Published:Updated:

`ஒருமணி நேரத்துல பதிலடி கொடுக்கணும்!'- `நமோ வாரியர்ஸ் படை'க்கு உத்தரவுபோட்ட நிர்மலா சீதாராமன்

`ஒருமணி நேரத்துல பதிலடி கொடுக்கணும்!'- `நமோ வாரியர்ஸ் படை'க்கு உத்தரவுபோட்ட நிர்மலா சீதாராமன்
`ஒருமணி நேரத்துல பதிலடி கொடுக்கணும்!'- `நமோ வாரியர்ஸ் படை'க்கு உத்தரவுபோட்ட நிர்மலா சீதாராமன்

தேர்தல் பிரசாரத்திற்காக கட்சிகள் மும்முரமாகத் தயாராக ஆரம்பித்துவிட்டன. பா.ஜ.க ஐ.டி விங் தங்களுடைய 'தமிழ்நாடு நமோ வாரியர்ஸ்' அணியை ஒருங்கிணைப்பதற்கான கூட்டத்தைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்கள். இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை  சௌந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சமூக வலைதளங்களில் பா.ஜ.க-வினர் எப்படி செயலாற்ற வேண்டுமென கூட்டத்தில் நிறைய உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாகத் தெரியவே, நமோ படை அவற்றையெல்லாம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுவதற்காக பா.ஜ.க ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசினோம். "கூட்டத்தில் பல உறுதிமொழிகள் எடுத்தோம். நிர்மலா சீதாராமன் மேடம், ஒரு விஷயத்தை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க. மேடையிலும் அதைச் சொன்னாங்க.  'நம்மளோட ராணுவம் செய்த சாகசத்தை நம்ம நாட்டுக்காரங்களே பாராட்டாம பொய்ப்பிரசாரம் பண்ணினாங்க. இனியும் அப்படி நடக்காம இந்த நமோ வாரியர்ஸ் படை அதை முறியடிக்கணும்.

நம்மைப் பற்றி யார் தவறான செய்தி பரப்பினாலும், ஒருமணி நேரத்துல அது தக்க பதிலடி கொடுக்கணும். அதற்கேற்ற மாதிரி தமிழ்நாடு நமோ வாரியர்ஸ் படை தயாராகணும்'னு சொன்னாங்க. அவங்க சொன்னதுக்கு அப்புறம் அதிரடியாக இறங்கி இருக்கிறோம். எங்களுடைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வழியா தினமும் எங்களுடைய கருத்துகளை  முப்பது லட்சம் பேருக்கு ரீச் ஆகுற மாதிரி களத்துல இறங்கியிருக்கிறோம். ஒவ்வொரு ஊரையும் கிளைவாரியாகப் பிரித்து வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சிருக்கோம். இதனுடைய தாக்கம் தேர்தல்ல நல்லா எதிரொலிக்கும் பாருங்க" என்று நம்பிக்கையுடன் முடித்தார்.