அரசியல்
அலசல்
Published:Updated:

உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

விலையில்லா விருந்தகம்... இது விஜய்யின் சர்கார் - 2

று ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட ‘தலைவா - டைம் டு லீட்’ திரைப்படத்தை வெளியிடவிருந்த சமயத்தில், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள், கதைகுறித்த வழக்கு என்று பல பிரச்னைகள் வந்தன. பிரச்னைக்கான முக்கியக் காரணம், ‘டைம் டு லீட்’ என்ற டைட்டில் வரிகள்தான். இந்த நிலையில், தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை மையமாக வைத்து, இந்தக் காலகட்டம்தான், ‘டைம் டு லீட்’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர். சமீபத்தில் இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் காஞ்சிபுரம் மாவட்டம், பனையூரில் ஆலோசனை நடத்திய மக்கள் இயக்கத்தினர், விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த ஆபரேஷனுக்கு ‘சர்கார்-2’ எனப் பெயரிட்டு பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர்!

சர்கார் - 2 ஆபரேஷன் குறித்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தளபதி விஜய், ரசிகர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுப்பதும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதும் வழக்கமானவை. ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். அந்த விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்து விஜய்யுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டவாரியாக நிர்வாகிகள் அனைவரும் பனையூரில் அவரைச் சந்தித்து, பிறந்தநாள் விழா கொண்டாடுவது பற்றிப் பேசினோம்.

அந்தச் சந்திப்பில், ‘வழக்கம் போலத் தையல் மெஷின், துணிமணிகள் கொடுப்பது சரிதான். ஆனால், அதையும் தாண்டி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று விஜய் சொன்னார். உடனே ஒவ்வொருவரும் யோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள் சிலர், ‘மக்கள் மனநிறைவுடன் போதும்... போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான். அதனால், நிரந்தரமாக அன்னதானம் செய்யலாம். அம்மா உணவகத்தில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாம் தினமும் இலவசமாகக் காலை உணவு அளிக்கலாம்’ என்றார். அந்தத் திட்டம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. அதில் உருவானதுதான், ‘விலையில்லா விருந்தகம்’ திட்டம்.

உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

இப்போதைக்கு வட சென்னை, சேலம், நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய ஏழு இடங்களில் விலையில்லா விருந்தகம் திறக்கவுள்ளோம். அரசு தரப்பிலிருந்து பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், போராடி ஓர் ஆண்டு மட்டும் நடத்தப் போகிறோம் என்று அனுமதி வாங்கிவிட்டோம். தினமும் காலை 7:35 மணிமுதல் 8:35 மணிவரை 109 பேருக்கு இட்லி, உப்புமா, கிச்சடி, பொங்கல் என இலவசமாக உணவு அளிப்பதுதான் திட்டம். இதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என்றுதான் விஜய் சொன்னார். ‘ரசிகர்களே செய்கிறோம். அப்போதுதான் பொறுப்பு உணர்வுவரும்’ என்று சொல்லி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிர்வாகி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக வங்கிக்கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதே, இரண்டு மாதங்களுக்குத் தேவை யான நிதியை ரசிகர்கள் செலுத்திவிட்டனர். தொடர்ந்து அனைத்து மாவட்டங் களிலும் மூன்று வேளை இலவச விருந்தகமாக விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

அத்துடன், சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றைச் சரிசெய்து தரும் வேலைகளையும் மக்கள் இயக்கம் கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற பள்ளிகள் தான் எங்கள் இலக்கு. முதல்கட்ட மாகச் சேலம் மாவட்டம், ஆத்தூரில் இரண்டு பள்ளிகள், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியைத் தேர்வு செய்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை, எங்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் செய்துவருகிறோம்” என்ற நிர்வாகிகள், மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரவேசம் குறித்து நடந்த விவாதங்கள்பற்றியும் சொல்ல ஆரம்பித்தனர்.

“விஜய்க்குச் சிறுவயதில் இருந்தே காமராஜரையும் எம்.ஜி.ஆரையும் பிடிக்கும். அவர்கள் இருவரின் முக்கியத் திட்டங்கள் கல்வி மற்றும் உணவு சம்பந்தப்பட்டவை. இவை இரண்டையுமே விஜய் கையில் எடுத்துவிட்டார். முழுக்க முழுக்கச் சேவை மனப்பான்மையில்தான் இந்த இரண்டு விஷயங்களையும் கையில் எடுத்தார் விஜய். அதே நேரத்தில் எங்கள் கலந்துரையாடலில் அரசியல் குறித்தப் பேச்சும் இடம்பெற்றது. நடந்து முடிந்த தேர்தல் குறித்துப் பல விஷயங் களை விஜய்யிடம் பேசினோம்.

அப்போது, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த பிரச்னைகளைச் சொன்னார்கள். திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எட்டு வழிச்சாலை குறித்த பிரச்னைகளைச் சொன்னார்கள். இன்னும் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தண்ணீர் பிரச்னை குறித்துச் சொன்னார்கள். அவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்ட விஜய், ‘இந்தப் பிரச்னைகளில் மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்க முடியுமோ, அந்த அளவு உதவியாக இருங்கள். தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். அரசு அனுமதி பெற்று ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தத்தெடுத்துத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுங்கள். நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களைச் சரி செய்யுங்கள்’ என்று நிர்வாகிகளிடம் சொன்னார். உடனே நிர்வாகிகள் பலர், ‘இந்த வேலைகளைச் சேவையாகச் செய்யலாம். ஆனால், இந்தப் பணி களை நிரந்தரமாக ஊழலற்ற முறையில் செய்ய வேண்டும் என்றால், அதிகாரம் நம் கைகளில் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினோம்.

உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

உடனே சிரித்த விஜய், ‘சினிமாவில் நடித்தது போதும் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘அதெல்லாம் இல்லை. சினிமாவில் நடியுங்கள்... அரசியலிலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்’ என்றோம். அத்துடன், ‘கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை, தனித்து நின்று 3.5 சதவிகித வாக்குகளை வாங்கியுள்ளன. நமது மக்கள் இயக்கத்தில் இருப்பதுபோலக் கட்டமைப்பு இல்லாத மக்கள் நீதி மய்யம், 12 இடங்களில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. நமது மக்கள் இயக்கத்தில் தற்போது, 145 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு பூத்துக்கு ஐந்து பேர் வீதம் கமிட்டி அமைத்துள்ளோம். இப்படிக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் செயல் வீரர்கள் பணி செய்கிறார்கள். இவர்களின் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தணிக்கைக் குழு மற்றும் ஒன்றிய கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். அனைத்துப் பணிகளையும் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளோம்’ என்று விளக்கிச் சொன்னோம்.

உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்!

அரசியல் பிரவேசத்துக்கான திட்டத்தைக் கேட்டார், விஜய். ‘ஆரம்பத்தில் நடிகர் விஜயகாந்த், தன் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில்தான் களம் இறக்கினார். அதன் பிறகுதான் நம்பிக்கை யுடன் நேரடி அரசியலுக்கு வந்தார். அதேபோல வருகிற உள்ளாட்சித் தேர்தலில், நமது மக்கள் இயக்கம் சார்பில், இயக்கத்தின் பெயரிலோ, சுயேச்சையாகவோ களமிறங்கலாம். அதில் நமது வாக்குவங்கியைத் தெரிந்துகொள்ள முடியும். கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றி நமக்குக் கிடைக்கும். பல நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் சேர்மன் மற்றும் மேயர் போன்றோரை நிர்ணயிக்கும் சக்தியாகக்கூட நாம் உருவெடுக்கலாம். பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம். காஞ்சிபுரம், வட சென்னை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகியவை நமக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினத்தில் போட்டியிட வேண்டும்’ என்று சொன்னோம்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட விஜய், ‘ஓ.கே பாஸ், டைம் டு லீட்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதுதான் எங்களுக்கு அவர் கொடுத்த சிக்னல். இறுதியில், ‘தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கு என் படம் போட்ட தங்க மோதிரம் பரிசாகக் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார், விஜய். அதனால் மிக வேகமாக எங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டோம்” என்றனர் உற்சாகமாக.

நிஜ சர்கார் அமைக்க வேகம் மட்டுமல்ல... விவேகமும் தேவை!

- சே.த.இளங்கோவன்