Published:Updated:

`கேட்கவே குலை நடுங்க வைக்குது!'- பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைவர்கள் காட்டம்

`கேட்கவே குலை நடுங்க வைக்குது!'- பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைவர்கள் காட்டம்
`கேட்கவே குலை நடுங்க வைக்குது!'- பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைவர்கள் காட்டம்

``பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்றும் வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக்கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  
                             
மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பதுதான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை" என்றும் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துகொண்டிருக்கும் செய்திகளும், காணொலிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேட்கவே குலை நடுங்க வைக்கிற வகையில் இருக்கிற இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பலத்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடங்கி பலதரப்புப் பெண்கள் இக்கும்பலால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும், அவர்கள் அவமானத்துக்குப் பயந்து வெளியே சொல்ல அச்சப்பட்டும் இருக்கக்கூடும் என்பதாலும் இதில் பாதிக்கப்பட்டப் பெண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெளியாகியிருக்கிற காணொலியில் கேட்கிற அந்தப் பெண்களின் கதறலும், அழுகுரலும், ஓலமும் பெரும் மனவலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்தேறும் இக்கொடுஞ்செயல்கள் யாவும் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி பகுதியில் ஆளும் கட்சியினரின் துணையோடு பெரும் வலைப்பின்னல் அமைக்கப்பட்டு அதனூடாகப் பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொள்வதும், அதனையே காணொலியாக எடுத்துப் பணம் பறிப்பதும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குப் பெண்களை இரையாக்குவதுமானப் பெரும் பாலியல் வக்கிரங்களும், வன்கொடுமைகளும் கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டப் பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தும் போயிருக்கிறார்கள். இருந்தபோதிலும், அம்மரணங்கள் யாவும், `காதல் தோல்வி தற்கொலைகள்’ என இவ்வளவு நாள்களாக மூடி மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் இக்கோரச்செயல்கள் தற்போதுதான் ஊடகத்தின் மூலமாக வெளிவுலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. இக்கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததற்காகவே தாக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு மூன்றே நாள்களில் பிணையில் வெளியே வந்திருக்கின்றனர் என்பதன் மூலம் இதன் பின்னணியிலியிருக்கும் அதிகாரப்பலமும், அரசியல் பலமும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

பல நூற்றுக்கணக்கானப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், ஆளும் கட்சியினரின் தலையீடு இவ்வழக்கில் இருக்கக்கூடும் என்பதால் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதைச் செய்யாது ஆளும் வர்க்கம் தனது அதிகாரப்பலம் கொண்டு இப்பாலியல் வன்கொடுமைகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைத் தப்பிக்க விட முற்படுமானால், அது வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம். அதை ஒருபோதும் தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இப்படுபாதகச் செயலையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசின் அடாவடித்தனத்தையும் மக்கள் மன்றத்தில் துகிலுரித்து அம்பலப்படுத்துவோம்.

பொள்ளாச்சி பகுதியில் வக்கிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட கும்பலால் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள்; தண்டிக்கப்படுவதற்கே தகுதியானவர்கள்.

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி: பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல்தான் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும் கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது. முகநூல் மூலம் தோழிகள் ஆனவர்கள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை இலக்கு வைத்து பழகி, காதல் ஆசை காட்டி  பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து வைத்துக்கொண்டு அதையே காட்டி பணம் பறித்தல், மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட  குற்றங்களை இந்தக் கும்பல் அரங்கேற்றியிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

சகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை மிருகங்களாக மாறி சிதைத்த இவர்களிடம் கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமாக திருநாவுக்கரசு என்பவன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது.  இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும்.