Published:Updated:

` கூட்டணிக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என நினைத்தேன்!'  - விஜயகாந்த் குறித்து எடப்பாடியிடம் ஜி.கே.வாசன்

நேற்று இரவு அ.தி.மு.க தரப்பில் இருந்து ஜி.கே.வாசனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, ` 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்' என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

` கூட்டணிக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என நினைத்தேன்!'  - விஜயகாந்த் குறித்து எடப்பாடியிடம் ஜி.கே.வாசன்
` கூட்டணிக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என நினைத்தேன்!'  - விஜயகாந்த் குறித்து எடப்பாடியிடம் ஜி.கே.வாசன்

அ.தி.மு.க கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தே.மு.தி.க இணைந்துவிட்டது. த.மா.கா வருகை குறித்து அ.தி.மு.க முகாமில் எந்த அசைவுகளும் இல்லை. ` 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். அவர்களிடம் இருந்து உரிய பதில் வராவிட்டால், மாற்றுத் தீர்வை நோக்கிப் பயணப்பட இருக்கிறார் ஜி.கே.வாசன்' என்கின்றனர் த.மா.கா நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முன்னதாக, கூட்டணியையும் தொகுதிகளையும் இறுதி செய்யும் வேலையில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டி வந்தன. `பா.ம.க-வுக்கு இணையாக சீட் வேண்டும்' என்ற கேட்ட தே.மு.தி.க-வும் 4 இடங்களுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டது. இதற்கான உடன்பாட்டு ஒப்பந்தம் நேற்று கையொப்பமிடப்பட்டது. ஆனால், அ.தி.மு.க தலைமையிலான அணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் வரவில்லை. 

என்ன நடக்கிறது த.மா.கா-அ.தி.மு.க கூட்டணியில்?

`` அ.தி.மு.க கூட்டணியில் எங்களுக்கான இடத்தை இன்னமும் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவில்லை. தொடக்கத்திலிருந்து அ.தி.மு.க-வுடன் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க-வுக்கு பா.ஜ.க மூலமாக 4 சீட்டுகளை உறுதிப்படுத்திவிட்டனர். `எங்களுக்கு 2 ப்ளஸ் 1 அல்லது 1 ப்ளஸ் 1 கொடுங்கள்' என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக, எங்கள் கட்சித் தலைமையிடம் பேசிய முதல்வரின் தூதுவர்கள், ` இந்த மக்களவைத் தேர்தலோடு மட்டும் அல்லாமல், நீண்டகாலம் உங்களுடன் இருக்க விரும்புகிறோம். நமது அணி தொடர வேண்டும்' என வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

அப்படியிருக்கும்போது, எங்களுக்கு இடம் ஒதுக்குவதில் என்ன சிக்கல் எனத் தெரியவில்லை. முன்பு ஜெயலலிதாவுடன் நாங்கள் கூட்டு சேர நினைத்தபோது, சசிகலா இடையூறாக இருந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு யார் இடையூறு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. `எங்களைச் சேர்க்கக் கூடாது' என பா.ஜ.க-வும் நினைக்கிறதா எனத் தெரியவில்லை. நேற்று இரவு முதல்வர் தரப்பில் இருந்து ஜி.கே.வாசனைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, ` 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்' என முதல்வர் கூறியதாகத் தகவல் கிடைத்தது" என விவரித்த த.மா.கா மூத்த நிர்வாகிகள் சிலர்,  

`` ஒருவேளை, எங்களுக்காக பா.ஜ.க தரப்பிலிருந்து ராஜ்யசபா சீட்டை வாங்கித் தருவதற்காகப் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. எதற்காக இந்த 24 மணி நேர அவகாசம் எனவும் தெரியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தைக் காட்டியதால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க அணிக்குள் த.மா.கா வருவதால் எடப்பாடிக்குத்தான் பலன் என்பதை அ.தி.மு.க அறியவில்லை. இதைப் பற்றி அ.தி.மு.க தலைமைக்குப் பதில் கொடுத்த ஜி.கே.வாசன், ` நான் நினைத்திருந்தால் விஜயகாந்தைக்கூட போய்ப் பார்த்திருக்கலாம். ரஜினி, திருநாவுக்கரசர், ஸ்டாலின் ஆகியோர் சென்றபோதே நானும் மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம். இத்தனைக்கும் அவர் எங்களுடைய குடும்ப நண்பர். நான் சென்று பார்ப்பதால் இந்தக் கூட்டணியில் எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதால் மௌனமாக இருந்தேன். அண்ணா தி.மு.க-வோடு இருக்கலாம் என்பதால்தான் பா.ஜ.க தரப்பிலும் யாரையும் நான் சந்திக்கவில்லை. 2 ப்ளஸ் 1 என்ற அளவீட்டின்படி நீங்கள் ஒதுக்கினால் எங்களது கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள்' எனக் கூறியிருக்கிறார்" என்றவர்கள், 

`` தி.மு.க அணியில் வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்குத் தலா 2 இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் கொடுக்காமல் பாரிவேந்தர் கட்சிக்கு ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் இடையூறு செய்ததால் த.மா.கா-வை ஸ்டாலின் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்படி நடக்கும் என்பதால்தான் எடப்பாடி பழனிசாமியின் பதிலுக்காகக் காத்திருக்கிறார் ஜி.கே.வாசன். அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், தினகரன், கமல், சரத்குமார் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வேலையைத்தான் செய்ய வேண்டியது வரும்.

கடந்த தேர்தலில் மோடியா...லேடியா என்ற மோதலில் ஜெயலலிதாதான் ஜெயித்தார். இதன்பிறகு சட்டப் போராட்டத்தின் மூலமாகத்தான் தமிழகத்தின் நலன்களை அவர் வென்றெடுத்தார். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நியமித்தால், அ.தி.மு.க-வின் வெற்றிக்குத்தான் பாதிப்பு ஏற்படும். மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்தால், மக்களும் எங்களை ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் சூழ்நிலைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டோம். இதற்கு மேல் பதில் வராவிட்டால், மாற்று சிந்தனையை நோக்கித்தான் நாங்கள் செல்ல வேண்டியது வரும்" என்கின்றனர் இயல்பாக.