பிரீமியம் ஸ்டோரி

@வேல்ரவீந்திரன்.
ஆண்டுதோறும் காலிக் குடங்களுடன் வீதியில் மக்கள் போராடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கெல்லாம் (அமைச்சர்கள் அல்ல) முன்யோசனையே இருக்காதா?


என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள். அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதிகள், அவர்களுக்கென்று கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்துக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் தடையின்றி கிடைப்பதற்கான அனைத்தையும் முன்யோசனையுடன் செய்துவைத்துள்ளனரே. இதை நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது... போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது ‘தொண்டைத் தண்ணீர்’ வற்றிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்யோசனை.

கழுகார் பதில்கள்!

பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.
அ.தி.மு.க நிர்வாகிகள், ‘யாரும், எதையும் வெளியில் சொல்லக்கூடாது’ என்பது சரி. ‘அ.தி.மு.க-வினரிடம் கருத்துக்கேட்டு வெளியிட்டால், ஊடகம்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது சரியா?

‘அம்மிக்கல்லைக் கொத்தத் தெரியாதவன் கொத்தியதுபோல இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம்’ என்று வக்கீல் வண்டுமுருகன் சொல்வது போலத்தான் இருக்கிறது எடப்பாடி அண்ட் கோ நடத்தும் இந்த காமெடியெல்லாம்.

@டி.மணிகண்டன், தாம்பரம் சானடோரியம், சென்னை.
இளையராஜா-வடிவேலு இருவரும் மக்களுக்காக நிறைய யோசித்து யோசித்து தலையில் பாரம் கூடிவிட்டதோ?


அவர்களின் சொந்தப் பிரச்னை பற்றி வெளியில் பேசுகிறார்கள். பொதுப் பிரச்னைகளில் ஏதாவது கருத்து சொன்னால்தான் நீங்கள் வருத்தப்பட வேண்டும். உலகெங்கும் வாழும் பெரும்பாலான தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்ட இசை ஞானியே... வைகைப்புயலே... சொந்தப் பிரச்னைகளில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள்கூட உங்கள்மீது அன்பான கவலையை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதைத்தான் இந்த வாசகரின் கேள்வி சுட்டுகிறது. பிறரை நோக்கி நீங்கள் வீசும் வார்த்தைகள்கூட, ரசிகர்களைக் காயப்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்!

கழுகார் பதில்கள்!

எம்.சண்முகம், கொங்கணாபுரம், சேலம் மாவட்டம்.
மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் மய்யத்தின் எதிர்காலம்?


மய்யமாக ஒரு பதிலைத் தேடுகிறேன். கிடைக்கவே மாட்டேன்கிறதே பாஸ்!

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.
அ.தி.மு.க கரை சேர, இனியாவது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் உதவுவார்களா?


இதுவரை சேர்ந்த கறை போதாது என்று, மேலும் மேலும் கறை சேர உதவிக்கொண்டுதானே இருக்கிறார்கள்!

டி.கே.மோகன், ஆதம்பாக்கம், சென்னை-88.
‘நாடாளுமன்றத்தில் வெடிகுண்டாகச் செயல்படுவோம்’ என்கிறாரே தமிழச்சி தங்கபாண்டியன்?


அச்சச்சோ... ஆரம்பமே வெடிகுண்டா? ஏற்கெனவே தமிழ் என்றாலே தீவிரவாதப் பார்வையை வீசுவார்கள் வடக்கே. பெயர் வேறு தமிழச்சி. அம்மணி எதற்கும் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்!

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்திருந்தால், புதுடெல்லி உட்படப் பிற மாநிலங்களிலும் சேர்த்து பத்து, பதினைந்து தொகுதிகளைக் கூடுதலாக காங்கிரஸ் வென்றெடுத்திருக்குமோ?


அந்தப் பேச்சுக்கே இடமில்லை. உதாரணமாக புதுடெல்லியின் ஏழு தொகுதிகளிலுமே 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளுடன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது பி.ஜே.பி. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பிறகட்சிகள், சுயேச்சைகள் என அனைவரின் வாக்குகளைக் கூட்டினாலும்கூட பி.ஜே.பி-யின் வெற்றியைத் தொடமுடியாது!

கே.ஆர்.ஜி, ஸ்ரீராமன், ஆர்.கே.ஹெக்டே நகர், பெங்களூரு-77.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட காங்கிரஸ் கேட்காது போலிருக்கிறதே?


கிடைக்காது என்பதால், கேட்காது! எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற, விதிமுறைகளின்படி மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற இடங்களில் 10 சதவிகிதம் வென்றிருக்க வேண்டும். இருப்பதோ 9.3 சதவிகிதம்தான். அதாவது 51 எம்.பி-க்கள். அதனால்தான், நான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையே காங்கிரஸுடன் இணைக்கவிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. வழக்கம்போல ‘பவர்ஃபுல்’ விலையை பவார் எதிர்பார்த்ததால், அது அத்தோடு போச்சு.

என்.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ -ஔவையார்.
‘எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு’ - திருவள்ளுவர்.
வார்த்தைகளை மாற்றிப்போட்டு ஒரே கருத்தைத்தானே இருவருமே சொல்லியிருக்கிறார்கள்?


எண்ணையும் எழுத்தையும் இதற்கு மேல் ஒப்பிட உச்சமான உயிர்ப்பான வேறொன்றில்லை என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இதை வைத்து ஔவையாருக்கும் திருவள்ளுவருக்கும் இடையே ‘காப்பிரைட்’ பிரச்னைகளை எல்லாம் கிளப்பிவிடக் கூடாது.

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.
மீண்டும் அ.தி.மு.க-வில் ராதாரவி?


அவருடைய அப்பா எம்.ஆர்.ராதா, குரலை மாற்றி மாற்றிப் பேசுவாரே தவிர,  கொள்கையை மாற்றிக்கொண்டவரல்ல... கடைசிவரை!

கழுகார் பதில்கள்!

எம். தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் (மா).
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் செயல்பாடு எப்படி உள்ளது கழுகாரே?


எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வருண பகவான்தான் கவலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார். இன்னொரு விஷயம்... போகிற போக்கைப் பார்த்தால், ‘டாஸ் வென்ற அணி, முதலில் நீச்சல் அடிக்க முடிவு செய்தது’ என்று சொன்னாலும் சொல்வார்கள்போல!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல், கர்நாடகம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஃபீனிக்ஸ் போல மீண்டுவர, என்ன செய்யவேண்டும்?


‘இத்தனை காலமாக நாம் நடத்திக்கொண்டிருந்தது அக்மார்க் கம்யூனிச அரசியலே இல்லை’ என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டாலே போதும்... அடுத்தது ஃபீனிக்ஸ்தான்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.
ஹெல்மெட் அணியாத குற்றத்தை மட்டும் உயர் நீதிமன்றம் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறதே?


உயிர்போகும் பிரச்னையில் நீதிமன்றம் காட்டும் இந்தக் கூடுதல் அக்கறையை நாம் வரவேற்க வேண்டுமே தவிர, குறையாகப் பார்க்கக் கூடாது. அதேசமயம், ‘நீர்நிலை ஆக்கிரமிப்பு, லஞ்சம், ஊழல், பாலியல் கொடூரங்கள், சிலைக்கடத்தல் என்று உயிரெடுக்கும் பல்வேறு விவகாரங்களிலும் இதே அக்கறையை நீதிமன்றத்திடம் நாம் எதிர்பார்க்கிறோம்’ என்பது தனி மனு.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
‘24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்’ என்கிற தமிழக அரசின் திடீர் உத்தரவு?


வெளிநாடுகளுக்காக இங்கே ‘ஷிஃப்ட்’ முறையில் பணியாற்றும் நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே பெருகிவருகின்றன. 24 மணி நேரமும் இப்படி இயங்குவதால், இரவு நேரத்தில் தேவையான பொருட்கள் கிடைக்காமல் பலரும் தவிப்பது உண்டு. இதையெல்லாம் தீர்த்துவைக்க இந்த முயற்சி கைகொடுக்கலாம். ஆனால், ‘10 பேருக்கு மேல் பணியாற்றும் வர்த்தக நிறுவனங் கள் மட்டுமே திறந்து வைக்கப்படலாம்’ என்கிற நிபந்தனைதான், அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அன்றாட பிழைப்பை ஓட்டுவதற்காக ஓரிருவரால் மட்டுமே நடத்தப்படும் டீக்கடை, இட்லிக்கடை போன்றவற்றின் மீதான போலீஸின் தாக்குதல் ‘மாமூலாக’ தொடர்வதற்கே இது வழிவகுக்கும்.

ப.ஜனசேகரன், தஞ்சாவூர்.
உண்மையைப் பேசினால் எதிர்ப்பும் இழப்பும் ஏற்படுகிறது. பொய்ப் பேசினால் உயர்வும் செல்வமும் சேர்கிறது. என்னதான் செய்வது?


தாறுமாறான அதிகாரம், புகழ் போதை, அளவுக்கு மீறிய பணம், பகட்டான வாழ்க்கை இவற்றை எல்லாம்தான் ‘உயர்வு’, ‘செல்வம்’ என்று நீங்கள் நினைத்தால், பொய்ப் பேசலாம். நிம்மதி என்கிற ‘பெருஞ்செல்வம்’ சேரவேண்டும் என்றால், உண்மை மட்டுமே பேசலாம். ‘போற்றுவார் போற்றட்டும்... புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்’ என்று போய்க்கொண்டே இருந்தால், நிம்மதிக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் உண்டு.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு