Published:Updated:

அமெரிக்க பாணியில் பிரசார உத்திகளை முடிவுசெய்யும் `பிராண்டிங்’ நிறுவனங்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது தேர்தல் உத்தியில், `அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே’ என்று பிரசாரத்தை முன்வைத்து அதிபரானார். அதே போன்ற உத்தியை பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க பாணியில் பிரசார உத்திகளை முடிவுசெய்யும் `பிராண்டிங்’ நிறுவனங்கள்!
அமெரிக்க பாணியில் பிரசார உத்திகளை முடிவுசெய்யும் `பிராண்டிங்’ நிறுவனங்கள்!

ஜெயலலிதா, கருணாநிதி இறப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் தகுந்த லீடர்ஷிப் இல்லாமல் அரசியல் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பது பலரின் ஆதங்கம். அரசியலில் மாஸ் லீடர்களை உருவாக்குவதற்காகவே கார்ப்பரேட் நிறுவனங்களும் லீடர்ஷிப் நிறுவனங்களும் பலவித உத்திகளைச் செயல்படுத்திவருகின்றன. இவை, தேர்தலில் பிரசார உத்திகளை வகுப்பதிலும், வெகுஜன மக்களிடையே தலைவர்களைக் கொண்டுசெல்வதிலும் கில்லிகள்.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், தேர்தல் பிரசார வேலைகளில் மும்முரம் காட்டிவருகின்றன கட்சியின் கார்ப்பரேட் நிறுவனங்கள். தமிழகத்தின் ஒவ்வொரு கட்சியினருக்கும் சேனல்கள் இருப்பதைப்போலவே, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் எனப் பிரசார உத்திகளை வகுப்பதில் சுழன்றுகொண்டிருக்கின்றன கட்சியின் ஐ.டி விங்ஸ். கட்சிக்கும் ஐ.டி பிரிவுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன, தேர்தல் உத்திகளை வகுக்கும் பிராண்டிங் நிறுவனங்கள்.

வட இந்தியாவில் பிரசாந்த் கிஷோர் பெயர் மிகவும் பிரபலம். தேர்தலில் பிரசார உத்திகளை வகுப்பதில் பெயர்பெற்றவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துக்கொடுத்தது கிஷோர் டீம். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கிஷோரின் டீம்தான் வேலை செய்கிறது. இவரது குழுவில் இடம்பெற்றிருந்த சுனில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் இணைந்து தி.மு.க-வின் தேர்தல் உத்திகளை வகுக்கும் ஓ.எம்.ஜி டீமின் முக்கியப் பிரதிநிதி. கடந்த நான்கு மாதங்களாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது இந்தக் குழுவின்  ஐடியாவே. 

2016-ம் ஆண்டு வரை அ.இ.அ.தி.மு.க-வில் `ஆஸ்பையர்’ சுவாமிநாதன் என்பவரே தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மொபைல் ஆடியோ பேசியதும், அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியதும் இவரது ஐடியா. இவருக்குப் பிறகு ஐ.ஐ.எம்-ல் படித்த ராமச்சந்திரனை தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக நியமிக்க, இவர் ஓ.பி.எஸ் ஆர்மி, ஈ.பி.எஸ் ஆர்மி என இரண்டு படைகளை ட்விட்டரில் வைத்திருக்கிறார். தமிழ்நாடு செய்தி விளம்பரத் துறையின் இயக்குநர் சங்கரும், கூடுதல் இயக்குநராக உள்ள எழிலழகனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பீரங்கிகளாக உள்ளனர். இவர்களது யோசனையிலேயே சாதாரண கடையில் டீ குடிப்பதும், வயல்வெளியில் விவசாயிகளைச் சந்திப்பதுமாக எடப்பாடி பழனிசாமி எளிமையானவர் என்ற தோற்றத்தை முன்னிறுத்தியுள்ளனர். 

பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று தமிழகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தி பிரசாரத்தை முன்னிறுத்தியது. தேசிய சுகாதாரத் திட்டம் 108 ஆம்புலன்ஸ், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை என மத்திய அமைச்சராக இருந்து இந்திய அளவில் அசத்திய அன்புமணியின் பிரசாரத்தை, மக்களிடத்தில் கொண்டு சென்று அவரது பெயரை தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரசித்திபெறச் செய்த  குழுவில் அரசியல் ஆலோசகராகப் பணிபுரிந்தவர் `ஜேபிஜி ஸ்டார்ட்டஜிஸ்ட்’ நிறுவனத்தின் ஜான் ஆரோக்கியசாமி. இவரது குழுவே அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கி பெங்களூரு நகரப் பகுதியில் அதிக இடங்களில் வெற்றிபெற உதவியிருக்கிறது. 

லீடர்ஷிப் நிறுவனங்களே அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் பிராண்டிங், மார்க்கெட்டிங் என, புதுவிதமான உத்திகளையும் தீர்மானிக்கின்றன. போஸ்டர் டிசைனிங், பிரசாரப் பேச்சு, ஊடகச் சந்திப்பு, பொதுக்கூட்டம் போன்றவற்றை முடிவுசெய்வதோடு `நமக்கு நாமே’, `மாற்றம் முன்னேற்றம்’ போன்ற பிராண்டிங் விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி தலைவர்களை முன்னிறுத்தும் பணியைச் செய்கின்றன.

பொதுவாக, பி.ஜே.பி-க்கு ரிலையன்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவுவதாகச் சொல்லப்பட்டாலும், வெளியே அவை தெரிவதில்லை. பாரதிய ஜனதாவின் ஐ.டி பிரிவே பிரசாரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தப் பிரிவினரே நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி என்று இரண்டு விஷயங்களை முன்வைத்து, `மீண்டும் மோடி ஆட்சி’ என்று பிரசாரக் கோஷத்தை முன்வைத்து தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரி செயல்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தால் யார் பயனடைந்தார்கள் என்பது குறித்தும், தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்க உள்ளனர்.  ராகுல் அடுத்த பிரதமர் என்பது இவர்களது பிரசார கோஷமாக உள்ளது.

``அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளிலும் நிறை குறைகள் உள்ளன. அரசியலில் உண்மையான தலைவர்களைக் கட்டமைக்கவோ, உருவாக்கவோ முடியாது. தலைவர்களின் பிம்பங்களைச் செதுக்கி மேம்படுத்த முடியும். மக்கள்நலன் சார்ந்த கொள்கைகளை முன்னெடுப்பதிலும், விமர்சனங்களைக் கடந்து தேர்தல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, தலைமுறையைக் காக்கும் திட்டங்களை வகுப்பதிலும்தான் நல்ல தலைவர்களாக அடையாளம் காண முடியும். நாங்கள், தலைவர்கள் மற்றும் கட்சிகளின் அணுகுமுறைகளை மேம்படுத்துவதிலும், தேர்தலில் தாக்கத்தையும் வெற்றியையும் தீர்மானிக்கும் `பப்ளிக் பர்செப்ஷன்’ என்றழைக்கப்படும் மக்கள் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம்’’ என்றார் ஜான் ஆரோக்கியசாமி. 

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் அமெரிக்காவின் உத்தியைக் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். கடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய `மாற்றத்தை நோக்கி அமெரிக்கா’ என்று வாசகத்தை இங்குள்ள கட்சிகளும் பயன்படுத்திப் பார்த்தன. தற்போது காங்கிரஸ் கட்சி `மாற்றம் வேண்டும்’ என்று பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் உத்தியில், `அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே’ என்று பிரசாரத்தை முன்வைத்து அதிபரானார். அதேபோன்ற உத்தியை பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கவும் திட்டமிட்டு உள்ளன. பி.ஜே.பி ஆட்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பயன்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்கிறது. `கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு நிறுவனங்களின் மூலம் ஐந்து கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்’ என்பது பி.ஜே.பி-யின் வாதம். `ஊரக வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவோம்’ என்பது காங்கிரஸ் தேர்தல் பிரசாரம். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் பிரசார உத்தி இந்தியாவில் எடுபடுமா என்பது, மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.