Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

@சேகர், ஈரோடு.
தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்குப் பின் தி.மு.க-வுடன் ம.தி.மு.க இணைய வாய்ப்பு உள்ளதா?


ஓ... இன்னும் இணையவில்லையா?

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.
அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது பி.ஜே.பி. அதன் தவறுகளை வாதத்திறமை மற்றும் அனுபவ அறிவால் உறுதியாகச் சுட்டிக்காட்டி, குட்டக்கூடியவர் யாராவது எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ளனரா?


ஏ.கே.கோபாலன், சோம்நாத் சாட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய் என்று நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்டவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இப்போது, தேடினாலும் அப்படிப்பட்டவர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்த 17-வது லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் ஃபரூக் அப்துல்லா, சசிதரூர், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள்தான் உள்ளனர். இவர்களில் பலரும் வாயைத் திறந்தாலே பி.ஜே.பி ‘தெறிக்க’விட்டுவிடும் என்பதுதான் நிதர்சனம்!

@அ.குணசேகரன், புவனகிரி.
நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்குக் கோடிகோடியாகக் கேட்கின்றனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகள்?


நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, தனியார் கல்விக் கட்டணக் கொள்ளை ஒழிப்பு. ஆனால், நீட் தேர்வைக் காரணம்காட்டி மருத்துவக் கல்விக்கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டும்கூடக் கொள்ளையர்களின் பணப்பசி குறையவில்லை. ‘மேனேஜ்மென்ட் கோட்டா இடங்களை அந்தந்தக் கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். இதற்கு, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்திருந்தாலே போதும்’ என்கிற விதிகளைப் பயன்படுத்திக் கோடிகளில் பணம் பார்க்கிறார்கள்.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றாலும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் ஒதுங்குபவர்களும் உண்டு. இவர்களெல்லாம், இந்தக் கொள்ளையர்களுக்கு ‘தனலெட்சுமி’கள். அந்த இடங்களையும் நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்களில் வெற்றிபெற்ற பணம்படைத்த மாணவர்களிடம் விற்றுப் பணம் பார்க்கிறார்கள். ‘இத்தகைய ஓட்டைகளை அடைக்கவேண்டும்’ என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பலரும் குரல்கொடுக்கிறார்கள். குழந்தைகளின் உள்ளாடைகள்வரை சோதனையிடுவதில் கறார் காட்டும் அரசாங்கம், கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வேதனையே.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
‘அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையாக சசிகலா வருவார்’ என்று நடிகர் கருணாஸ் வாய் திறந்திருக்கிறாரே?


‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்!’

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.
தன் மகன், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தால், ராஜன் செல்லப்பா இப்படி ஒரு பிரச்னையைக் கிளப்பியிருப்பாரா?


அவர் வெற்றிபெற்றிருந்தால்,  இப்படிக் கூடுதலாக ஓர் ‘அவல்’ கிடைத்திருக்காதே!

பட்டுக்கோட்டை மு.க.அழகிரி, ஒதியடிக்காடு.
‘இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையைத் தெருவுக்குத் தெரு தீயிட்டுக் கொளுத்துவோம்’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். ஆனால், அவர் மட்டும் நான்கு மொழிகளில் பேசுவாராம்?


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பம் உட்பட தி.மு.க-வினருக்குச் சொந்தமான 42 பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றொரு வாட்ஸ்அப் சுழன்றுகொண்டிருக்கிறது. ‘ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை’ என்பதை நிரூபிக்கிறார்கள்போல. கேட்டால், ‘நாங்கள் திணிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்’ என்று ஜகா வாங்குவார்கள். அந்தப் பள்ளிகளில் படிக்கும் பெற்றோரிடம் கேட்டால்தான் தெரியும்... திணித்தார்களா, இல்லையா என்பது!

கழுகார் பதில்கள்!

@வெங்கட்.
இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லய்யா குடும்பத்துடன் பார்த்திருக்கிறாரே?


முழுதாகப் பார்க்கவிடாமல் ‘திருடன்... திருடன்’ என்று கூச்சலிட்டு விரட்டியடித்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்களே, வெளிநாடுவாழ் இந்தியர்கள். நம் ஊராக இருந்தால் இப்படியெல்லாம் செய்திருக்கவே முடியாது. பக்கத்திலேயே ஒரு மந்திரி உட்கார்ந்திருப்பார். கூடவே, ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் நின்றிருப்பார்கள். வாயைப் பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்திருப்போம்.

இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
‘நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால்தான் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன’ என்கிறார்களே?


சொல்லிக்கொள்ளும்படியான சம்பளம் வாங்காத நடிகர்கள்தான் அதிகம். அவர்களுடைய படங்களும் அங்கேதான் வெளியாகின்றன. உணவுப் பொருள், பார்க்கிங், சினிமா கட்டணம் என்று எல்லாவற்றின் விலையையும் தாறுமாறாக ஏற்றி இஷ்டம்போல சம்பாதிப்பவர்களுக்கு அது ஒரு சாக்கு!

@சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை.
உங்களைப் பொறுத்தவரையில் இந்தி அவசியமா?


அது, அவரவர் தேவையைப் பொறுத்தது. அவசியமா... இல்லையா என்பதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். என்ன, பதிலைச் சரியாகச் சொல்லிவிட்டேன்தானே?

கழுகார் பதில்கள்!

@காந்தி, திருச்சி.
ராஜராஜ சோழனுக்கு சாதிச் சாயம் பூசுவது பற்றி?


அவருக்கு எதிராக இப்போது கலகக் குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பட்டியல் சமூகம் உட்பட, கிட்டத்தட்ட எட்டுச் சாதிகள் அவரைச் சொந்தம் கொண்டாடி வருகின்றன.  முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றிருக்கும் கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்களை எல்லாம் அப்படி அப்படியே நம்பினால், ஆபத்துதான். அவற்றில் பெரும்பாலானவை அவரவர் வசதி மற்றும் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவையே! வரலாறு படைத்ததும், எழுதிவைத்ததும் அவர்களே. இப்போதுகூட, சட்டமன்ற அவைக் குறிப்பில் எதிர்க்கட்சிக்காரர் ஒரு கருத்தைச் சொன்னால் நீக்கிவிடுகிறார்கள். அதேசமயம், ஆளுங்கட்சி எதைச் சொன்னாலும் அப்படியே எழுதி வைக்கிறார்கள். ஆக, அதிகாரம் மிக்கவர் களால் சொல்லப்பட்டவைதான் பெரும் பாலும் வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. நம் கண்முன்னே வாழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கல்வெட்டுகளாக இங்கே பதித்து வைத்திருப்பவற்றையெல்லாம் நினைவில் கொண்டுவந்து பாருங்கள், உண்மை புரியும். இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’ என்று சொல்லும் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தைப் பாருங்கள்! ஆகவே, ரஞ்சித்தின் கருத்துகள் உண்மையா... பொய்யா என்று ஆராய்வதைவிட, இப்போதைய தேவை என்ன என்று யோசிப்பதுதான் சிறந்தது.

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.
ஏன், இந்த மதத் தீவிரவாதம்?


எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவரவர் சக்திக்கு ஏற்ப ஆங்காங்கே கலகங்களையும் குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் நிகழ்த்துகின்றனர். இதில் அதிகமாக அடிபடுவது இஸ்லாமிய தீவிரவாதம். உண்மையில், மதத் தீவிரவாதம் என்பது பெரும்பாலும் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாகத்தான் இருக்கிறது. பிற மதத்தவர்களுக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் துப்பாக்கி தூக்குவது ஒருபுறம் நடக்கிறது. அதேசமயம், பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களே துப்பாக்கி தூக்குகின்றனரே! அப்படியென்றால், அவர்களின் நோக்கம் என்ன? கூட்டிக்கழித்துப் பாருங்கள், தீவிரவாதத்துக்கும் மதங்களுக்கும் இடையேயான தொடர்புகள் வெட்டவெளிச்சமாகும்.

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.
பி.ஜே.பி-யின் மந்திரிசபையில், ஒரு பதவிக்காக அ.தி.மு.க மண்டியிடும் நிலையைப் பார்த்து ஜெயலலிதா ஆன்மா என்ன கூறும்?


எதையும் கூறாது. மண்டியிடப் பழக்கியதே அவர்தானே!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!