Published:Updated:

`தே.மு.தி.க ஜெயிக்க வேண்டும் என்றால், சீட் கொடுங்கள்!' - ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த 12 ஒ.செ-க்கள்

`தெரிந்தே தே.மு.தி.க வெற்றிக்காக நாம் பாடுபட வேண்டுமா?' என்ற கேள்வியைத்தான் 18 ஒன்றிய செயலாளர்களில் 12 பேர் எழுப்பியுள்ளனர்.

`தே.மு.தி.க ஜெயிக்க வேண்டும் என்றால், சீட் கொடுங்கள்!'  - ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த 12 ஒ.செ-க்கள்
`தே.மு.தி.க ஜெயிக்க வேண்டும் என்றால், சீட் கொடுங்கள்!' - ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த 12 ஒ.செ-க்கள்

ண்ணா அறிவாலயத்தில் நிரம்பி வழியும் வாரிசுகளால் அதிர்ச்சியில் இருக்கின்றனர் சீனியர் உடன்பிறப்புகள். ` கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகனுக்கு சீட் கொடுத்தால், தே.மு.தி.க வெற்றி பெறுவது எளிதாகிவிடும் என ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர் 12 ஒன்றிய செயலாளர்கள்' என அதிர வைக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது தி.மு.க. இதற்காகத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களை அடையாளம் கண்டறியும் பணியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். கூடவே, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கவிருப்பதால், அதற்கும் சேர்த்து நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த நேர்காணலில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துக் கேள்விகளைக் கேட்டார் ஸ்டாலின். ` கட்சியில் எவ்வளவு காலம் பணியாற்றி இருக்கிறீர்கள்.. இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா.. தேர்தலில் செலவு செய்யும் அளவுக்குப் பொருளாதார வசதி உள்ளதா?' என்பன போன்ற அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பொன்முடி மகன் கவுதம சிகாமணி, ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர்.கலாநிதி, என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர்.கனிமொழி எனப் பலரும் தி.மு.க-வில் சீட் கேட்டுள்ளனர். 

மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் சேர்த்து நேர்காணல் நேற்று நடந்ததால், அறிவாலயம் நிரம்பி வழிந்தது. திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் எனப் பல பகுதிகளில் இருந்து உடன்பிறப்புகள் வந்திருந்தனர். அதில், கட்சி சீனியர்களின் வாரிசுகளே அதிகம் இடம்பெற்றதால், அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அந்தக் கோபத்தைத் தலைமையின் கவனத்துக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். இதில், ஹைலைட்டான விஷயம், ` கள்ளக்குறிச்சி தொகுதியை பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்குக் கொடுக்கக் கூடாது' என 12 ஒன்றிய செயலாளர்கள் கடிதம் எழுதியிருப்பதுதான். 

தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். `` கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகள் சேலம் மாவட்டத்துக்குள் வருகின்றன. இங்கு தே.மு.தி.க வேட்பாளராக அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொகுதி முழுக்கவே வன்னியர் சமூக வாக்குகள் நிறைந்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது, அந்த சமூகம் அல்லாத கவுதம சிகாமணியைக் களமிறக்கும்போது, தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, ` தெரிந்தே தே.மு.தி.க வெற்றிக்காக நாம் பாடுபட வேண்டுமா?' என்ற கேள்வியைத்தான் 18 ஒன்றிய செயலாளர்களில் 12 பேர் எழுப்பியுள்ளனர்.

இந்தக் கடிதத்தை ஸ்டாலின் கவனத்துக்கும் அனுப்பியுள்ளனர். தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்திருந்தார் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ். பிறகு களநிலரத்தை அறிந்த பிறகு மோகன்ராஜுக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கிவிட்டு, விருதுநகரில் தான் போட்டியிடுவது என முடிவெடுத்துவிட்டார். விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க இருக்கிறோம். சொந்த சமூக வாக்குகளை குறிவைத்துத்தான் சுதீஷ் களமிறங்க இருக்கிறார். இங்கும் நாம் சரியாக களவேலை செய்யாவிட்டால், சுதீஷுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் இதுபோன்ற நுட்பமான சில விஷயங்களால் நம் கையைவிட்டுத் தொகுதி பறிபோய்விடக் கூடாது என்ற அச்சத்தையும் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்" என்கின்றனர் ஆதங்கத்துடன். 

`` விழுப்புரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் பொன்முடி. அவருடைய வீடும் விழுப்புரத்தில்தான் இருக்கிறது. மோகன்ராஜுக்கு சொந்தத் தொகுதியாகவும் சேலம் இருக்கிறது. தொகுதிக்குள் அவருக்கு எந்தவித நெகட்டிவ் இமேஜும் இல்லை. பொன்முடி தரப்புக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் கருத்துக்கள் இல்லை. இதுபோன்ற சூழலில், கவுதம சிகாமணிக்கு சீட்டை ஒதுக்கினால் சொந்தக் கட்சிக்காரர்களே தேர்தல் வேலை பார்க்காமல் ஒதுங்கிவிடுவார்கள். அதேசமயம், வாரிசுகளுக்கு சீட் கொடுப்பதில் இருவேறு கருத்துக்கள் கட்சிக்குள் நிலவி வருகின்றன.

இதுபற்றிப் பேசும் சில நிர்வாகிகள், ' வாரிசுகளுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. கட்சியில் காலம்காலமாக உழைத்து வருபவர்கள், கட்சிக்காரர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள், வெற்றி பெறக் கூடிய திறமை உள்ளவர்கள் என பகுத்துப் பார்த்து சீட் கொடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சீட் கொடுக்க இருக்கிறார்கள். அவர் கட்சி வேலையும் பார்த்து வருவதால், தொண்டர்கள் மத்தியிலும் அறிமுகமானவராக இருக்கிறார். அதுபோன்று செயல்படுபவர்களைக் கண்டறிந்து சீட் கொடுப்பதுதான் கழகத்துக்கும் நன்மை அளிக்கும்' எனத் தெரிவிக்கின்றனர். அறிவாலயத்தில் எழுந்துள்ள இந்த இருவேறு கருத்துக்களுக்கு ஸ்டாலின் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. ` யாருக்கு சீட் கிடைக்கப் போகிறது?' என்பதைப் பொறுத்து தலைமையின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள் சிலர்.