Published:Updated:

பொள்ளாச்சியா... நாமக்கல்லா? - களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

பொள்ளாச்சியா... நாமக்கல்லா? - களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
பொள்ளாச்சியா... நாமக்கல்லா? - களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளார். தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொள்ளாச்சி அல்லது நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தொகுதி அறிவிக்கப்படும் முன்பே  நாமக்கல்லில் தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி.

அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், கடந்த காலங்களில் நல்லது செய்தது தி.மு.க-தான். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, விவசாய பயிர்க்கடன்களை ரத்துசெய்தது. அதேபோல, தேசிய வங்கியில் வாங்கிய கடனை மத்தியில் அமைந்த காங்கிரஸ் ரத்துசெய்தது. விவசாயிகளின் விளை பொருள்களைக் கொண்டுசெல்ல மினிபஸ் வசதி, உழவர் சந்தை போன்றவற்றைக் கொண்டுவந்ததும் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல்வேறு ஆண்டுகள் முயற்சி செய்து, போராட்டங்கள் நடத்தி, தற்போது அத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றுள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் முதல் முதல்வர் வரை இருந்தும், மக்களுக்கு என்ன பயன். மக்களுக்கு பயன்தரக்கூடிய கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலை - நல்லாறு ஆகிய திட்டங்கள் தி.மு.க  ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும். எனவே, கொங்கு மண்டலத்தில் நமக்கு  ஒதுக்கப்படும் தொகுதி மட்டுமின்றி, 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை வெற்றிபெறவைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அறிக்கை விட்டதோடு மட்டுமில்லாமல், சுவர் மற்றும் போஸ்டர் விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர் கொங்கு கட்சியினர்.