா இறந்தபோது, இதே வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர், இதைச் சொல்லித்தான் கண்ணீர் வடித்தார்.

பொதுவாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதால் குடும்பத்துக்கும் அவருக்குமான நெருக்கம் குறைந்தது. நானும் அப்பாவும் பேசியதைத் தொகுத்தால், ஒரு குயர் நோட்டில் பாதிகூட வராது. ஆனால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதும், எங்களோடு நேரம் செலவிட நினைத்தார்” என்று கக்கன் குறித்த நினைவுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார் சத்தியநாதன்.

இது வெறுமனே வீடு அல்ல!

2015 சென்னை வெள்ளத்தின்போது, கக்கன் வாழ்ந்த வீடு  வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த அவருடைய பெரும்பாலான புகைப்படங்களும் புத்தகங்களும் நீரோடு போயின. இப்போது நான்கைந்து புகைப்படங்கள் மட்டுமே அவர் வாழ்ந்த வீட்டில் எஞ்சியுள்ளன. கக்கனின் மூத்தமகன் பாக்கியநாதனும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார். கடைசி மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சத்தியநாதன் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவரின் ஓய்வூதியத்தில்தான் இவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். இப்போது, கக்கன் வாழ்ந்து மறைந்த வீடு இடிக்கப்படவுள்ளது. ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் வீட்டை இடிப்பதாகவும், நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்துக்கு  வீடு வழங்கப்படும்’ என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுவரை சட்டப்படி எந்த உத்தரவும் இவர்களுக்கு வரவில்லை.

“இந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வாய்மொழித்தகவல் வந்தது. இங்கு வசிக்கும் பலரும் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், பலனில்லை. இந்நிலையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து வீட்டின் நிலை குறித்து எடுத்துக் கூறினேன். தேர்தல் முடிந்ததும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அப்பாவுக்காக 2001-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மதுரை மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டினார்கள். மதுரையில் சிலை வைத்திருக்கிறார்கள். இந்த வீட்டை இடிப்பதற்குப் பதில், நினைவில்லமாக மாற்றலாம். வரும் தலைமுறை, கக்கன் என்ற அரசியல் தலைவர் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டுப் பாடப்புத்தகத்தில் கக்கன் குறித்துப் பாடங்கள் வர வேண்டும். இதைத்தான் நாங்கள் அரசுக்குக் கோரிக்கையாக வைக்கிறோம்’’ என்று உணர்ச்சிமேலிடப் பேசிமுடித்தார் சத்தியநாதன்.

கக்கன் குடும்பத்தினர் கேட்பது சலுகையல்ல, உரிமை. அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. கட்சிகளைத் தாண்டி, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு இது.