சினிமா
தொடர்கள்
Published:Updated:

தமிழகம் தந்திருக்கும் செய்தி!

தமிழகம் தந்திருக்கும் செய்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம் தந்திருக்கும் செய்தி!

தமிழகம் தந்திருக்கும் செய்தி!

டதுசாரிகளுக்கு இது இடறலான காலம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 303 தொகுதிகளில் மலர்ந்த தாமரை, கொஞ்சம் கூடுதலாகவே அரிவாள் சுத்தியலைப் பதம் பார்த்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டு, கேரளாவில் எப்படியோ அடித்துப்பிடித்து வெற்றிபெற்ற ஒரு தொகுதி என வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டுமே மக்களவைக்கு அனுப்பியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து இரண்டு உறுப்பினர்கள். மதச்சார்பற்ற கூட்டணி, மெகா கூட்டணி, மக்கள் கூட்டணி என இத்தனை கூட்டணிகளில் கைகோத்தும் இடதுசாரிகளுக்கு இவ்வளவு பெரிய சறுக்கல் ஏன்?

தமிழகம் தந்திருக்கும் செய்தி!

கேள்விகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்துப் பேசினேன்…

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை எப்போதும் பின்னடைவையே சந்தித்து வந்திருக்கும் தமிழக மார்க்சிஸ்ட் இந்த முறை போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்ததா?

``நிச்சயம் எதிர்பார்த்தது. உண்மையில் 2019 தேர்தலில் இடதுசாரிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதில் தமிழகத்துக்குப் பெரும்பங்கு இருக்கிறது. டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஐந்து இடதுசாரிகளில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலமைப்பை நசுக்கும் சக்திகளுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியை ஒருங்கிணைத்து, பாரதிய ஜனதா கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வலுவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறது.”

மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஏன் இவ்வளவு பின்னடைவு. செங்கோட்டையான கேரளாவில் கூட படுமோசமாகச் சறுக்கியிருக்கிறீர்களே?

``தோல்விக்கான காரணங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கேரளாவைப் பொறுத்தவரை 2004 தேர்தலில் 18 கம்யூனிஸ்ட் எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்பியவர்கள் இந்த முறை எங்களுக்கு வாக்களிக்காததற்குக் காரணம் சபரிமலை விவகாரம்தான். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் சொன்னதைத் தான் நாங்கள் அமல்படுத்தினோம். அரசு அதைத்தான் செய்தாக வேண்டும். ஆனால் கேரள காங்கிரஸ் உச்சநீதிமன்ற உத்த ரவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதன் விளைவாகப் பரம்பரை பரம்பரையாகக் கம்யூனிஸ்டு களுக்கு ஓட்டு போடுபவர்களும் காங்கிரஸுக்கு வாக்களித்தார்கள். மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்களில் எங்களுக்கு ஏற்பட்ட தோல்வியும் இதற்கு ஒரு காரணம். எங்களது முதல்கட்ட வேலை இந்தப் பரம்பரை வாக்காளர்களை மீட்டெடுப்பதுதான்.’’

ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால் கம்யூனிஸ்டுகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகச் சொன்னீர்கள். ராகுல் போட்டியிட்டதும் தோல்விக்குக் காரணமா?

``இடதுசாரிகள் மற்றும் மக்கள் செயற்பாட்டா ளர்கள் அனைவருமே  மக்களைப் பாதுகாக்க ஒன்று திரளவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு, திடீரென காங்கிரஸ் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை நிறுத்தியது மக்களிடம் தவறான செய்தியைக் கொண்டு சேர்த்தது. காங்கிரஸின் முதல் எதிரி இடதுசாரிகள்தான் என்கிற பிம்பத்தை அது உருவாக்கியது. பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதுதான் உங்கள் குறிக்கோள் என்றால் அதற்கு வேறு எந்தத் தென்மாநிலங்களை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாமே? எதற்காகக் கேரளாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.’’

எந்தத் தேர்தலாக இருந்தாலும் இடதுசாரிகள் அரைகுறையான ஆதரவுக்கரத்தைத்தான் காங்கிரஸுக்கு நீட்டுகிறது, ஏன் ஒருபோதும் முழுமனதாக ஆதரவு தருவதேயில்லை?

``2004 தேர்தலில்கூட 59 தொகுதி களில் நாங்கள் வெற்றிபெற்றபோது மன்மோகன் சிங் அரசுக்குத்தான் ஆதரவுக்கரம் நீட்டினோம். ஆதரவு தந்ததில்லை என்பதைவிட தேவையான சமயங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. இருந்தும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் எமர்ஜென்சி தொடங்கி அதிகாரவர்க்கத்தி னருக்கான சட்டங்களை நிறைய நடைமுறைப்படுத்தியிருந்தது. அதுபோன்ற சூழல்களில் நாங்கள் மக்களுக்காக ஆதரவுக்குரல் கொடுத்தோம்.’’

கூட்டணி உட்பூசல்களைத் தவிர்த்தி ருந்தால் மீண்டும் ஒருமுறை பெரும்பான்மை மதச்சார்பு ஆட்சி அமைவதைத் தவிர்த்திருக்கக் கூடும் இல்லையா?

``இந்துத்துவா என்கிற வார்த்தையைக் கண்டுபிடித்த சாவர்க்கரேகூட இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் தொடர்பில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், இவர்கள் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகத் தவறாகப் பயன்படுத்தினார்கள்.  இந்த நாட்டில் அவரவர்கள் தங்களுடைய நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. இந்த தேசத்தில் ஆத்திகம் எத்தனை பழைமையானதோ அதே அளவுக்குப் பழைமையானது நாத்திகம்.
 இந்து மதம் பதிவு செய்திருக்கும் முதல் கடவுள் மறுப்பாளரான சார்வாகர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர். ஆக மதநம்பிக்கையை அரசியலாக்குவதற்கு முன்பு அதைப்பற்றிய அத்தனை கோணமும் அறிந்திருக்க வேண்டும். கூட்டணி உட்பூசல்களைத் தவிர்த்திருந்தாலும் இவர்களது மதவெறி அரசியலைக் கையாள, தனிப்போராட்டம் தேவைப்பட்டிருக்கும்.’’

முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல இருந்திருந்தால் நீங்கள் யாரை ஆதரித்திருப்பீர்கள்… ராகுலா, மாயாவதியா?

(சிரித்துக்கொண்டே…) ``தேர்தல் முடிவினைப் பொறுத்துத்தான் சொல்லியிருக்க முடியும். அதிக எண்ணிக்கையில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவளித்திருப்போம்.’’

பாரதிய ஜனதா கட்சியின் மதவாதத்தை விமர்சிக்கும் அளவுக்கு மதச்சார்பற்ற கூட்டணியின், மெகா கூட்டணியின் ஊழல்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே?

``இது தவறான கருத்து. எங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி பிறகட்சிகளை விமர்சிக்கும் விஷயங்களில் தாங்கள் சரியாக நடந்துகொண்டதில்லை என்றே கூறி வந்திருக்கிறோம். இந்தத் தேர்தலில்கூட, தீவிர இந்துத்துவத்துக்கு (Hardcore hindutva) மாற்று, மென் இந்துத்துவா (Soft hindutva) இல்லை என்றே பிரசாரங்களை மேற்கொண்டோம்.’’

அப்படியென்றால் காங்கிரஸை மென் இந்துத்துவக் கட்சி என்று விமர்சிக்கிறீர்களா?

ஆம், காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. பசுப்பாதுகாவல் என்கிற பெயரில் மக்களை அச்சுறுத்தியது, சாத்வி பிரக்யாவுடன் போட்டியிடுவதற்காகத் தேர்தல் பிரசாரங்களில் சாமியார்களைக் கொண்டு வந்து நிறுத்தியது என மத்தியப்பிரதேசத்தில் அவர்கள் அதைத்தானே செய்துவருகிறார்கள். ஆக, இந்துக்களில் மிகப்பெரியவன் நீயா நானா என்கிற போட்டிதான் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே நடந்துவருகிறது. மாயாவதியைப் பொறுத்தவரை சாதிவாரி வாக்குகளை அவரது மெகா கூட்டணி கணக்கிட்டது. ஆனால், இறுதியில் தோற்றுப்போய் தற்போது கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரப்பிரதேச அரசு அந்த மக்களின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கி யிருக்கிறது. தேர்தலில் ஓட்டு கேட்டு வருபவர்கள் மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளைச் சிந்திக்காமல் சாதிவாரி வாக்குகளை மட்டும் கணக்கில் கொண்டால் அவர்களால் எப்படி ஜெயிக்க முடியும்.’’

நீங்கள் சொல்லும் அடிப்படையில் பார்த்தால்கூட மக்களுக்கான பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியுமே இன்றளவும் மத்தியில் அதிகாரத்துக்கு வர சிரமப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

``தங்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி குரல்கொடுப்பதை மக்கள்தான் கவனிக்க வேண்டும். போராட்டங்களின் வீரியம் மட்டுமே மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும். இம்முறை தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை புல்வாமா தாக்குதலைத்  தங்களது ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்திக்கொண்டது அவர்களுக்குக் கைகொடுத்தது. இந்து முஸ்லிம் பிரிவினையைப் பேசித் தனக்கான வாக்கு வங்கிகளை மோடி உருவாக்கிக்கொண்டார். இந்தத் தேர்தலில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி 27,000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. தனியொரு மாநிலத்துக்கு ஆகும் செலவைவிட இது பல மடங்கு அதிகம். கூடவே வாட்ஸப் வதந்திகள், பொய்ச் செய்திகள் எனத் தங்களுக்கென டார்க் வெப் ஊடகத்தையே அவர்கள் உருவாக்கிக் கொண்டு செயல்பட்டது அத்தனையும் எங்களுக்கு எதிர்வினையானது.’’

மாயாவதியின் சாதி ஓட்டு பற்றிப் பேசும் அதே சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் ஏன் ஒரு தலித் உறுப்பினர்கூட இல்லை?

``தலித் உறுப்பினர்கள் இருக்கும் கட்சிகள் இந்தமுறை தேர்தலில் குறைந்தபட்ச வாக்குகள் கூடப் பெறவில்லையே! பிரச்னை அது இல்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு மாநில வாரியாக எங்கள் கட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் எங்கள் கட்சியில் இருக்கும் இந்தச் சிறுசறுக்கல் விரைவில் சரிசெய்யப்படும்.’’

கம்யூனிஸ்டுகளுக்குள்ளேயே இருக்கும் பிளவுகள் எப்போது ஓயும்? இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட்டும் ஒருங்கிணைக்கப்படுமா?

``இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சி.பி.ஐ(CPI) மற்றும் சி.பி.எம் ஒன்றாகவே செயல்பட்டன.மக்கள் வெளியில் நாங்கள் எப்போதும் ஒருங்கிணைந்தே செயல்பட்டிருக்கிறோம்.  இருந்தும் போராட்டங்களில் ஒன்றாகப் பங்கெடுப்பது போன்ற சிறுசிறு விஷயங்கள் மட்டுமே அதைச் சாத்தியப்படுத்தும். தலைவர்கள் ஒரே மாதிரி யோசித்தாலும் கட்சியில் இருப்பவர்கள் கருத்து முரண்பட்டாலும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமே!’’

ரூபாய்க்கு ஓட்டு பேரம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் இன்னும் கொள்கைசார் அரசியலை நம்புவதாக எண்ணுகிறீர்களா?

``வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகளும் ஓட்டு பேரம் பேசும் கட்சிகளும் மக்கள் பிரச்னையைப் பேசாமல் கடந்துவிட முடியாது. அந்தக் கட்சிகளிடம் விவசாயப் பிரச்னையையும் வேலையில்லாத் திண்டாட்டச் சிக்கலையும் எடுத்துச்சென்றது நாங்கள்தான். ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்க எதிர்ப்பு என மக்கள் போராட்டங்களின் வழியாக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும் நாங்கள்தான். மக்களுக்கு பதில்சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து திசைதிருப்பவே புல்வாமா தாக்குதல் போன்ற பிரச்னைகளை மோடி கையிலெடுத்தார்.’’

தமிழகம் தந்திருக்கும் செய்தி!

மம்தாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கம்யூனிஸ்டுகள் காவிகளின் பக்கம் தாவிவிட்டார்கள் என்பது உண்மைதானா?

``இல்லை. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மீதான வெறுப்பரசியல் அதிகமாக இருந்தது. இந்தியாவை மோடியிடமிருந்து காப்பாற்றுவோம் மேற்கு வங்காளத்தை மம்தாவிடமிருந்து காப்பாற்றுவோம் என்பதுதான் எங்களுடைய கோஷமாகவும் இருந்தது. இதில் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தோம். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எங்குமே காங்கிரஸ் நிறுத்தப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், அவர்கள் செய்த பிழையால் எல்லாம் தலைகீழ் ஆனது. வங்காளத்தில் மம்தாவுக்கு ஓட்டுபோடக் கூடாது என முடிவு செய்து சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டவர் களும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தார்கள். (Is bhar raam phir bhar vaam) இந்த முறை ராம் (பா.ஜ.க) அடுத்தமுறை வாம் (இடதுசாரி) என்பது மக்கள் முடிவு செய்தது.

அரசு கொண்டுவந்திருக்கும் கல்விக்கொள்கை வரைவில் மும்மொழிக் கல்வியைக் கட்டாயப் படுத்தியுள்ளதே?

``புதிய கல்விக்கொள்கை மாணவர்கள் நலன் சார்ந்ததாக இல்லை. பழைய கொள்கை அவர்களின் திறனை வளர்ப்பதில் அக்கறை யுடையதாக இருந்தது. ஆனால், கல்விக் கொள்கையில் கொண்டுவரும் மாற்றம் புராணங்களான இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் வரலாறாகப் போதிக்கிறது. பல பண்பாட்டு நாகரிகங்களைக் கடந்துவந்துள்ள தேசத்தில் இந்துத்துவக் கல்வியைத் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான தொடர்பு மொழியை அவர்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர மத்தியில் இருப்பவர்கள் திணிக்கக் கூடாது.”

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஈழப் பிரச்னை மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பாக உங்கள் கட்சியினருக்குள்ளேயே மாறுபட்ட நிலைப்பாடு இருந்துவருகிறதே?

``படுகொலைகள் எங்கு நடந்தாலும் அது தட்டிக் கேட்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சியினர் அனைவருமே ஒருமித்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். ஈழப்பிரச்னையைப் பொறுத்தவரை பல்வேறு பார்வைகள் இருக்கிறது. சுயாட்சி உரிமையுடன் தனி ஈழம் வேண்டும் என்னும் மக்களின் கோரிக்கை வன்முறைகளின் வழியாக இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரும் மாற்றத்தின் வழியாக மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் கட்சியில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.”

- ஐஷ்வர்யா; படங்கள்: க.பாலாஜி