Published:Updated:

`இதுவும் தி.மு.க நிக்கிற தொகுதிதான்!’ - நேர்காணலில் ஸ்டாலின் பேச்சுக்கு மௌனம் காத்த நிர்வாகிகள்

`இதுவும் தி.மு.க நிக்கிற தொகுதிதான்!’ - நேர்காணலில் ஸ்டாலின் பேச்சுக்கு மௌனம் காத்த நிர்வாகிகள்
`இதுவும் தி.மு.க நிக்கிற தொகுதிதான்!’ - நேர்காணலில் ஸ்டாலின் பேச்சுக்கு மௌனம் காத்த நிர்வாகிகள்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பால், அரசியல் கட்சிகள் வேகமெடுத்துள்ளன. கூட்டணிகள் முடிவாகியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் முடிந்துள்ளது. தி.மு.க சார்பில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நேர்காணல் சனிக்கிழமை நடந்து முடிந்துள்ளது. அதேபோல 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான நேர்காணலையும், நேற்று ஒரேநாளில் நடத்தி அசத்தியுள்ளார் ஸ்டாலின். விருப்பமனு தாக்கல் செய்தவர்களை நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்திருக்கிறார். இந்த நேர்காணலில் முன்எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க மூத்த தலைவர்களின் வாரிசுகள் பலரும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து, கடலூர் நகரச் செயலாளர் தண்டபாணி மனு அளித்துள்ளார். இது தவிர,  தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வடசென்னையிலும், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியிலும், பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி கள்ளக்குறிச்சியிலும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு சேலம் தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.  

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் மட்டுமே தி.மு.க போட்டியிடுகிறது. அவை எந்தத் தொகுதிகள் என எந்த அறிவிப்பும் வாரததால், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் போட்டியிட கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலின் தலைவரான பின், நடக்கும் முதல் நேர்காணல் என்பதால் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் தி.மு.க-வினர். நேர்காணலின்போது, `தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் எதிர்பார்த்த பதில் இல்லை. ரூ.1 கோடி என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருந்திருக்கிறது. மூத்த அரசியல்கட்சித் தலைவர்களின் வாரிசுகள், ரூ.5 கோடி என்பதாக கூறியுள்ளார்களாம்.

ஈரோடு தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களை ஒன்றாக அழைத்த ஸ்டாலின், `ஈரோடு தொகுதி ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நம் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், நீங்கதான் அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதேபோல நாமக்கல் லோக்சபா தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்ட தி.மு.க-வினருக்கும் இதே பாணியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அறிந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், எதுவும் பேசாமல் மௌனமாக திரும்பிச்சென்றுள்ளனர்.’  `இதுவும் தி.மு.க நிக்கிற இடமாகத்தான் நீங்க நினைச்சு வேலை செய்யணும்’ என்ற ஸ்டாலினின் வார்த்தைகளைக் கேட்ட பின், பெரிய அளவில் உடன்பிறப்புகளிடையே உற்சாகம் பொங்கவில்லை என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.