Published:Updated:

``தனிச் சின்னம் வேண்டும்!” - ஸ்டாலின் வியூகத்தை உடைக்கிறாரா திருமாவளவன்?

``தனிச் சின்னம் வேண்டும்!” - ஸ்டாலின் வியூகத்தை உடைக்கிறாரா திருமாவளவன்?
``தனிச் சின்னம் வேண்டும்!” - ஸ்டாலின் வியூகத்தை உடைக்கிறாரா திருமாவளவன்?

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச் சின்னம் கோரியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக முடிவெடுத்துள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க. வேட்பாளர்களைக் களமிறக்க தி.மு.க. தலைமைத் திட்டம் வகுத்துள்ள வேளையில், திருமாவளவன் தனிச்சின்னம் கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் களமாட தொடங்கிய பிறகு, முதல்முறையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2004 நாடாளுமன்றத் தேர்தலில், 2006 சட்டமன்றத் தேர்தல்களில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சிக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திரம் சின்னம் கோரிய திருமாவளவனுக்கு, மோதிரம் சின்னம் வழங்கப்பட்டது. 2016 தேர்தலிலும் மோதிரம் சின்னத்திலேயே 25 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. 2019 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வி.சி.க.வை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பு கடும் அழுத்தம் கொடுக்கிறதாம். இதை ஏற்க மறுத்துள்ள திருமாவளவன், கடந்த தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டதைப் போன்று, இந்தத் தேர்தலிலும் மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாட முடிவெடுத்துள்ளார்.

தனிச் சின்னம் கோரி, தேர்தல் ஆணையத்தை நாடுவது தொடர்பாக நம்மிடம் பேசிய வி.சி.க. வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் சீனிவாச ராவ், ``ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் தனிச்சின்னம் வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. எங்கள் உரிமையைத்தான் தேர்தல் ஆணையத்தில் கேட்கிறோம். நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னர், எங்களுக்கு நிரந்தரச் சின்னம் ஒதுக்கப்படும். அதற்காகத்தான் இரண்டு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம். 6 சதவிகித வாக்குகளைப் பெறும்பட்சத்தில் நிரந்தரத் தனிச்சின்னத்தோடு, மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரமும் கிடைக்கும். தேர்தல் ஆணையம் தனிச் சின்னம் ஒதுக்காதபட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து, வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., கட்சிகளுக்கு தலா இரண்டு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஐ.ஜே.கே., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் தங்களது சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. மற்ற கட்சி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பு அழுத்தம் கொடுத்து வந்தது. இதன்படி பார்த்தால், 26 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் நிற்பது போல் கணக்காகிறது. இந்த வியூகத்தைத்தான் திருமாவளவன் தனிச்சின்னம் கோரி உடைத்துள்ளார். மோதிரம் கிடைக்காவிட்டாலும் சரி, ஒரு தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறாராம்.