Published:Updated:

தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?
தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

சென்ற ஆட்சிக்காலத்தில் ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்திய மோடி அரசு, இந்த முறை ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது.

தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது பா.ஜ.க-வின், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். இதற்கு முன்பாக பல்வேறு காலகட்டங்களில் பேசப்பட்ட விஷயம்தான் என்றாலும், மத்தியில் வலுவான ஓர் ஆட்சியை அமைத்துவிட்ட சூழலில், பெரும் நம்பிக்கையுடன் இம்முயற்சியில் மோடி இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. எனவேதான், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அரசின் செயல்திட்டத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்பட்டுள்ளது.

இதுபற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதிநிதித்துவம் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மோடி தலைமையில் ஜூன்
19-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்கவில்லை.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ சாத்தியமில்லை என்று தெரிவித்ததாகச் செய்திகள் வந்துள்ளன. தற்போது, வறட்சி உட்பட அவசரமாக விவாதிப்பதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ள நிலையில், இதற்கு ஏன் பிரதமர் இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

“இந்தியாவில் 70 சதவிகிதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மைப் பிரச்னை உள்ளது. ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல்களை நடத்துவது பற்றிப் பேசுவதற்கு பிரதமர் கூட்டம் போடுகிறார். உண்மையான பிரச்னைகளிலிருந்து, ஒட்டுமொத்த தேசத்தையும் திசைதிருப்பும் வேலை இது” என்று குற்றம்சாட்டுகிறார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

தொடர்ந்து அவர், “ `ஒரு தேசம் ஒரே தேர்தல்’ என்பது இன்றைய சூழலில் நடைமுறைச் சாத்தியமா என்று பார்க்க வேண்டும். இதில் பிரதமருக்கு ஆர்வம் இருக்குமானால், முதலில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எல்லோரும் கூட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பது சரியல்ல.

தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

இதற்கெல்லாம் முன்பாக முதலில் முக்கியமான பல தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. விகிதாசார பிரதிநிதித்துவம் குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களின் வாக்குகளே இல்லாமல், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்களைப் பெற முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவமே இல்லை. இவைபற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இப்போது, தேர்தலில் பெரும்பாலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதில்லை. இதனால், பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தச் சூழலில், ஒரே நேரத்தில் எல்லாத் தேர்தல்களையும் நடத்துவது என்று கொண்டு வந்தால், பல மாநி லங்களில் கவர்னர் ஆட்சிதான் நடக்கும். ‘மோடி தான் வேட்பாளர்’ என்று எல்லா இடங்களிலும் முன்னிறுத்தி, தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று பி.ஜே.பி நினைக்கிறது. ஆனால், இதன் காரணமாக அரசிய லமைப்புக்கே பெரும் நெருக்கடி ஏற்பட்டுவிடும்” என்கிறார்.

ஒரு நாடு ஒரு தேர்தல் முறைக்குப் பல கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததாக, அனைத்துக் கட்சிக்  கூட்டம் முடிந்த பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆனால்,  கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை மறுக்கிறது.

 “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது நடைமுறை ரீதியில் சாத்தியமல்ல. அதைக் கொள்கை ரீதியாக நாங்கள் ஏற்கவில்லை. இதை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுத்து மூலமாகவே அளித்துள்ளார்” என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்.

தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

தொடர்ந்து அவர், “ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைச் சீர்குலைக்கிற வேலை.

‘இந்தியாவில் ஒற்றை ஆட்சிதான் இருக்க வேண்டும். மாநில அரசுகள் இருக்கக் கூடாது. கூட்டாட்சி என்பது இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு உதவாது’ என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படை யான கோட்பாடு.  அதன் அடிப்படை யில்தான், `ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தேர்தல்’ என்று போகிறார்கள்.

ஒரு நாடு ஒரு தேர்தல் என்று வந்துவிட்டால்,  தங்களுக்குப் பிடிக்காத மாநில அரசுகளைக் கவிழ்த்துவிட்டு, அதைத் தங்கள் ஆளுகையின்கீழ் வைத்துக்கொள்ள முடியும். இந்த முறையில், இந்தியா முழுவதையும் மத்திய ஆட்சியின் கீழ் ஒரே விதமான ஆட்சியை நடத்த முடியும். ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதால், செலவைக் குறைக்க முடியும் என்று சொல்கிறார்கள்.  ஜனநாயகம் முக்கியமா, செலவைக் குறைப்பது முக்கியமா என்று பார்க்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு மாநில அரசு கவிழ்ந்துவிட்டால், செலவைக் காரணம் காட்டியே அங்கு தேர்தலை நடத்தமாட்டார்கள்.  இப்போதே மாநிலங்களின் பெரும்பாலான அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுக்குப் போய்விட்டன. ஒரு தேர்தல் என்று வந்துவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும். நாடு முழுமைக்கும் ஒற்றை ஆட்சி முறை என்பதைக் கொண்டுவரவே, இந்த முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளார்கள்” என்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார், பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

“பா.ஜ.க என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டும், மோடி என்ன சீர்திருத்தம் கொண்டுவந்தாலும், அதற்கு ‘மக்கள் விரோதம்’ என்று முத்திரை குத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகளும், மோடி எதிர்ப்பாளர்களும் நினைக்கிறார்கள்.

‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்பது மோடி முன்மொழிந்தது அல்ல. நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான சட்ட கமிஷன் கடந்த ஆண்டு இதை முன்மொழிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசம் ஒன்று, தேர்தலும் ஒன்றா?

அந்த விஷயத்தை விவாதிப்பதற்காகத்தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். முதற்கட்டக் கூட்டம் முடிந்து, எந்த வரைவுத்திட்டமும் வெளியிடப்படாத நிலையில், இதுபற்றிய ‘முழுத் தீர்ப்பையும்’ எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் வழங்கிவருவது வேடிக்கையாக இருக்கிறது.

ஆண்டு முழுவதும் தேர்தல் நடைபெற வேண்டுமாம். அப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்தை மக்களால் வெளியிட முடியுமாம். அதுதான் ஜனநாயகமாம்.

இந்தச் சீர்திருத்தம் வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் வரும். தோல்வியுற்றவர்கள் ஐந்து ஆண்டுகள் ‘தேவுடு காக்க’ வேண்டும். அவர்களால் பதவி இல்லாமல்  ஐந்து ஆண்டுகள் எப்படி சும்மா இருக்க முடியும்?  இதைப் பெரும்பாலான மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதற்குக் காரணம், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிமுறை வந்துவிடும் என்கிற பயம்தான்.

அதாவது, மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்  மலையேறிவிடும். இவர்கள், ‘மாநில உணர்வுகளை  மதிக்கிறோம்’ என்கிற பெயரில், மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெற்றிபெறும் சூத்திரத்தைப் பின்பற்றிவருகிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால், தேசிய உணர்வுடன் இணைந்த மாநில உணர்வுகளே மேலோங்கி இருக்கும். எனவே, தங்கள் நிலை கவலைக்கிடமாகிவிடுமோ என்கிற பயத்தில், மாநிலக் கட்சிகள் எழுப்பும் ஓலம்தான் இந்த எதிர்ப்பு.”

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால் செலவு மிச்சம் என்கிறார்கள். அதாவது சுமார் 5,000 கோடி ரூபாய். ஒரு மாதத்துக்கு ஜி.எஸ்.டி வரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்குப் போகிறது. அப்படியிருக்கும்போது, நாட்டின் ஜனநாயகத்துக்காக ரூ.5,000 கோடி பெரிய செலவா என்கிற வாதமும், அடிக்கடி தேர்தல் வந்தால் மக்களை ஆட்சியாளர்கள் அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு கிடைக்குமே என்கிற வாதமும் புறந்தள்ள முடியாதவையாகத் தோன்றுகின்றன.

ஆ.பழனியப்பன்;

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு