Published:Updated:

`நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் தேவை!' - நாகர்கோவிலில் கூட்டணிக் கட்சிகள் முழக்கம்

`நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் தேவை!' - நாகர்கோவிலில் கூட்டணிக் கட்சிகள் முழக்கம்
`நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் தேவை!' - நாகர்கோவிலில் கூட்டணிக் கட்சிகள் முழக்கம்

``நம் நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் வேண்டும். மதச்சார்பற்றதன்மையைக் காக்க நாங்கள் கூட்டணியில் இணைந்துள்ளோம்'' என நாகர்கோவிலில் ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முழங்கினர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்ட ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் பேசுகையில், ``2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வண்டலூரில் மோடியை அழைத்து வந்து நான் பொதுக்கூட்டம் நடத்தினேன். பின்பு நான் அங்கிருந்து வந்தது காலத்தின் கட்டாயம். நான் அடிப்படையில் தேசிய சிந்தனை கொண்டவன் என்பதால் பா.ஜ.க.வுடன் இணைந்தேன். அதே தேசிய சிந்தனை காங்கிரஸ் மூலமாக நிறைவேறியது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என மோடி கனவுக் குதிரையைத் தட்டிவிட்டார். அன்று மோடி அலை இருந்தது உண்மைதான். எந்த அலைக்கும். ஒரு காலம் உண்டு. மோடி அலை இப்போது ஓய்ந்துவிட்டது" என்றார்.

கொங்கு ஈஸ்வரன் பேசுகையில், ``குஜராத் மாடல் எனக் கூறி மோடி ஆட்சிக்கு வந்தார். அலகாபாத், சூரத் போன்ற சில நகரங்களை அழகுபடுத்தியிருக்கிறார். கிராமங்களை நாம் பார்க்கவில்லை. நமது கிராமங்களைவிட மோசமாக இருக்கிறது. கங்கை, காவிரி இணைப்போம் என்றார் செய்யவில்லை. சொல்லாததைச் செய்தார். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. எனக் கேட்காததைச் செய்தார். இப்போது நான்குமுறை வந்துசென்ற மோடி, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை சாதனை என மக்களிடம் சொன்னீர்களா. ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் கேட்கிறார்கள். ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை வெளியே வர வேண்டும் என்றால் மத்தியிலும், மாநிலத்திலும் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்" என்றார்.

ம.ம.க. பொதுச்செயலாளர் ஜவஹிருல்லா பேசுகையில், ``விடுதலை இந்தியாவின் தலையெழுத்தை முற்றிலும் மாற்றக்கூடிய தேர்தல் இது. அகமதாபாத்தில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடந்தது. இந்தியா காந்தியின் இந்தியாவாக இருக்க வேண்டுமா கோட்சேவின் இந்தியாவாக இருக்க வேண்டுமா எனக் கேட்டிருக்கிறார். மதச்சார்பற்ற தன்மை இல்லாமல் பிரிவினையை ஏற்படுத்துவது கோட்சேவின் இந்தியா. மதச்சார்பற்ற தன்மையை வளர்ப்பது காந்தியின் இந்தியா. மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும், மாநில உரிமைகள் நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காகத் தியாகங்கள் செய்து நாங்கள் நாற்பது தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறோம். மதச்சார்பற்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

திருமாவளவன், ``மதச்சார்புள்ள அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். எதிர் அணியிடம் கேட்டால் எதற்காகக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்ற பதில் இல்லை. அது கொள்ளைக் கூட்டணி; இது கொள்கைக் கூட்டணி. மோடி ஆட்சியில் வளர்ச்சி மாற்றம் எனக்கூறி அதானி, அம்பானி ஆகியோருக்கான ஆட்சியாக உள்ளது. வலதுசாரி பயங்கரவாதிகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அனைவரையும் தாய்மதத்துக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறுகிறார்கள். பசு பாதுகாவலர்கள் என அடுப்படியில் என்ன குழம்பு வைத்திருக்கிறார்கள் எனப்பார்த்து படுகொலை செய்கிறார்கள். இந்த தேசத்தைக் காப்பாற்ற நாம் ஒன்றுகூடியுள்ளோம். தமிழகத்தில் கைகோத்த இந்த அணி இந்த தேசத்தை காக்க பிரதமர் பதவியில் ராகுல் காந்தியையும், தமிழக முதல்வர் பதவியில் ஸ்டாலினையும் அமரவைப்போம்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் பேசுகையில், ``இது தேர்தலுக்கான அணி அல்ல. மாநில நலனுக்காக, மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றைப் பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் தேவை. மத்திய அரசுக்கு அடிமையாகச் செயல்படும் தமிழக அரசும் அகற்றப்பட வேண்டும்" என்றார். மோடி ஆட்சி தொடர்ந்தால் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்காது. மதச்சார்பின்மை, பண்பாடு ஆகியவை சிதைந்துவிடும். அம்பேத்கர் உருவாக்கிய சாசனம் அடங்கிய இந்தியாவாக நம் நாடு இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., வர்ணாசிரம சாசனம் கொண்ட இந்தியாவாக இருக்கக்கூடாது" என்றார்.