Published:Updated:

`தென் சென்னை தொகுதி யாருக்கு?’ - முட்டி மோதும்  அ.தி.மு.க - பா.ஜ.க!

`தென் சென்னை தொகுதி யாருக்கு?’ - முட்டி மோதும்  அ.தி.மு.க - பா.ஜ.க!
`தென் சென்னை தொகுதி யாருக்கு?’ - முட்டி மோதும்  அ.தி.மு.க - பா.ஜ.க!

தென் சென்னைத் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட அ.தி.மு.க - பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் முட்டி மோதுவதால், கூட்டணிக்குள் பட்டாசு வெடிக்கிறது.

தென் சென்னை எம்.பி-யாக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் இருக்கிறார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் அளித்துள்ளார். இந்நிலையில், தென் சென்னையைக் குறிவைத்து டெல்லி வரை பா.ஜ.க தலைவர்கள் 'லாபி' செய்கின்றனர். இத்தொகுதியில் பிராமணர்கள் வாக்குகளும், நடுத்தர குடும்பத்தினரின் வாக்குகளும் கணிசமாக உள்ளதால், இத்தொகுதியை பா.ஜ.க விடாப்பிடியாகக் கேட்கிறது. 

தென் சென்னை தொகுதிக்காக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனுக்கும் இடையே கட்சிக்குள் ஒரு யுத்தமே நடைபெறுகிறதாம். தங்கள் செல்வாக்கு மூலமாக அமித்ஷா, பிரதமர் மோடி வரை காய்நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் போட்டியிட தமிழிசை சற்றும் விரும்பவில்லை என அவரது கட்சியினரே கூறுகிறார்கள். கட்சிக்குள் தமிழிசைக்கு எதிரானவர்களும், எடப்பாடி பழனிசாமியும் தூத்துக்குடியில் தமிழிசையைப் போட்டியிட வைத்துப் பலிகடா ஆக்கப் பார்ப்பதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அ.தி.மு.க-வும் முரண்டுபிடிப்பதால், வேறு வழியின்றி அரைமனதோடு சில நிர்வாகிகள் கூட்டங்களை தூத்துக்குடியில் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தென் சென்னைத் தொகுதியில், கடந்த 8 மாதங்களாக கட்சிப் பணி, மக்கள் சந்திப்புப் பணிகளை முடித்துள்ளதால், அத்தொகுதியை தமிழிசை பெரிதும் எதிர்பார்க்கிறாராம்.

ஜெயக்குமாரின் சொந்த ஊரான ராயபுரம் வடசென்னைத் தொகுதியில் வருவதால், அதை எடுத்துக்கொள்ளுமாறு பா.ஜ.க கேட்டுள்ளது. ஏற்கெனவே, வட சென்னையில் மதுசூதனன், ராஜேஷ், வெற்றிவேல் என தனக்கு எதிரிகள் அதிகம் என்பதால், மகனைக் கவிழ்த்துவிடுவார்கள் என அஞ்சி பா.ஜ.க-வின் யோசனையை ஜெயக்குமார் நிராகரித்துவிட்டாராம். ஜெயவர்தனுக்கு தென் சென்னைத் தொகுதியை அ.தி.மு.க தலைமை உறுதியளித்துள்ளதால் தெம்பாக இருக்கிறாராம்.

''தென் சென்னைத் தொகுதி பா.ஜ.க-வுக்குதான். எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷாவையே நேரடியாகப் பேசவைக்கிறோம் பாருங்கள்!'' என கர்ஜிக்கிறதாம் தமிழக பா.ஜ.க. யார் ஜெயிக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.