Published:Updated:

`மோடியை ஏன் கட்டிப்பிடித்தேன்?’ - ஸ்டெல்லா மாரிஸ் மாணவிக்கு ராகுலின் ஜாலி பதில்

`மோடியை ஏன் கட்டிப்பிடித்தேன்?’ - ஸ்டெல்லா மாரிஸ் மாணவிக்கு ராகுலின் ஜாலி பதில்
`மோடியை ஏன் கட்டிப்பிடித்தேன்?’ - ஸ்டெல்லா மாரிஸ் மாணவிக்கு ராகுலின் ஜாலி பதில்

அவர் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். என்னையும் எங்கள் கட்சியையும் என் பாட்டியையும், அம்மாவையும், அப்பாவையும் எல்லோரையும் கொடுமையானவர்கள் எனப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் கோபம் குறையவில்லை.

சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது, மோடியை ஏன் தான் கட்டிப்பிடித்தேன் என்பது பற்றி விளக்கம் அளித்தார்.

கல்லூரி மாணவிகளுடன் ராகுல், ஏராளமான கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தார். அந்தக் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கடைசிக் கேள்வியாக ``நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்தது ஏன்?’’ என மாணவி ஒருவர் கேட்டார். ராகுல் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கும் முன்னரே, குழுமியிருந்த மாணவிகளின் சிரிப்பொலிகளும் கைத்தட்டல்களும் அரங்கை அதிரவைத்தன.

கைத்தட்டல் ஓய்ந்ததும், ``எதற்காக  மோடியைக் கட்டிப்பிடித்தேன் என்றால், அவர் பேசியதை அவருக்கு எதிரே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். என்னையும் எங்கள் கட்சியையும், என் பாட்டியையும் அம்மாவையும் அப்பா உள்ளிட்ட அனைவரையும் கொடுமையானவர்கள் எனப் பேசிக்கொண்டிருந்தார். மோடியின் பேச்சில் கோபம் குறையவில்லை. வெறுப்பு அதிகம் இருந்தது.

இந்த மனிதர் உலகின் அழகியலைப் பார்க்கவில்லை. அவருக்குள் ஊற்றெடுக்கும் கோபம், அவர் கண்களை மறைக்கிறது என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் எனக்கு அவர் மீது அன்பு வந்தது. வெறுப்பையும் கோபத்தையும் ஆற்றுப்படுத்தக்கூடிய ஆற்றல் அன்புக்கு மட்டும்தானே இருக்கிறது. அதைத்தானே இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், ஜைனம் என எல்லா மதங்களும் போதிக்கின்றன. 

மோடியைக் கட்டிப்பிடித்ததுக்கு இன்னொரு காரணம், அவர் மூலமாக நான் நிறைய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டேன். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அப்போது நான் இளம் அரசியல்வாதியாக இருந்தேன். இப்போதும் இளமையானவன்தான். அந்தத் தோல்வி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. இன்னும் அதிகமாகச் சிந்திக்க வைத்தது. அதற்கு மோடியும் ஒரு காரணம். நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர் ஒருவருக்கு யாராவது வெறுப்பைப் பதிலாகக் கொடுப்பார்களா. அதனால்தான் அவரைக் கட்டிப்பிடித்தேன். 

இதுதொடர்பாக, பொதுவாக ஒரு கருத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன். உங்களை வெறுப்பவரை நீங்கள் வெறுத்தால் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியாது. அது, மேலும் வெறுப்பில்தான் போய் முடியும். மாறாக, அவரிடம் அன்பு செலுத்திப் பாருங்கள். அங்கே நீங்கள் ஏதோ கற்றுக்கொள்வீர்கள். வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தருவதுதானே, நம் நாட்டின் பெருமை. குறிப்பாகத் தமிழகத்தின் பெருமை’’ என ராகுல் பேசி முடித்ததும், மாணவிகளின் கரவொலிகளால் மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.

சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கேள்வி - பதில் உரையாடலில் டிமானிடைசெஷன், ரஃபேல் ஊழல், ராபர்ட் வதேரா, ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, பெண்களின் சம உரிமை, நாட்டின் கல்வி உரிமை, தென்னிந்தியாவை மத்திய அரசு அணுகும் விதம் எனப் பல கேள்விகளை மாணவிகள் முன்வைத்தனர். ராகுல் காந்தியின் ஒவ்வொரு பதிலுக்கும் மாணவிகள் பலத்த கைத்தட்டல் கொடுத்து வரவேற்றனர். ``நான் மேடையிலும் நீங்கள் கீழேயும் நின்றுகொண்டு இந்தக் கேள்வி - பதில் நடப்பதே எனக்குப் பொருத்தமானதாக இல்லை. நாம் இருவரும் சமமான தளத்தில் நின்றுதான் இதைப் பேசியிருக்க வேண்டும்’’ ராகுல் சொல்லி முடிப்பதற்கு முன்னரே மாணவிகள் கைதட்டத் தொடங்கினர். அந்தக் கரவொலி அடங்குவதற்கு வெகுநேரமானது. 

எல்லா கேள்விகளுக்கும் புன்முறுவலுடன் பதிலளித்த ராகுல் காந்தி, சற்றே தீர்க்கமான குரலில், ``மூவாயிரம் பெண்களுக்கு நடுவில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கத் தயார் என நான் உங்கள் முன்வந்து நிற்கிறேன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரதமர் மோடி ஒருமுறையேனும் நின்றிருப்பாரா’’ என வினவியது, இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.
 

அடுத்த கட்டுரைக்கு