Published:Updated:

“ராகுல் வரட்டும்னு காத்திருக்கோம்!”- தி.மு.க -வைக் கடுப்பேற்றும் காங்கிரஸ்

“ராகுல் வரட்டும்னு காத்திருக்கோம்!”- தி.மு.க -வைக் கடுப்பேற்றும் காங்கிரஸ்
“ராகுல் வரட்டும்னு காத்திருக்கோம்!”- தி.மு.க -வைக் கடுப்பேற்றும் காங்கிரஸ்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்ட நிலையில், எந்தெந்தத் தொகுதிகள் என்பதை அறிவிப்பதில் இதுவரை காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் இழுபறிதான் என்கிறார்கள் தி.மு.க வினர்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.முக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்க உள்ளன. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு கடந்த வாரமே முடிவடைந்துவிட்டது. யாருக்கு எந்தத் தொகுதிகள் என்பதற்கான பேச்சுவார்த்தையில் கூட்டணிக் கட்சியினர், தி.மு.க-வுடன் தொடர்ந்து பேசிவருகின்றனர். 

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளைத் தி.மு.க. குழுவிடம் அளித்துள்ளது. தி.மு.க தரப்பு அதைப் பரீசீலனைக்கு எடுத்துக்கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு ஈஸ்வரனுக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுவதாக தி.மு.க தரப்பு உறுதியளித்துள்ளது. அதே நேரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை எதிர்பார்த்தது. ஆனால், இரண்டு தொகுதிகளை விட்டுதர ஒப்புக்கொண்ட தி.மு.க, இரண்டு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளை வலியுறுத்தியதால் அந்தக் கட்சியினர் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் எவை என்பது முடிவாகிவிட்டது. 

தி.மு.க கூட்டணியில் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டால் தொகுதிகள் பட்டியலை அறிவித்துவிட, தி.மு.க தயாராக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் காலதாமதம் செய்வதை தி.மு.க விரும்பவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகிக் கொண்டிருப்பதால் தொகுதிகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் இதுவரை பேச்சுவார்த்தையை முடிக்காமல் இழுத்தடித்துவருகிறது. 


ஏற்கெனவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் கொடுத்த பட்டியலைப் பார்த்த தி.மு.க தரப்பு அதிர்ச்சியடைந்துவிட்டது. தி.மு.க போட்டியிடலாம் என்று திட்டமிட்ட தொகுதிகளை எல்லாம் அவர்கள் தங்களது பட்டியலில் குறிப்பிட்டிருந்தார்கள். ``அவர்கள் கட்சியில் யார் போட்டியிடப் போகிறார்கள். எந்தெந்தத் தொகுதி என்கிற எந்தத் தெளிவான விவரங்களும் அவர்களிடம் இல்லை. குறிப்பாக, முன்னாள் தலைவர்கள், மூத்த தலைவர்கள் பலர் இந்தமுறை போட்டியிடப் போவதில்லை என்கிற செய்தி உள்ளது. அவர்கள் போட்டியிடாத பட்சத்தில் புதிதாகக் களத்தில் இறங்குபவர்கள், தங்களுக்குச் சாதகமாக உள்ள தொகுதிகளை அவர்களும் கேட்கிறார்கள். திங்கள்கிழமை அன்று மாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, அவர்களுடனும் பேச்சுவார்த்தையை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், டெல்லியிலிருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை என்று சொல்லி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை" என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள்.

அதன்பிறகு தி.மு.க தரப்பிலிருந்து டெல்லியைத் தொடர்பு கொண்டு பேசியதற்கு, ``மாநிலத் தலைமையே முடிவு செய்து கொள்ளச் சொல்லி விட்டோமே” என்று பதில் வந்துள்ளது. இவர்களைக் கேட்டால் ராகுல்காந்தி, நாகர்கோவில் வரும்போது நேரடியாகப் பேசிக் கொள்ளலாம் என்று இப்போது சொல்கிறார்கள். ``குறிப்பாக திருச்சி, சேலம், உள்ளிட்ட தொகுதிகள் பிரச்னையில் இருக்கிறது. தங்கபாலு போட்டியிட்டால் சேலம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளோம். அதேபோல் திருநாவுக்கரசருக்கு சீட் இல்லை என்றால் தி.மு.க, திருச்சியை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லியுள்ளோம். அவர்கள் நாற்பது தொகுதியிலும் போட்டியிடும் மனநிலைபோன்று பேசுவதால் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. எனவே, கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரடியாக ராகுலிடம் பேசி தொகுதியை ஃபைனல் செய்ய முடிவு செய்துள்ளார்" என்றனர். மேலும், ``நாகர்கோவில் வரும் ராகுல்காந்தியும், ஸ்டாலினும் சந்தித்துப் பேசும் போது இந்தத் தொகுதி இழுபறிக்கு முடிவு வந்துவிடும். அதன்பிறகு வியாழக்கிழமை அன்று காலை தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு வந்துவிடும்” என்கிறார்கள்.