Published:Updated:

`இளம்பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்!' - பொள்ளாச்சி விவகாரத்தில் எச்சரிக்கும் திருமாவளவன்

`இளம்பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்!' - பொள்ளாச்சி விவகாரத்தில் எச்சரிக்கும் திருமாவளவன்
`இளம்பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்!' - பொள்ளாச்சி விவகாரத்தில் எச்சரிக்கும் திருமாவளவன்

"பொள்ளாச்சியில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது,  தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. இதுகுறித்து,  நீதிமன்ற கண்காணிப்புக் குழுவின்  விசாரணை கேட்டு, வருகிற 15-ம் தேதி, சென்னையில் எனது தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று  நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், வீரமணி உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். நாகர்கோவில் செல்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு வந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி.  தமிழகம், புதுச்சேரி உட்பட, 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். பொள்ளாச்சியில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது,  தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. தமிழக அரசு இந்த வழக்கைத் தானாக சிபிசிஐடி-யில் இருந்து சிபிஐ-க்கு மாற்ற முடிவுசெய்திருக்கிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் இதில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.

இது, செக்ஸ் ரீதியான பிரச்னை மட்டுமல்ல. வணிகம் தொடர்பான பிரச்னையாகவும் தெரிகிறது. ஏனெனில், இளம்பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் அறிகிறோம். எனவே, நீதிமன்ற கண்காணிப்புக் குழுவின்  விசாரணை கேட்டு, வரும்    15-ம் தேதி, சென்னையில் எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சமூக வலைதளங்களில், ஆபாச படங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். ஆபாச பட இணையதளங்களைத் தடை செய்ய வேண்டும். இதுதான் இளைய தலைமுறையினரை சீரழித்துக்கொண்டிருக்கிறது. முகநூல், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

ஸ்டெர்லைட் போன்ற விஷயங்களில் அரசு உடனுக்குடன் செயல்பட்டு, மக்கள்மீது நடவடிக்கை எடுப்பது கார்ப்பரேட்டுகளின்  கட்டுப்பாட்டில் அதிகார வர்க்கம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. பொள்ளாச்சி விவகாரம் சமூக பிரச்னை என்பதால், அரசு அலட்சியப்படுத்துகிறது. இதில், அரசு மெத்தனம் காட்டக்கூடாது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 4 பேர் தவிர, சில அரசியல் புள்ளிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் என ஒரு இளைஞர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். எனவே, இதை அலட்சியம் காட்டாமல் விசாரணை செய்ய வேண்டும்.

இதில், விசாரணை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. எனவே, விசாரணை நேர்மையாக நடைபெறாது. எனவே, நீதிமன்ற கண்காணிப்புக் குழுவின்  விசாரணை வேண்டும். மோடி, நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நாள்களைவிட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுதான் அதிகம். அந்தப் பயணம் கார்ப்பரேட்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், எல்லையில் பதற்றம் ஏற்படுகிறது. பா.ஜ.க-வால் மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு ஆபத்து. மோடி ஆபத்தானவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவேதான், ஜனநாயகக் கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் வழங்குவது என்பது விவாதிக்கப்படக்கூடிய விஷயம் அல்ல. கூடிய விரைவில் சின்னம் கிடைக்கும்" என்றார்.