Published:Updated:

`உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்' - நாகர்கோவிலில் ஸ்டாலின் பேச்சு!

`உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்' - நாகர்கோவிலில் ஸ்டாலின் பேச்சு!
`உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்' - நாகர்கோவிலில் ஸ்டாலின் பேச்சு!

ராகுல் அவர்களே ஒளிமயமான இந்தியாவைத் தாருங்கள் என நான் முன்மொழிகிறேன் என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார்.

`உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்' - நாகர்கோவிலில் ஸ்டாலின் பேச்சு!

நாகர்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரம் இன்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ``இமயம் முதல் குமரிவரை பரந்துவிரிந்துள்ள இந்திய துணைக்கண்டத்தின் கடைசி முனையில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் வருங்கால இளம் பிரதமர் ராகுல் காந்தியை கூட்டணிக் கட்சி சார்பில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகம் சார்பில் வரவேற்கிறேன். இன்னும் சில வாரங்களில் ராகுல் காந்திதான் பிரதமர் என உறுதியோடு சொல்லுகிறேன். இந்திய தேசம் உங்கள் கையில் பாதுகாப்பாக, மதச்சார்பற்றதாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருக்கிறது. நம்பிக்கை மட்டும் அல்ல எதிர்பார்ப்பும், ஆசையும் அதுவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன்பே ராகுல் காந்தி அடுத்த பிரதமர் எனத் துணிச்சலாக நான் கூறினேன். தனிப்பட்ட ஸ்டாலினாக அல்ல, ஐந்துமுறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. தலைவர் கலைஞருடைய மகனாக நான் இதைச் சொல்கிறேன்.

1980-ல் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என இந்திராகாந்தியை முன்மொழிந்த கலைஞரின் மகனாக நான் இதை முன்மொழிகிறேன். இந்திராவின் மருமகளே வருக என 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை முன்மொழிந்த கலைஞரின் மகனாக நான் இதைக் கூறுகிறேன். ராகுல் அவர்களே ஒளிமயமான இந்தியாவைத் தாருங்கள் என நான் முன்மொழிகிறேன். இந்தியா இப்போது இருள் மயமாக இருக்கிறது. மோடி புதுப்புது ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான தொப்பிகள் அணிந்துகொண்டு நாடு நாடாகச் சுற்றிக்கொண்டு வருகிறார். மோடிதான் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார், இந்தியா ஒளிமயமாக மாறவில்லை. வளர்ச்சி எனக்கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி. இப்போது தளர்ச்சியைத்தான் பார்க்கிறோம். மூன்றாவது நிதி ஆண்டில் 6.6 சதவிகிதம் நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது. புதிய திட்டங்கள் வரவில்லை, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. கறுப்புப்பணம் ஒழிப்பதுதான் முதல் லட்சியம் என்றார்.

இந்தியாவுக்கு வெளியே 90 லட்சம் கோடி கறுப்புப்பணம் இருக்கிறது. அதை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வேன் என்றார் மோடி. 15 லட்சம் எனக்கூறியவர் 15 ரூபாய் கூட வங்கிக்கணக்கில் போடவில்லை. கண்கட்டி வித்தைக்காரரைப் போலக் கறுப்புப்பணம் இருக்கிறது எனக் கூறியவர், கறுப்புப்பணத்தை மீட்கவில்லை. கறுப்புப்பணத்தைக் கண்டுபிடிப்பதாகக் கூறி நல்ல பணத்தை எல்லாம் மதிப்பிழக்க வைத்தார். ஒரு திருடனைக் கண்டுபிடிக்க, ஊரில் இருக்கும் அனைவரையும் கைது செய்து சிறையில் வைத்து அதிலிருந்து திருடனைக் கண்டுபிடிக்கும் அதி புத்திசாலிதான் மோடி. ஊழலே இல்லை எனக் கூறினார். ரஃபேல் ஊழல் ஒன்று போதாதா. ரஃபேல் விமானத்தை 48 சதவிகிதம் விலை ஏற்றி வாங்கியதாக இந்து ராம் ஆவணங்களை வெளியிட்டார். அவர் ஆவணங்களைத் திருடியதாக கூறினார்கள். அதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். இந்து ராம் மீது நடவடிக்கை எடுத்தால் இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் அவருக்குப் பக்கபலமாக இருக்கும்.

`உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்' - நாகர்கோவிலில் ஸ்டாலின் பேச்சு!

இந்து, ராம் ஆகிய இரண்டு வார்த்தைகளை வைத்துத்தான் ஆட்சிக்குவர நினைத்தீர்கள். ஆனால் இந்துவையும், ராமையும் பார்த்து நீங்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. வடக்கே படேல் பெயரையும், தெற்கே காமராஜரையும் கூறி ஓட்டுக் கேட்கிறார். உங்கள் கட்சியில் உள்ள ஒருவரைக் கூறி ஓட்டு கேட்கமுடியவில்லை என்பது வெட்கக்கேடு. தமிழகத்தில் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி மொத்தத்தில் பினாமி ஆட்சியை நடத்துகிறது பா.ஜ.க.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளனர். ஊழல், கொள்ளைக்கார, கொடுமைக்கார ஆட்சி இப்போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆட்சியாகிவிட்டது. நாம் சந்திக்க இருப்பது இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போர். ஆட்சி மாற்றம் அல்ல அதிகார மாற்றம். பாசிச மோடி ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி தலைமையில் கூடியிருக்கிறோம். உங்களை ஆதரிக்க ஒரே காரணம் நீங்கள் மோடி அல்ல ராகுல்" என்றார்.