Published:Updated:

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வி.சி.க தயங்குவது ஏன்? டெக்னிக்கல் பின்னணி!

தேர்தல் ஆணையம் தன்னுடைய நெறிமுறைகளின் கீழ் அரசியல் கட்சியை மூன்று வகையாகப் பிரிக்கிறது. அது என்னென்ன வகை..

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வி.சி.க தயங்குவது ஏன்? டெக்னிக்கல் பின்னணி!
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வி.சி.க தயங்குவது ஏன்? டெக்னிக்கல் பின்னணி!

டைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் வி.சி.க. தனிச்சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தி.மு.க-வின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளின் கீழ் ஓர் அரசியல் கட்சியானது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சி:

காங்கிரஸ், பி.ஜே.பி., பகுஜன் சமாஜ் ஆகியன தேர்தல் ஆணையத்தால் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள். ஆகவே, அந்தக் கட்சிகளின் சின்னங்களில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர இந்தியாவில் எந்த மூலையிலும் வேறு எவராலும் அதே சின்னத்தில் போட்டியிட இயலாது.

2. மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சி:

தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற மாநிலக் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் மாநில அளவிலான அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை அளிக்கிறது. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், குறிப்பிட்ட ஒரு மாநிலக் கட்சியின் சின்னத்தில் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர, இதர கட்சியினர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க-வின் சின்னங்களை வேறு மாநிலங்களில் வேறு கட்சிகள் பெற முடியும். அப்படிப்பெறும் பட்சத்தில் தமிழகத்தைத் தவிர்த்து  வேறு மாநிலத்தில் வேறு சிலர் இதே சின்னத்தில் போட்டியிடலாம்.

3. பதிவு செய்யப்பட்ட கட்சி:

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குத் தனிச்சின்னம் வழங்குவதற்குச் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, சட்டசபைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த வாக்குகளில் 6 சதவிகிதத்துக்கும் குறையாமல் ஓட்டுகளைப் பெற வேண்டும். அத்துடன் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத் தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவிகிதத்துக்குக் குறையாமல் வாக்குகள் பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் வாய்ப்பு இல்லையெனில் சட்டமன்றத் தேர்தலில், மொத்த தொகுதிகளில் மூன்று சதவிகித வாக்குகளையோ அல்லது மூன்று தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் தனிச்சின்னமும் கிடைக்கும். 

அதே சமயம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய கட்சி என்றாலும் அவர்கள் பெரும்பான்மை தொகுதிகளில் நிற்கிறார்கள் எனில், அவர்களுக்கென தனிச்சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். உதாரணத்திற்கு கமல்ஹாசனின் `மக்கள் நீதி மய்யம்' கட்சிக்குக் கிடைத்த `டார்ச் லைட்' சின்னத்தை மேற்கோள் காட்டலாம். அதேபோல, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட வி.சி.க-வுக்கு தேர்தல் ஆணையம் மோதிரம் சின்னத்தை வழங்கியதையும் இங்கே நினைவுகூரலாம்.

ஆனால், இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு தொகுதிகளில் மட்டுமே நிற்பதால் அந்தக் கட்சிக்கு தனிச்சின்னம் கிடைக்குமா என்கிற விடை சற்று சிக்கலானதுதான். சொல்லப்போனால், உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க நிற்க வேண்டுமென தி.மு.க. தலைமை அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. காரணம், உதயசூரியன் சின்னத்தில் நின்று வி.சி.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களும் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவர். இதனால், தி.மு.க உறுப்பினர்களின் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும். மத்தியில் அந்தக் கட்சியின் பலம் கூடும். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் நின்று வி.சி.க வெற்றிபெறும்பட்சித்தில் தங்கள் கட்சிக்கான தனித்தன்மையை இழந்து முற்றிலும் தி.மு.க. குடையின் கீழ் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதால், வி.சி.க. தயக்கம் காட்டுகிறது.

அரசியல் ஆர்வலர்களிடம் விசாரித்தவரை விடுதலைச் சிறுத்தைகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது உறுதியாகிவிட்டது எனக் கூறுகின்றனர். ஆகவே வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது இதற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. வி.சி.க வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் வேட்பு மனுவுடன் Form A மற்றும் Form B சமர்ப்பிக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தினை வைத்திருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் `இந்த வேட்புமனுத் தாக்கல் செய்பவர் எங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர், அவருக்கு இந்தச் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவும்"  என Form A மற்றும் Form B யில் வேண்டுகோள் விடுப்பார். அவரது சிபாரிசுக் கடிதம் இல்லையெனில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடும்.

வி.சி.க உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டுமென தி.மு.க விரும்பினாலும் தனிச்சின்னத்தில் இந்தத் தேர்தலைச் சந்திப்பதையே வி.சி.கவினர் விரும்புகிறார்கள். அதனையொட்டி தனிச்சின்னம் கோரி டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று மனு அளிக்க அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். வி.சி.க ஏற்கெனவே போட்டியிட்ட மோதிர சின்னத்தை `தமிழக இளைஞர் கட்சி'க்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டதால் வி.சி.கவினர்க்கு மோதிரம் சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவே. ஆனாலும், வேறொரு தனிச்சின்னமாவது தங்களுக்குக் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்திடம் அழுத்தமாகக் குறிப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஒரு கட்சி தேர்தலைச் சந்திப்பதற்குச் சின்னம் மிக முக்கியமான பிம்பமாக இருந்தாலும் அந்தக் கட்சி மக்களிடத்தில் எந்த அளவு அபிமானத்தைப் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் வெற்றி தோல்வி அமையும். இதில் வி.சி,க-வின் நிலை என்ன என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  மே 23ந் தேதி தெரிந்துவிடும்.