Published:Updated:

மோடிக்கு மவுசு குறைகிறதா? ஆடை நிறுவனங்கள் சொல்லும் புதுக் கணக்கு!

மோடிக்கு மவுசு குறைகிறதா? ஆடை நிறுவனங்கள் சொல்லும் புதுக் கணக்கு!
மோடிக்கு மவுசு குறைகிறதா? ஆடை நிறுவனங்கள் சொல்லும் புதுக் கணக்கு!

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது `மோடி ஜாக்கெட்'க்கு மக்களிடையே காணப்பட்ட மவுசு, தற்போது மிகவும் குறைந்து போய்விட்டதாகத் தெரியவந்துள்ளது. 

மோடிக்கு மவுசு குறைகிறதா? ஆடை நிறுவனங்கள் சொல்லும் புதுக் கணக்கு!

`நேரு ஜாக்கெட்' எந்த அளவுக்குப் பிரபலமோ அந்த அளவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அணியும் `மோடி ஜாக்கெட்' என்றழைக்கப்படும் `அரைக் கை கோட்' ஆடையும் பிரபலமாக இருந்தது. அதிலும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவர் அணியும் அந்த ஜாக்கெட் பிரபலமாகத் தொடங்கியது. 

மகாராஷ்ட்ரா, குஜராத் உட்பட பல வட மாநிலங்களில் அவரின் ஆதரவாளர்கள் அதேபோன்ற ஜாக்கெட்டைத் தைத்து அணிந்துகொண்டனர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால், நாளொன்றுக்கு ஒரு ஜவுளிக்கடையில் சுமார் 35 ஜாக்கெட்டுகள் விற்பனை ஆகும் அளவுக்கு இருந்துள்ளது. இந்த நிலையில், மோடி தனது 5 ஆண்டுக்கால ஆட்சியை முடித்து அடுத்த தேர்தலைச் சந்திக்கும் சூழலில் அந்த ஜாக்கெட்டுக்கு இருந்த மவுசு குறைந்து போயிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு உதாரணமாக இந்த ஜாக்கெட் அதிகமாக விற்பனையான மகாராஷ்ட்ரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியாகி உள்ளது. 

இங்குள்ள ஜவுளிக்கடைகள் ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்குச் சராசரியாக 35 ஜாக்கெட்டுகள் வரை விற்பனையான நிலையில், தற்போது வாரத்துக்கு ஒரு ஜாக்கெட் விற்பதே பெரும்பாடாக இருப்பதாக இந்தக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால் ஏற்பட்ட விளைவுகள், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி போன்றவைதான் மோடி அலை குறைந்து போனதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

இங்குள்ள பல கடைகளில் கடந்த ஓராண்டில் 'மோடி ஜாக்கெட்' 10 எண்ணிக்கைக்கு மேல் விற்பனையாகவே இல்லை என்று அவற்றின் உரிமையாளர்கள் சொல்கின்றனர். 

மோடிக்கு மவுசு குறைகிறதா? ஆடை நிறுவனங்கள் சொல்லும் புதுக் கணக்கு!

மக்கள் தற்போதெல்லாம் கதர் ஆடைகளை அணிவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஜாக்கெட்டைத் தைத்து தருமாறு யாருமே வருவதில்லை என்று உள்ளூர் டெய்லர்கள் கூறுகின்றனர். ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும் பல நிறுவனங்களும், இந்த ஜாக்கெட்' தைப்பதில் நிபுணத்துவம் பெற்ற டெய்லர்களிடம் தற்போது 'ஃபார்மல் டிரெஸ்' எனப்படும் வழக்கமாக அணியும் சட்டைகளையே அதிகம் தைக்கச் சொல்வதாக தெரிவிக்கின்றன. 

`` வழக்கமாக ஒரு மோடி ஜாக்கெட்  தைப்பதற்கு, வாடிக்கையாளர்கள் சொல்லும் ஸ்டைல் உள்ளிட்டவற்றைப் பொறுத்து நாங்கள் 200 முதல் 300 ரூபாய் வரை கூலி வாங்குவோம். ஆனால்,  தற்போது சாதாரண சட்டைகளை அதிக அளவில் தைக்க முடிவதால், டெய்லர்கள் முன்பைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்" என்று ஆடை நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில், `மோடி ஜாக்கெட்' மீதான மவுசு குறைந்திருப்பது அந்த ஜாக்கெட்டுக்கு மட்டும்தானா அல்லது மோடிக்கும் சேர்த்துதானா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.