Published:Updated:

"பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆதாயம் எனச் சொல்வது அசிங்கம்!" - பாலபாரதி

"பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆதாயம் எனச் சொல்வது அசிங்கம்!" - பாலபாரதி
"பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆதாயம் எனச் சொல்வது அசிங்கம்!" - பாலபாரதி

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை நாசக்காரக் கும்பல் ஒன்று, பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அனல் பறக்க வேண்டிய தேர்தல் அரசியல் களம், தற்போது புஸ்வாணமாகி, பொள்ளாச்சி சம்பவம் பற்றி  எரிந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில வீடியோக்கள் வெளியாகி, அவற்றில் இடம்பெற்றுள்ள பெண்களின் அலறல் ஓலம், இந்தச் சமூத்தைப்பற்றிச் சிந்திப்பவர்களின் தூக்கத்தைப் பறித்திருப்பதோடு, கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பாலபாரதியிடம் பேசினோம்.

``வாழத்தகுதியற்ற நாடு இந்தியா என அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. அதற்கு, இந்தியாவின் மீதுள்ள பொறாமையால் இதுபோன்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று ஆட்சியாளர்கள் வாதாடிச் சாதித்தனர். ஆனால், தற்போது பொள்ளாச்சியில் நடந்தேறியுள்ள நாசகார சம்பவம், அந்த ஆய்வை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், போலீஸ் நிலையத்திற்குச் சென்று துணிச்சலுடன் புகார் கொடுத்ததன் விளைவாக, இந்தக் கொடூரம் வெளியில் வந்துள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தை தேர்தல் ஆதாயத்திற்காகத் தங்களைத் தொடர்புபடுத்துவதாக ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதைவிட மோசமான கருத்து வேறு எதுவும் இருக்க முடியாது. 

ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகன் என்று வெளிப்படையாகத் தெரிய வரும்போது, அதை வெளியுலகிற்குக் கொண்டு வருவதில் என்ன தவறு  இருக்கிறது? இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, பொள்ளாச்சியில் மட்டும்தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளதா, வேறு பகுதிகளிலும் இதுபோன்ற நெட்வொர்க் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று காவல்துறை தரப்பிலும், ஆளுங்கட்சித் தரப்பிலும் அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்?  பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. இந்தச் சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பொறுப்பும்  அவர்களுக்கு இருக்கிறது. 

அதோடு குற்றவாளிக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாகப் பேசும் போது அவர்களுடைய உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு குற்றவாளிகளிடமிருந்து விசாரணை நடத்த வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசினால்தான் இதில் விசாரணை நடத்த முடியும் என்று காவல்துறை சொல்வது மிகுந்த அபத்தமான அணுகுமுறை. அதோடு இந்த வழக்கில் காவல்துறையோ அல்லது சி.பி.சி.ஐ.டியோ, விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வராது. சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திய எத்தனை வழக்குகள் எப்படியான முடிவை எட்டியது என்பது  நமக்குத் தெரியும். எனவே, இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகளே தலையிட்டு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று ஆபாச இணையதளங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பகுதிகளை சைபர் கிரைம் போலீஸார் தீவரமாகக் கண்காணிக்க வேண்டும். இதெல்லாம் ஒருபுறம் என்றால், இந்தச் சம்பவத்தில் காலம் கடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அ.தி.மு.க தலைமையகம் நீக்கியுள்ளது. அதே போன்று பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட புகாருக்கு இன்றுதான் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இப்படியான தொடர் நடவடிக்கைகளே அ.தி.மு.க பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பது என்பதை உணர்த்தும் போது `இது அரசியல் ஆதாயத்திற்காக எழுந்த குற்றச்சாட்டு என்று கூறி மற்ற கட்சிகளின் மீது  பழி போடுவது அசிங்கமாக இருக்கிறது. எனவே, தவறிழைத்தவர்கள் மீது எந்த பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று ஆளுங்கட்சிக்குத் தொடர்பில்லாத ஒரு விசாரணைக் குழுவை அமைத்தால் மட்டுமே இதில் உண்மைக்  குற்றவாளிகளை  நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்"  என்றார்.

இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சி.பி.ஐ அதிகாரிகளாவது ஆட்சிப்  பீடத்தில் இருப்பவர்களின் தலையீடு இல்லாமல் செயல்படுவார்காளா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே  ஏற்பட்டுள்ளது.