அலசல்
சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

அ.ம.மு.க குடைச்சல், இடைத்தேர்தல், வருமானவரித் துறை ரெய்டு என்கிற இம்சை வரிசையில் சமீபகாலமாகஅ.தி.மு.க-வையும் எடப்பாடியையும் பாடாய்ப்படுத்தும் வார்த்தை ‘ஒற்றைத் தலைமை’. கொஞ்ச நாளைக்கு முன்னால் வரை அர்த்தம்கூடத் தெரிந்திராத இந்த வார்த்தை, இப்போது அ.தி.மு.க தலைமையை ராப்பகலாய் தூக்கம் கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதைச் சமாளிக்கக் கட்சித் தலைக்குச் சில ஐடியாக்கள்!

ஐடியா அய்யனாரு!

• தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க என எல்லாக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. ஏன், அ.தி.மு.க-வில் கூட சில தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். ஆனால், என் குடும்பத்தில் மட்டும்தான் யாரும் நேரடி அரசியலில் இல்லை. எனக்கடுத்து அடிமட்ட தொண்டன்தான் என் இடத்துக்கு வரவேண்டும் என்பதுதான் காரணம் எனக் கண்கலங்க எடப்பாடி சொன்னால் அப்பாவித் தொண்டன் ஏமாந்துவிடுவான்!

• தளபதி, தேவர்மகன், நேருக்கு நேர், மங்காத்தா என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்கள் தான் கோலிவுட்டையே ஆட்டிப்படைத்தன. அப்படி இருக்கும்போது தமிழகத்தை மட்டும் ஒரே ஒரு ஹீரோ(?) ஆள்வது சரியாக இருக்காது என்று எடுத்துக் கூறினால், புரட்சித்தலைவரின் ரசிகர்கள் கண்வியர்த்து, தலைவணங்கி ஏற்றுக்கொள்வார்கள்!

• இதையும் தாண்டி ஒற்றைத்தலைமைதான் என்பதில் தொண்டர்கள் உறுதியாக நின்றால் அதையும் சமாளிக்கலாம் ப்ரோ. பூகோள ரீதியாகத் தமிழகத்தில் கொங்கு மண்டலம் நடுவில் இருப்பதால் எல்லா பக்கங்களிலிருந்தும் தொண்டர்கள் அணுக வசதியாக இருக்கும். எனவே, கொங்கு மண்டலத்துத் தலைமையே சரி எனச் சொல்லிவிடலாம்!

• ஜெயலலிதா பெயர் ஐந்தெழுத்து. பழனிசாமியும் ஐந்தெழுத்து! பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியவை எட்டெழுத்து. ஆக, நியூமராலஜிபடியும் அம்மாவின் ஆசி எனக்குமட்டும்தான் உண்டு என எடப்பாடி வேட்டியை மடித்துவிட்டுக்கொள்ளலாம்!

• இவை எதற்குமே மசியாத கல் நெஞ்சக்காரக் கழகத்து மெம்பர் களிடம் எடப்பாடியின் சுயசரிதைப் புத்தகத்தைப் படிக்கக் கொடுக்கலாம். ‘இவ்ளோ கஷ்டப்பட்டு வளந்தவர்கிட்டயா நாம சண்டை போடுறோம். ச்சே!’ என்றெல்லாம் மனம் திருந்த வாய்ப்பில்லை. ‘இந்தக் கொடுமையைப் படிக்கிறதுக்குப் பதவி இல்லாம சும்மாவே இருந்துடலாம்’ என இரண்டாவது பக்கத்திலேயே முடிவு செய்து நடையைக் கட்டிவிடுவார்கள்!