Published:Updated:

`அம்மா இல்லாத முதல் தேர்தல் இது!' - நேர்காணலில் உருகிய எடப்பாடி பழனிசாமி

`அம்மா இல்லாத முதல் தேர்தல் இது!' - நேர்காணலில் உருகிய எடப்பாடி பழனிசாமி
`அம்மா இல்லாத முதல் தேர்தல் இது!' - நேர்காணலில் உருகிய எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க ஈடுபட்டு வருகிறது. `அம்மா இல்லாமல் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்' என நேர்காணலில் உருக்கத்தோடு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. அதேநேரம், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. நாளை காலை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுடன் தொகுதிப் பங்கீடு நிறைவடைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், அ.தி.மு.க-வுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது தி.மு.க. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் தி.மு.க சீனியர்கள், `அ.தி.மு.கவில் யார் யார் வேட்பாளர்கள் என்ற பட்டியல் வெளியான பிறகு, நாம் நம்முடைய வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்' எனக் கூறியுள்ளனர். இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிரப்புவதற்கு இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. 


அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலிலும் வேட்பாளர்களின் பின்புலத்தை விரிவாக ஆராய்ந்து வருகின்றனர் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்துள்ளது. சிட்டிங் எம்.பி மரகதம் குமரவேல், மாமல்லபுரம் முன்னாள் சேர்மன் எஸ்வந்தராவ், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், பெரும்பாக்கம் ராஜசேகர், சத்யா உள்ளிட்ட 47 பேர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். முதலில் ஒவ்வொருவராக அழைத்துப் பேச நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ` எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?' எனக் கேட்க, ` 47 பேர் ' எனக் கட்சி நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர். 

இதையடுத்து, `அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினால் நேரம் போதாது' எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, அனைவரையும் ஒன்றாக அழைத்துப் பேசினார். அப்போது, ` நீங்கள் அனைவருமே தகுதி வாய்ந்தவர்கள் தான். அம்மா இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. நீங்கள் 47 பேர் வந்திருக்கிறீர்கள். கட்சி சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்துகிறோமோ, அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கழக வேட்பாளரின் வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்' என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.