Published:Updated:

`உதயசூரியனா... தனிச் சின்னமா...'- என்ன முடிவெடுக்கப்போகிறது வி.சி.க?

`உதயசூரியனா... தனிச் சின்னமா...'- என்ன முடிவெடுக்கப்போகிறது வி.சி.க?
`உதயசூரியனா... தனிச் சின்னமா...'- என்ன முடிவெடுக்கப்போகிறது வி.சி.க?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் தீவிரம்காட்டிவருகிறது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. ஆனால், எந்தெந்தக் கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பதில் இன்னும் இழுபறி நீடித்துவருகிறது. அதேநேரம், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் தரப்பு விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை எதிர்பார்த்தது. அந்த இரண்டு தொகுதிகளையும் வழங்க தி.மு.க தரப்பு சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே தி.மு.க வலியுறுத்திவந்தது.

ஆனால், திருமாவளவன் அதற்கு முதலில் பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருமாவைத் தொடர்புகொண்ட தி.மு.க மேலிடம், உதயசூரியன் சின்னத்தில் நின்றால் மட்டுமே உங்களுக்கு வேண்டிய தொகுதியும், வேண்டிய தொகையும் எங்களால் வழங்கப்படும். இல்லை என்றால், நாங்கள் கொடுக்கும் தொகுதியில் நீங்கள் நின்றுகொள்ளுங்கள். செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கறாராகச் சொல்லியுள்ளார்கள். இதனால் திருமா மிகவும் அப்செட்டாகிவிட்டார். ``கூட்டணி ஒப்பந்தம் முடிந்த பிறகு, தோழமைக் கட்சிகளை அடிமைக் கட்சிபோன்று நடத்துகிறார்கள். நம்மால் உடனே எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலையில் இப்போது இருக்கிறோம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள், `இப்போது வேறு வழியில்லை. உதயசூரியனில் நிற்பதை ஒப்புக்கொள்ளுவோம்' என்று சொல்லியுள்ளார்கள். இன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில், தி.மு.க-வின் நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தி.மு.க தரப்பிலோ, “தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர், விடுதலைச் சிறுத்தைகள் நம்முடைய கூட்டணிக்கு வருவதால் பிற சமூக ஓட்டுகள் பிரியும் வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை உதயசூரியனில் நிற்கச் சொல்லுங்கள் என தி.மு.க தரப்பில்  தலைமையிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.