அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

முன்கூட்டியே வந்துவிட்ட கழுகார், ‘‘கேம்  ஓவர்... கேம் ஓவர்...’’ என்று சொல்லிக் கொண்டே வழக்கமான தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி மொபைல் போனை மாற்றி மாற்றி அழுத்திக்கொண்டிருந்தார்.

சட்டென்று உள்ளே நுழைந்த நாம், ‘‘இதென்ன குழந்தைத்தனமாக விளையாட் டெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று ஆரம்பித்தோம்.

‘‘அப்படியென்றால், காங்கிரஸும் தி.மு.க-வும் தற்போது மோதிக்கொள்ள ஆரம்பித்திருப்பதை ‘குழந்தைத்தனம்’ என்பீரோ?’’ என்று செய்திக்காக லீட் எடுத்த கழுகார், சிரித்தபடியே தொடர்ந்தார்.

‘‘இங்கே தி.மு.க-வும் காங்கிரஸும் உரசிக்கொள்ள ஆரம்பித்துள்ளன. உதயநிதியும் கே.என்.நேருவும் திருச்சியில் உறுமலை ஆரம்பித்து வைக்க, காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம் டெல்லியில் பி.ஜே.பி-யுடன் வெகுசகஜமாகக் கலந்துறவாடிக் கொண்டுள்ளனர் தி.மு.க எம்.பி-க்கள்.’’

‘‘இதுதான் குழந்தைத்தனமாக இருக்கிறது... பிரதமர் கொடுத்த விருந்தில் பங்கேற்பதைக்கூட சந்தேகப்பட்டால் எப்படி?’’

‘‘நானெங்கே சந்தேகப்பட்டேன். இரண்டு செய்திகளையும் தொடர்ச்சியாகச் சொன்னேன், அவ்வளவுதான். நாடாளு மன்றக் கூட்டுக் கூட்டத்துக்குப் பிறகு வழக்கம்போல அனைத்துக் கட்சி எம்.பி-க்களுக்கும் பிரதமர் மோடி டெல்லியில் விருந்து கொடுத்தார். கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தைவிட, மோடியிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதை இந்தத் தடவை நடந்த விருந்து நிகழ்ச்சி எடுத்துக்காட்டியிருக்கிறது. கனிமொழி யுடன் அமர்ந்து பேசியபடியே உணவு சாப்பிட்டிருக்கிறார் மோடி. தமிழகத்தின் தி.மு.க எம்.பி-க்கள் மற்றும் கூட்டணி எம்.பி-க்கள் பலரும் மோடியிடம் சகஜமாகப் பேசியிருக்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

‘‘அப்படி என்னவெல்லாம் பேசினார்கள்?’’

‘‘உதாரணமாக, ராமநாதபுரம் பி.ஜே.பி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வீழ்த்திய முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, மோடியிடம் அளாவளாவியிருக்கிறார். ‘சார்... நம்ம இரண்டு பேருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. வடஇந்தியாவில் இந்துக்களின் புண்ணியத்தலமான வாரணாசியிலிருந்து நீங்கள் எம்.பி-யாகத் தேர்வாகியிருக்கிறீர்கள். தென்னிந்தியாவில் இந்துக்களின் புண்ணியத்தலமான ராமேஸ்வரத்திலிருந்து நான் எம்.பி ஆகியிருக்கிறேன்’’ என கனி சொன்னதை ரசித்தாராம் மோடி!

‘‘கலக்குகிறாரே கனி. அதுசரி, சட்டசபை கூடப்போகிறது. இந்தத் தடவை கண்டிப்பாகக் களைகட்டும் என்கிறார்களே?’’

“ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகளில் சபை என்ன களைகட்டியதாம் இப்போது களைகட்டுவதற்கு? எதிர்முகாமில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாளைச் சுழற்றத் தயாராக இருந்தாலும் அவர் பின்னால் நிற்கும் பல எம்.எல்.ஏ-க்கள் உடன்பட மாட்டார்கள் என்பதே நிதர்சனம். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘வெகு சிறப்பாக’வே நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். ‘கேட்பதையெல்லாம் முதல்வர் எடப்பாடி செய்துகொடுக்கும்போது அதைக் கெடுத்துக்கொள்வதற்கு அவர்களில் பலருக்கு விருப்பமில்லை என்றேத் தெரிகிறது’ எனத் தலைமைச் செயலகத்தில் பரவலாகப் பேச்சு ஓடுகிறது!”

“ஓஹோ... அப்படிப் போகிறதா கதை!”

“சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக்கூட பலரும் விரும்பவில்லை யாம். இதுபோன்ற விஷயங்களெல்லாம் தன் காதுகளுக்கு வரவேதான், தண்ணீர் பிரச்னைத் தொடர்பாகத் தமிழகம் முழுக்க தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, ‘எடப்பாடி ஆட்சியை அகற்றுவதுதான் முக்கியம். சபாநாயகரை நீக்குவது அல்ல’ என்று அழுத்தம் கொடுத்துப் பேசினாராம் ஸ்டாலின். இதன் பின்னணியில் இன்னொரு விஷயத்தையும் கிசுகிசுக்கிறார்கள். சமீபத்தில் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க-வின் மூத்தத் தலைவர் ஒருவர் சந்தித்துப் பேசியதாகச் செய்தி கசிந்தது. இந்தச் சந்திப்பின் பின்னால்தான் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு முடிவு கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

“அடேங்கப்பா!”

“கட்சியின் நிர்வாகம் மற்றும் தேர்தல் யுக்திகளுக்காக தி.மு.க-வில் ‘ஓ.எம்.ஜி’ என்றொரு குழு செயல்பட்டுவருகிறது. இந்தக் குழுவிலிருக்கும் சிலர் வைத்ததுதான் சட்டமாகவே இருக்கிறதாம் தி.மு.க-வில். இதனால், மூத்த நிர்வாகிகள் பலருமே இந்தக் குழுமீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். ‘இவர்கள்தான் கட்சியின் தலைவரை இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறார்கள்’ என்கிற கொந்தளிப்பும் பல மாதங்களாகவே இருக்கிறதாம்.”

“இப்போது அந்தக் குழுவுக்கு என்ன?”

“குழு மீதான சில புகார்களில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழுவில் செயல்பட்டு வந்த நாகா, பிரபாகரன் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனராம். சில மாவட்ட நிர்வாகிகளிடம், ‘எம்.கே.எஸ் (மு.க.ஸ்டாலின்) ஆபீஸிலிருந்து பேசுகிறோம்’ என்று மிரட்டலாகப் பேசி, இஷ்டம்போல நிர்வாகிகளைக் கதிகலங்கடித்ததோடு, தனக்குத் தேவையானவற்றையும் சாதித்துக்கொண்டார் நாகா என்கிற குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். ஸ்டாலினுடன் தொடர்ந்து பயணம் செய்பவர் பிரபாகரன். ‘தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறார்’ என்று எழுந்த புகார்கள்தான் இவருடைய நீக்கத்துக்குக் காரணமாம்.”

“சட்டமன்றக் கூட்டத்தொடரை அ.தி.மு.க எப்படி எதிர்கொள்ளுமாம்?”

“தி.மு.க. தரப்பிலிருந்து தண்ணீர் பிரச்னையை வைத்துத்தான் அழுத்தம் கொடுப்பார்கள். அதைச் சமாளிப்பது எப்படி என்பதுதான் முக்கியம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘சட்டமன்றக் கூட்டம் தொடங்கும் முன்பே மழை வந்துவிடும். இயற்கை நமக்குக் கருணை காட்டிவிடும் பாருங்கள்’ என்று ஓர் அமைச்சர் சொன்னதும் அனைவரும் சிரித்துவிட்டார்களாம்!”

“ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க மூத்தத் தலைவர் துரைமுருகன் சொன்னது பூமராங் ஆகிவிட்டதே?”

“ஜோலார்பேட்டைக்கே தண்ணீர் இல்லை... இங்கிருந்து எப்படித் தரமுடியும்... என்கிற ரீதியில்தான் அவர் பேசினார். ஆனால், ‘ஒருபுறம் தண்ணீர் பிரச் னைக்கு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டே, மறுபக்கம் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள். சென்னையில் குடியிருக்கும் துரைமுருகன், சென்னைக்கே தண்ணீர் தரக்கூடாது என்கிறார்’ என்று அ.தி.மு.க தரப்பில் பற்ற வைக்க, பதறிவிட்டார் துரைமுருகன். இந்த விஷயத்தில் துரைமுருகன்மீது மேலிடத்துக்கே கோபமாம்.”

“சசிகலாவுக்கு நெருக்கமான நபர் ஒருவர் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்துள்ளாராமே?”

“உமக்கும் அந்தத் தகவல் வந்து விட்டதா? கடந்த வாரம் சசிகலாவின் தோழி ஒருவர் முதல்வரைச் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாராம். ‘தினகரன்மீது சசிகலாவே வருத்தத்தில்தான் இருக்கிறார். விரைவில் தினகரன் பக்கம் உள்ளவர்கள் கழன்று, ஒவ்வொருவராக உங்கள் பக்கம் வருவார்கள். தினகரன் தரப்பிலிருந்து இனி உங்கள் ஆட்சியை விமர்சிப்பதும் குறையும்’ என்றெல்லாம் சசிகலா உறுதி கொடுக்கச் சொன்னதாகவும் கூறினாராம் அந்தத் தோழி”

“ஓ! தங்க தமிழ்ச்செல்வன் இந்த ரூட்டில்தான் கழன்று வரப் போகிறாரா?”

“அது உறுதியாகவில்லை. ஆனால், அவர் சில நிபந்தனைகளை விதித் துள்ளதாகத் தெரிகிறது. அ.தி.மு.க தரப்பில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படுகிறது. இதை முன்வைத்து, ‘விரைவில் அவர் அ.தி.மு.க அணிக்கு வருவார்’ என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் சில நிர்வாகிகள். இதுகுறித்து அ.ம.மு.க தரப்பிலும் எந்த மறுப்பும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதற்கிடையே, விருநகர் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் பலரும் தி.மு.க பக்கம் தாவியிருப்பது, தினகரனை மட்டுமல்ல, அ.தி.மு.க-வையும் அதிர வைத்துள்ளது.”

மிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

“ம்.”

“முதல்வர் அலுவலகத்தின் மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக இருந்த தங்கய்யன் கடந்த மாதம் இறுதியில் ஓய்வுபெற்றார். அதற்கு முன்பாக, ‘உங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் விரும்புகிறார். நீங்கள் மூன்று அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கடிதம் வாங்கி வாருங்கள்’ என்று முதல்வருக்கு நெருக்கமான - செய்தித்துறையைச் சேர்ந்த - ஓர் அதிகாரி சொன்னாராம். அதன்படியே பொள்ளாச்சி ஜெயராமன், வைத்தியலிங்கம், ஓ.எஸ்.மணியன் ஆகிய மூன்று பேரிடம் வாங்கிய கடிதத்தையும் சமர்ப்பித் தாராம். ‘உங்கள் பணி முதல்வருக்கு ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பாகப் பணி நீட்டிப்பு உண்டு’ என்று அந்த அதிகாரி சொல்ல உற்சாகமாகி விட்டாராம் தங்கய்யன். ஆனால், அதன் பின்பு நடந்தவைதான் விவகாரம் ஆகிவிட்டதாம்!”

“அதென்ன விவகாரம்?”

“பணி நீட்டிப்பு ஆணை வாங்க தினமும் அலைந்த தங்கய்யனிடம் ‘உங்கள் பணி நீட்டிப்புக்காக முதல்வருக்கு நெருக்கமான அந்த அதிகாரிதான் கடுமையாக முயற்சி செய்தார். அவர் காலில் விழுந்தால் பணி வாய்ப்பு நிச்சயம்’ என்று சொல்லப்பட, ‘இந்தக் கட்சியால் நான் இரண்டாண்டுகள் சஸ்பெண்ட் ஆனதெல்லாம் மறந்துவிட்டார்களா? இன்று வந்தவன் காலில் விழுந்து பதவி நீட்டிப்பு வாங்கவேண்டிய அவசியமே இல்லை’ என்று கோபத்துடன் வெளியேறிவிட்டாராம் தங்கய்யன். அதேசமயம், மார்ச் மாதம் ஓய்வுபெற்ற முத்துசாமிக்கு, இப்போது பணிநீட்டிப்பு ஆணையைக் கொடுத்து தங்கய்யனை நோகடித்துள்ளனர். முதல்வருக்கு நெருக்கமான அந்த அதிகாரியின் ராஜ்யம்தான் இப்போதும் கோட்டையை ஆட்டிப் படைக்கிறது என்கிறார்கள்” என்ற கழுகார், சிறகுகளை விரித்துப் பறந்தார்.

படம்: கே.ஜெரோம்

“ஐந்து ‘சி’ இருக்கா?”

வி
க்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தனியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ‘வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு’ என்று சொல்லப்பட, இரண்டு ஒன்றியச் செயலாளர்கள் சட்டென்று கழன்றுவிட்டார்களாம். மாவட்ட நிர்வாகிகளாக இருக்கும் இருவர், ‘தேர்தலில் நிற்க ஆர்வம்’ என்று எழுந்து நின்றதும் ‘ஐந்து சி இருந்தால், தேர்தலில் நிற்கலாம்’ என்று சொல்லப்பட்டதாம். ‘ஆட்சியில் இருந்தபோது கல்லாகட்டியதெல்லாம் அவர்கள்தான். இப்போது எங்களிடம் காசு கேட்டால் எப்படி?’ என்று புலம்புகிறார்களாம் உடன்பிறப்புகள்!