Published:Updated:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்-2019 தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் `இந்திய தேர்தல் ஆணையம் 10.3.2019 நேற்று பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், தேர்தல் விதி மீறல்களை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படை குழுக்கள்-24 (ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 குழுக்கள்), நிலை கண்காணிப்புக் குழுக்கள்-24 (ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 குழுக்கள்), வீடியோ கண்காணிப்புக் குழுக்கள்-8, வீடியோ பார்வையிடும் குழுக்கள்-8, உதவி கணக்கு செலவீன குழுக்கள்-8, மீடியா சான்றிதழ் அளிக்கும் குழு-1 ஆகியவை ஆகும். இக்குழுக்கள் 24 மணிநேரமும் பணியில் இருப்பார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய  2 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது.  வேலூர் மாவட்டத்திலிருந்து 2 சட்டமன்றத் தொகுதிகள் திருவண்ணாமலையில் வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2 சட்டமன்றத் தொகுதிகள் ஆரணியில் வருகிறது. திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிகுட்பட்டு வரும் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் விவரம், திருப்பத்தூர்-267, ஜோலார்பேட்டை-265, செங்கம் (தனி)-323, திருவண்ணாமலை-297,  கீழ்பென்னாத்தூர்-285, கலசப்பாக்கம்-282, ஆக மொத்தம்-1719 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ஆரணி பாராளுமன்றத் தொகுதிகுட்பட்டு வரும் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்வாடிகள் விவரம், போளுர்-285, ஆரணி-311, செய்யார்;-311,  வந்தவாசி (தனி)-280,  செஞ்சி     -304,  மைலம்- 265, ஆக மொத்தம்-1756 வாக்குச் சாவடிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 2374 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 240 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 17,865 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்களின் விவரம் பதியப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் சாதுக்கள் 580 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 94 பேரும் உள்ளனர்.

தேர்தல் நடத்த தேவையான வாக்குச் சாவடி அலுவலர்கள் சுமார் 11,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் தேர்தல் தேதி அறிவித்த தினத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் அவர்களே அகற்றிட வேண்டும்.  48 மணி நேரத்திற்குள் அகற்றப்படவில்லை என்றால் தேர்தல் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவினம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு கணக்கில் சேக்கப்படும் என்றார்.