Published:Updated:

‘‘இரட்டை இலை சின்னத்தை முடக்க உதவியவர்!’’ - ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகக் வேலூர் கலகம்

ஏ.சி.சண்முகம் தேர்தலை எதிர்கொள்வது, சவாலாகத்தான் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

‘‘இரட்டை இலை சின்னத்தை முடக்க உதவியவர்!’’ - ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகக் வேலூர் கலகம்
‘‘இரட்டை இலை சின்னத்தை முடக்க உதவியவர்!’’ - ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகக் வேலூர் கலகம்

‘‘எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இரட்டை இலைச் சின்னத்தை முடக்க உதவிசெய்தவர் ஏ.சி.சண்முகம். வேலூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் அவர் போட்டியிட்டால், நாங்கள் எப்படிப் பிரசாரம் செய்வோம்’’ என்று எம்.ஜி.ஆர் பற்றாளர்கள் கொந்தளித்துள்ளதால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில், பி.ஜே.பி கூட்டணியில் களம் கண்ட ஏ.சி.சண்முகம், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். அதனால், இந்த முறை இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற வியூகம் அமைத்திருப்பதாக, அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். கதிர் ஆனந்திடம், துரைமுருகன் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணல் நடத்தினர். மகனை எப்படியாவது எம்.பி-யாக்கி விட வேண்டும் என்பதற்காக துரைமுருகன், கடந்த ஒரு மாதமாக வேலூர் தொகுதியில் உள்ள சிறுபான்மை சமூக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களை வீடு தேடிச் சென்று ஆதரவு திரட்டினார்.

ஏ.சி.சண்முகம் மற்றும் துரைமுருகனின் மகன் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், கல்வி நிறுவனங்களை நடத்துவதுதான். மற்றபடி, வாக்காளர்களைக் கவரக்கூடிய தனித்துவமான தகுதிகள் ஏதுமில்லை என்றே சொல்லப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில், மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும்போது, துரைமுருகன் மகனுக்கு வாய்ப்பு தருவது எந்த வகையில் ஏற்க முடியும் என்று தி.மு.க-வில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வாரிசு அரசியலுக்காக, கட்சிக்காக உழைத்தவர்களை ஓரம்கட்டுவது நியாயமா என்றும் உடன்பிறப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறார்கள்.

தி.மு.க-வின் நிலைமை இப்படி இருக்க, அ.தி.மு.க கூட்டணிக்குள் ஏ.சி.சண்முகத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ``எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இரட்டை இலைச் சின்னத்தை முடக்க உதவியவர் ஏ.சி.சண்முகம். இப்போது, அதே சின்னத்தில் நின்றால் வெற்றிபெற்று விடலாம் என்று மனக் கணக்குப் போடுகிறார். அவரை, வேலூரில் ஜெயிக்கவிடலாமா’’ என்று எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து, அ.தி.மு.க-வில் உள்ள பழுத்த நிர்வாகிகள், கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும், ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஏ.சி.சண்முகம், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வேலூர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள தன் சொந்த சமூக வாக்குகளை நம்பியே களமிறங்குகிறார். ஆனால், ``சமூகத்துக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை, செய்யப்போவதும் இல்லை’’ என்று முதலியார் சமூகப் பிரதிநிதிகளும் கொந்தளிக்கிறார்கள். கடந்த தேர்தலில், ஏ.சி.சண்முகத்தைத் தோற்கடிப்பதற்காக, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.சி.வீரமணி வேலை பார்த்தார். இந்த முறை, அமைச்சரின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், அமைச்சர் வீரமணியை மரியாதை நிமித்தமாகக்கூட, ஏ.சி.சண்முகம் இன்னும் சந்திக்கவில்லை என்று கடுகடுக்கிறார்கள் அமைச்சரின் தரப்பில்.

கூட்டணியில் பி.ஜே.பி. இருப்பதால், சிறுபான்மை வாக்குகள் சிதறும் என்று தெரிகிறது. அதைச் சரிகட்ட, இம்மாவட்டத்தைச் சேர்ந்த மற்றோர் அமைச்சரான நிலோஃபர் கபிலிடமும், ஏ.சி.சண்முகம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், வாணியம்பாடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ஹெச்.ராஜாவைக் கண்டித்து நிலோஃபர் கபில் பேசினார். இதனால், அ.தி.மு.க-வில் உள்ள சிறுபான்மையினருக்கும், பி.ஜே.பி-யினருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உளவுப் படை மூலம், வேலூர் தொகுதியை அலசிவரும் ஏ.சி.சண்முகம், ஆரணி தொகுதி மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார். ஆனால், ஆரணி தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவதால், சற்றுத் தடுமாற்றத்தில் இருக்கிறார்.