Published:Updated:

` 4 தொகுதிகளைவிட 18 தான் முக்கியம்!’ - என்ன நடந்தது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?

`தே.மு.தி.க-வை வெளியில் விட்டு ஒன்றும் இல்லாமல் செய்வதைவிட, உள்ளுக்குள் இருக்க வைப்பதில் லாபம் இருக்கிறது’ எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

` 4 தொகுதிகளைவிட 18 தான் முக்கியம்!’ - என்ன நடந்தது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?
` 4 தொகுதிகளைவிட 18 தான் முக்கியம்!’ - என்ன நடந்தது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?

அ.தி.மு.க கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தே.மு.தி.க இணைந்துவிட்டது. `4 தொகுதிகளுக்குள் தே.மு.தி.க-வை அடைத்ததில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லை. 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு அவர்கள் தேவை என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ம.க, பா.ஜ.க, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில், பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளோடு சேர்த்து ஒரு மாநிலங்களவையும் பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தே.மு.தி.க-வோடு அ.தி.மு.க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும், உடன்பாட்டை எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது. `4 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவது கடினம்’ என அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டாலும், `பா.ம.க-வுக்கு இணையாகத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும்’ என தே.மு.தி.க தரப்பில் சொல்லப்பட்டது.

ஒருகட்டத்தில், `அ.தி.மு.க-வின் பிடிவாதத்தைத் தளர்த்த முடியாது’ என நினைத்த தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் அனகை முருகேசனும் இளங்கோவனும் தி.மு.க பொருளாளர் துரைமுருகனை சந்தித்துப் பேசினர். இந்த மறைமுக சந்திப்பு விவரங்கள் தே.மு.தி.க மீதான இமேஜை சீர்குலைத்ததால், தி.மு.க மீது கடுமையான கோபத்தில் இருந்தார் பிரேமலதா. இந்தக் கோபத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிக்காட்டினார். இந்தநிலையில், நேற்று சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் வைத்து அ.தி.மு.க-வோடு தொகுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது தே.மு.தி.க. `4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது’ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, `எண்ணிக்கை முக்கியம் அல்ல, எண்ணம்தான் முக்கியம்’ என சிரித்தபடியே பதில் அளித்தார் பிரேமலதா. 

ஒரேநேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க-வோடு பேச்சுவார்த்தை, தொகுதி இழுபறி, பேச்சுவார்த்தை விவரங்கள் கசிந்தது போன்றவற்றால், தே.மு.தி.க-வுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதை உணர்ந்திருந்தாலும், `இந்தக் கூட்டணிக்குள் விஜயகாந்த் வர வேண்டும்’ என்பதில் டெல்லி பா.ஜ.க உறுதியாக இருந்தது. `கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து கூடுதலாக, தே.மு.தி.க-வுக்கு ஒதுக்க முடியுமா?’ என்றும் ஆலோசித்தார்கள். `பா.ம.க-வுக்கு இணையாக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்பதில் பிரேமலதாவும் சுதீஷும் உறுதியாக இருந்தனர். இதனால் கொங்கு மண்டல அமைச்சர்கள் கடும் கோபமடைந்தனர். `எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதை அறியாமல் தே.மு.தி.க பேசுகிறது. 4 இடங்களுக்கு மேல் ஒதுக்குவது கடினம்’ எனக் கறார் காட்டினர். 

``தி.மு.க கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு குறுகியகால இடைவெளியே இருந்ததால், அ.தி.மு.க-வின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதைத் தவிர, பிரேமலதாவுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. நேற்றைய கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் அவரிடம் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை’’ என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``எடப்பாடி பழனிசாமியிடம் தொடக்கத்திலேயே பேசி தங்களுக்கான இடங்களை வாங்கிக்கொண்டது பா.ம.க. அதேநேரம், `நாங்கள் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க-வுடன் பேசி வருகிறோம்’ எனப் பேட்டி கொடுத்தார் சுதீஷ். இந்தப் பேட்டியை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. `தே.மு.தி.க வந்தால் வரட்டும்’ என்ற மனநிலைக்கு அமைச்சர்களும் வந்துவிட்டனர். இருப்பினும், `விஜயகாந்த்தும் இந்த மெகா அணியில் இருக்கட்டும்’ என நினைத்தார் முதல்வர். இதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன. தொகுதிகளை ஒதுக்காமல் அவர்களைத் தனித்துப் போட்டியிட வைத்துவிட்டால், தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-வை மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள். 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அணியில் தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் இருந்தன. அந்தத் தேர்தலில் வன்னியர் வாக்குகள் எதுவும் தே.மு.தி.க-வுக்குச் சென்று சேரவில்லை. அந்தக் கோபம் இப்போதும் தே.மு.தி.க-வுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தே.மு.தி.க ஓட்டுக்களும் பா.ம.க-வுக்கு வருமா என்பது நிச்சயம் இல்லை. இது பொருந்தாக் கூட்டணியாகக் கொஞ்சம் சிரமத்தைக் கொடுக்கத்தான் செய்யும். ஆனால், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக தே.மு.தி.க நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். அந்தக் கட்சியின் சார்பில் 3 சதவிகித வாக்குகள் நமக்கு வந்து சேரும். அதற்காகத்தான் விஜயகாந்த் நமக்குத் தேவைப்படுகிறார். நம்மிடம் இருந்து விஜயகாந்த் பிரித்த வாக்குகளும் வந்து சேரும். தன்னுடைய தலைமைக்கு அது ஒரு லாபமாக இருக்கும் என முதல்வர் நினைக்கிறார்.

இதற்கு அடிப்படைக் காரணமாக, கடந்தகால நிகழ்வுகளையும் அவர் கணக்குப் போடுகிறார். 2006 முதல் 2011 வரையில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், தே.மு.தி.க-தான். 2006 தேர்தலில் அ.தி.மு.க தோற்றதற்கு அவர்தான் காரணம். தொடர்ந்து, 2009 மக்களவைத் தேர்தலில் தோல்வி, இடைத்தேர்தல்களில் தோல்வி என சிரமங்களைக் கொடுத்தார். மீண்டும் அவர் அ.தி.மு.க-வோடு 2011-ல் கூட்டணி வைத்த பிறகுதான் ஜெயித்தோம். இப்போது பா.ம.க-வைவிட குறைவாக சீட் பெற்றுள்ளனர். தே.மு.தி.க-வை வெளியில் விட்டு ஒன்றும் இல்லாமல் செய்வதைவிட, உள்ளுக்குள் இருக்க வைப்பதில் லாபம் இருக்கிறது எனக் கணக்குப் போடுகிறார் முதல்வர்’’ என்றார் நிதானமாக. 

`பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைவிட தே.மு.தி.க-வின் அந்த 4 தொகுதிகளும் அவர்களுக்கு வீக்காகத்தான் இருக்கும். கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் உள்ளன. `தே.மு.தி.க-வோடு ராசியாகச் செல்லுமாறு பா.ம.க-விடம் சமாதானம் பேசுவோம். இல்லாவிட்டால், விட்டுவிடுவோம் என அ.தி.மு.க தலைமையில் உள்ளவர்கள் பேசி வருகின்றனர்.