Published:Updated:

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

பிரீமியம் ஸ்டோரி

டி.வி என்றால் சீரியல், சினிமா, பாடல்கள், ரியாலிட்டி ஷோ என்பதுடன் சமீபகாலமாக ‘பிரேக்கிங் நியூஸ்’, அரசியல்வாதிகளின் சூடான பேட்டிகள், விவாதங்களும் இடம்பெற்றுவிட்டன. அடிக்கடி டி.வி-யில் முகம் காட்டும் அரசியல்வாதிகளிடம் தொலைக்காட்சிக்கும் அவர்களுக்குமான உறவு பற்றிக் கேட்டோம்.

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுக்கும் குலதெய்வம், செய்திச் சேனல்களின் அட்சயப் பாத்திரம், புதுப்புதுப் பழமொழிகளை உதிர்க்கும் நவீனப் பட்டினத்தார் எனச் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், தொலைக்காட்சிக்குமான தொடர்பு எப்படிப்பட்டது?!
“ஊடகங்கள் மூலமாக மக்களோட தொடர்பு ஏற்படுத்திக்குறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நேரம் கிடைக்கிறப்போ விவாதங்களையும் விரும்பிப் பார்க்குறதுண்டு. என்னோட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுது, மக்களும் அதற்கு ஆக்கபூர்வமான கமென்ட்ஸ் கொடுக்குறாங்க. ஆனா, ஒருசிலர் என்னோட வீடியோவுக்குன்னே குத்தவெச்சு உட்கார்ந்திருக்காங்க. திட்டமிட்டு என்மேலேயும், அ.தி.மு.க மேலேயும் மோசமான கமென்ட்ஸைக் கட்டவிழ்த்து விடுறாங்க.

எங்க ஆளுங்க இதுவரைக்கும் அமைதியா இருந்தாங்க. இப்போ, அவங்க வழியிலேயே திருப்பியடிக்க நாங்க தயாராகிட்டோம். இனிமேலும் என்னைத் தரக்குறைவா விமர்சிச்சா, அவங்களுக்குப் புரியுற மொழியிலேயே பதிலடி கொடுக்கத் தயாராகிட்டேன்.” என்றவரிடம், ‘சீரியல்கள் பார்ப்பதுண்டா?’ என்றோம். “அரசியலே மெகா சீரியல்தான். ஆக்‌ஷன், காமெடி, அழுகை, பழிவாங்குதல், துரோகம்னு எல்லாம் இருக்கும். இதைச் சமாளிக்கிறதே பெரிய விஷயம்!” என்று தன் அதிரடிச் சிரிப்பை உதிர்த்தார்.

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

செய்திச் சேனல்கள் ஒருவரின் பேட்டிக்காகத் தவமிருக்கிறது என்றால், அது தமிழிசை செளந்தரராஜனுக்குத்தான். இவர் நடந்தாலும், நின்றாலும், மூச்சுவிட்டாலும்கூட அது டிரெண்டிங் நியூஸ்.
“எனக்கு விவரம் தெரிஞ்சு நான் முதன்முதலா டி.வி பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. அது ஒரு சோகமான அனுபவம். அப்போ நான் ஸ்கூல் படிச்சுக்கிட்டிருந்தேன். எங்க வீட்ல டி.வி கிடையாது. காமராஜர் இறந்துட்டதாக எல்லோரும் பரபரப்பா பேசிக்கிட்டாங்க. காமராஜர் மரணச் செய்தியை தூர்தர்ஷன்ல ஒளிபரப்புனாங்க. அதை டி.வி-யில பார்க்கிறதுக்காக, எங்க அப்பாவின் நண்பர், டாக்டர் குமாரசாமியோட நர்சிங் ஹோமுக்குப் போனோம். காமராஜரோட மரணத்தை என்னால தாங்கிக்கவே முடியல. அழுதுகிட்டேதான் டி.வி பார்த்தேன்.

புள்ளைங்க படிப்பு கெட்டுப்போயிடும்னு சொல்லி, பிடிவாதமா, எங்க வீட்டுல டி.வி வாங்கல. பிறகு, எங்க தொல்லை தாங்காம டி.வி வாங்க ஒப்புக்கிட்டாங்க. ஆனா, எங்க அப்பா ஒரு நிபந்தனை போட்டார். எல்லோர்கிட்டேயும் ஒரு பேப்பரைக் கொடுத்து, டி.வி வாங்கினாலும், நாங்க நல்லா படிப்போம்னு எழுதிக் கையெழுத்து போடச் சொன்னார். அந்தக் கடிதத்துல நான் எழுதியிருந்த விஷயம் ரொம்ப சுவாரஸ்யமானது. ‘ரோட்டுல போய்க்கிட்டிருக்கிறப்போ புத்துணர்ச்சிக்காக டீ குடிப்போம். அதுக்காக, எந்த நேரமும் ரோட்டுல நின்னு டீ குடிச்சுக்கிட்டே இருக்கமாட்டோம். டி.வி-யும் அப்படித்தான்’னு எழுதியிருந்தேன்.

எங்க வீட்டுல டிவி வாங்கி, நான் முதல்முதலா பார்த்த செய்தியும் மறக்க முடியாதது. 1989-ஆம் வருடம் நடந்த தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்ல, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. சாத்தான்குளம் தொகுதியில் எங்க அப்பா ஜெயிச்ச செய்தியை தூர்தர்ஷன் சேனல்ல ஷோபனா ரவி சொன்னாங்க. பிறகு அடிக்கடி நானே டி.வி-யில் வர ஆரம்பிச்சேன். பேச்சுக் கலை பற்றி எங்க அப்பாவோட சேர்ந்து நானும் டி.வி-யில பேசினேன். இப்போ என்னன்னா, எல்லா டி.வி-யிலேயும் அடிக்கடி வந்துகிட்டே இருக்கேன். என் வாழ்க்கையில டி.வி பிரிக்க முடியாத அங்கமாக மாறிடுச்சு’’ என்றார்.

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

1979-ல் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் தொடங்கிய சி.ஆர்.சரஸ்வதியின் பயணம், இன்று அ.தி.மு.க., அ.ம.மு.க என அரசியலிலும் விசால மாகியிருக்கிறது. விவாதங்களில் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கும் கன்டென்ட்களை வழங்குவதில் சரஸ்வதியை அடித்துக்கொள்ள ஆளில்லை. 

“அப்போதெல்லாம் பொதிகை தொலைக்காட்சி யில்தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். முதல்முறை யாக சன் டி.வி-யில் ‘சக்தி’ மெகாசீரியல் ஒளிபரப்பானது. பானுப்பிரியாவுடன் இணைந்து அதில் நான் நடித்தேன். இப்படித்தான் தொலைக்காட்சியில் என் பயணம் தொடங்கியது. பிறகு, 2014-ல் அ.தி.மு.க-வின் முதல் பெண் செய்தித் தொடர்பாளராக அறிமுக மானேன். டி.வி விவாதங்களில் நான் சார்ந்த இயக்கத்தின் கருத்துகளை எடுத்து வைக்கக் களம் கிடைத்தது” என்றவரிடம், ‘சமூகவலைதளங்களில் உங்களைக் கலாய்த்துப் பதிவிடுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றோம்.

“அம்மா இட்லி சாப்பிட்டார்னு நான் கூறியதை அடிப்படையாக வைத்து, என்னை சமூக ஊடகங்களில் சிலர் திட்டமிட்டுத் தாக்கினார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எந்த மோசமான கமென்ட்களைப் பார்த்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஆனால், தனிமனிதத் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக...

‘வாய்யா துரை, நேத்து நம்ம சீரியல் பார்த்தியா’ எனக் கருணாநிதி கேட்க, ‘சூப்பர் தலைவரே, அதுவும் அந்த சீன்ல பிச்சுட்டீங்க!’ என துரைமுருகன் தன் மேனரிசத்தில் குலுங்கிச் சிரிக்க, கோபாலபுரம் வீடு அதகளப்படும். இப்போதெல்லாம் சீரியல் பார்க்கிறாரா துரைமுருகன்?!

“இப்போ செய்தி பார்க்கிறதோட முடிஞ்சுபோச்சு. தலைவர் இருந்தப்போகூட, ஒரு சீரியலைத் தொடர்ச்சியா பார்த்தது கிடையாது. ‘ராமானுஜர்’ சீரியலை மட்டும் அப்பப்போ தலைவருக்காகப் பார்ப்பேன். ஐந்து தொகுதி கொண்ட சட்டப் புத்தகத்தையே ஒரே மூச்சில் படிச்சு முடிப்பவன் நான். நமக்கு இந்த சீரியல் செட் ஆகாது. அதெல்லாம் தலைவரோட முடிஞ்சுபோச்சு” என்றார்.

ந.பொன்குமரகுருபரன், கு.ராமகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு