Published:Updated:

`ஹாய் ராகுல்!' - ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடந்த சுவாரஸ்ய கலந்துரையாடல்

`ஹாய் ராகுல்!' - ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடந்த சுவாரஸ்ய கலந்துரையாடல்
`ஹாய் ராகுல்!' - ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடந்த சுவாரஸ்ய கலந்துரையாடல்

சென்னை வந்துள்ள ராகுல்காந்தி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாடினார். இந்த உரையாடலில் அவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன. 

`வெள்ளை ஜிப்பா' அல்லது அந்த ஜிப்பா மேல் ஒரு கறுப்புக்கலர் ஜாக்கெட்  அணிந்த ராகுலைத்தான் நமக்குத்தெரியும். பெரும்பாலும் அந்த ராகுலைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். வெள்ளை கலர் என்பது அரசியல்வாதிகளுக்கே உண்டான ஆஸ்தான நிறம். அந்தக் கலர் ஆடையை தவிர்த்து அவர்களைப் பார்ப்பது அபூர்வம். ராகுலையும் இதே உடையில் தான் பார்த்துப் பழகியிருக்கிறோம். `டி-சர்ட் வித் ப்ளூ ஜீன்ஸ் அணிந்த ராகுலை' எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா. அப்படியான உடையுடன்தான் சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு முன் தோன்றி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்.  கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பரப்புரை இன்று நாகர்கோவிலில் நடக்கயிருக்கிறது.

இதற்காக தமிழகம் வந்த ராகுல், சென்னையிலுள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் திரளான மாணவிகள் கூட்டத்தினிடையே அவர் உரையாடினார். முன்னதாக மாணவிகளிடம், `கடினமான கேள்விகளைக் கேளுங்கள்' என்று தொடங்கினார். அப்போது, `நான் அஸ்ரா பேசுகிறேன்' என்று மாணவி ஒருவர் கேள்வி கேட்கத்தொடங்கினார். `நீங்கள் எங்க இருக்கிறீர்கள்' என்று கேட்ட ராகுல் சில நொடிகளில் அந்த மாணவியைக் கண்டறிந்தார். `ஹாய் சார்!' என்று தொடங்கினார். இடைமறித்த ராகுல், `நீங்கள் சார் என்பதற்குப் பதிலாக ராகுல் என்றே கூப்பிடுங்கள். அது எனக்கு இன்னும் கம்ஃபர்டபுளாக இருக்கும்' என்ற உடன், குழுமியிருந்த மாணவிகள் ஆரவாரம் செய்தனர். `எனக்கு சற்று பதற்றமாக இருக்கு!' என்றபடி `ஹாய் ராகுல்!' என்று அந்த மாணவி சொன்னதும் மாணவிகள் கத்தத் தொடங்கினர். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து கேள்விகள் கேட்ட மாணவிக்கு பதிலளித்த அவர், ``பெண்களை மதிப்பதில் வட இந்தியாவைவிட தென்னிந்தியா தான் சிறந்து விளங்குகிறது. கல்விக்கு என்று அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வித்தரம் இருக்க வேண்டும். மாணவிகள் மத்தியில் பிரதமர் மோடி எத்தனை முறை நேருக்கு நேர் சந்தித்து மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்றார். ஒரு மாணவி, ``உங்கள் அம்மாவிடம் உங்களுக்குப் பிடித்தது எது" என்று  கேள்வி எழுப்பினார். அதற்கு ``திறமை" என்று கூறிய ராகுல், ``உங்களுடைய  அம்மாவிடம் பிடித்தது  எது" என மாணவியிடம்  கேட்டார். அதற்கு  அந்த மாணவி, ``யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் பாங்கு" என்றார்.

மாணவி ஒருவர், `நீரவ் மோடி பற்றி பேசும் நீங்கள், ராபர்ட் வதேராவைப்பற்றி ஏன் பேசவில்லை' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், `யாரையும் விசாரிக்க அரசுக்கு அனுமதி உண்டு. நானும் சொல்கிறேன் ராபர்ட் வதேராவை விசாரியுங்கள். அதேசமயம் ரஃபேல் விவகாரத்தில் மோடியையும் விசாரியுங்கள்'' என்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்னையா. ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்னை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை பற்றி முடிவெடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை. இலங்கை படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கு காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் நினைக்கவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது'' என்றார்.