Published:Updated:

பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம்... கைதாகும் கனிமொழி?

பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம்... கைதாகும் கனிமொழி?
பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம்... கைதாகும் கனிமொழி?

பொள்ளாச்சியில், ஏராளமான பெண்களுக்கு நடந்துள்ள பாலியல் வன்கொடுமைகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வலியுறுத்தி, 'அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் நடைபெறும் ' என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவையில் வைத்து கனிமொழி கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது.

பொள்ளாச்சியில், ஏராளமான பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோக்கள் எடுத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், நேர்மையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தி.மு.க மகளிரணி சார்பில் கனிமொழி தலைமையில், பொள்ளாச்சியில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது. இதற்கான அனுமதிக் கடிதத்தை பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் வழங்கினார்கள் திமுக-வினர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாகக் கூறி, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார் கோட்டாட்சியர். இதையே கோவை எஸ்பி பாண்டியராஜனும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், 'அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டம் நடக்கும்' என்று தெரிவித்திருக்கிறார் கனிமொழி. சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை சென்று, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லவிருக்கிறார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு, கனிமொழி கோவை விமான நிலையத்திலேயே கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது. இதனால், கோவை விமான நிலையத்தில் தி.மு.க தொண்டர்கள் குவிந்துவருகின்றனர். கனிமொழி கைதுசெய்யப்படும்பட்சத்தில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பாக வாய்ப்புள்ளது.