Published:Updated:

`பீகாரில் இக்கட்டான நிலையிலும் தேர்தலை நடத்தினேன்!'- மதுரை கலெக்டர்

`பீகாரில் இக்கட்டான நிலையிலும் தேர்தலை நடத்தினேன்!'- மதுரை கலெக்டர்
`பீகாரில் இக்கட்டான நிலையிலும் தேர்தலை நடத்தினேன்!'- மதுரை கலெக்டர்

``சித்திரை திருவிழா சமயத்தில் மதுரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தலாம்; பிரச்னைகள் ஏற்படாது'' என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டம் நடைபெற உள்ளது. அதேசமயம் அன்று நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. எனவே, அதற்கான பணிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அன்று ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். அனைத்துக் கட்சிகள் சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு கருத்துகளை அனுப்பியுள்ளோம்.

தேர்தல் ஆணையத்திடம் சித்திரை திருவிழா உள்ளூர் விடுமுறை தொடர்பாகவும் தகவல் அளித்துள்ளோம். திருவிழா சமயத்தில் தேர்தல் வருவதால் சிறப்பு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவும் மற்றும் தேர்தல் பணிக்கு மாநகராட்சிப் பணியாளர்களைக் கேட்டுள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கலாம் என்பது குறித்து விளக்கம் கொண்டுள்ளோம். தேர்தல் ஆணையம் அளிக்கும் ஆலோசனைகளைப் பொறுத்து தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் நடைபெறும். நான் பீகாரில் இருந்தபோது இக்கட்டான நிலையில் தேர்தலை நடத்திய அனுபவம் உள்ளது என்பதால் தேர்தல் நடத்த சாத்தியம் உள்ளது'' என்றார்.

திருவிழா சமயத்தில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பார்த்தசாரதி மனு அளிக்க உள்ளார்.