அலசல்
சமூகம்
Published:Updated:

சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?
பிரீமியம் ஸ்டோரி
News
சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார் சேகர் ரெட்டி!

வேலூர், காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசிதான் சேகர் ரெட்டியின் ஊர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்ட ராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச்சாலைகள், டெலிபோன் கேபிள் அமைப்பது எனச் சிறிய வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டு 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

தலைமைச்செயலாளராக இருந்த ராம மோகன ராவ், முன்பு கலெக்டராகப் பணியாற்றியபோது அவருடன் தொடர்பில் இருந்தார் சேகர் ரெட்டி. ஒரே மொழி பேசுபவர்கள் என்பதால் இருவரும் நெருக்கமானார்கள். டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பும் கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷை ரெட்டிக்கு அறிமுகம் செய்துவைத்தார் விஜய பாஸ்கர். அரசியல் அறிமுகங்கள் பரந்து விரிந்தன.

சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

ராம மோகன ராவ் இல்ல திருமண ஏற்பாடு களை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட் ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடமிருந்து மணல் கான்ட்ராக்ட் சேகர் ரெட்டிக்கு கை மாறியது. ஜெயலலிதா ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து திருப்பதி சென்று மொட்டை போட்ட போதுதான் அவருடைய புகழ், வெளிச்சம் பெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சரான பன்னீர் செல்வத்துடன் நட்பானார் சேகர் ரெட்டி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்த ஒரு மாதத்துக்குள்ளே சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து 33 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதன்பிறகு அவருக்கு நெருக்கமான தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திலேயே சோதனையிட்டது எல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத விஷயம். ஆனால், அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எதுவுமே பேசவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ். இவை அத்தனைக்கும் துருப்புச்சீட்டு சேகர் ரெட்டிமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை. அன்றைக்கு அடித்துத் துவைக்கப்பட்ட சேகர் ரெட்டியை இப்போது மிஸ்டர் பரிசுத்தமாக மாற்றியிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர்.

சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட பணம் அனைத் தும் மணல் விற்பனையால் கிடைத்தத் தொகை. அதாவது சட்டபூர்வமான சம்பாத்தியம் என்ப தாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு அவரை விடுவிப்பதற்கான வேலைகள் ஏறத்தாழ முடிந்து விட்டதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

சேகர் ரெட்டி விவகாரத்தில் அவரைக் காப்பாற்றுவதற்கு சி.பி.ஐ-யிலும் வருமானவரித் துறையிலும் ஒரு குரூப் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், சேகர் ரெட்டியைத் தப்பிக்கவிடக்கூடாது என்பதற்காக அதே துறைகளின் நேர்மையான அதிகாரிகள் பலரும் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு எந்தவிதமான அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே சேகர் ரெட்டியின் மீதும் அவருக்கு நெருக்கமான அரசியல் வி.ஐ.பி-க்கள் மீதும் நடவடிக்கைகள் பாயும்.

அறப்போர் இயக்கம் ஜெயராமனிடம் பேசினோம். ‘‘சேகர் ரெட்டி விவகாரத்தைப் பொறுத்தவரை, சி.பி.ஐ-யே நேரடியாகப் பிடித்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதனால், வழக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்தப் பணம் சட்டபூர்வமாக வரவில்லை என்று நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவரிடம் இருந்த பணம் யாருடையது, யாருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பதையும் சேகர் ரெட்டி சொல்ல வேண்டியிருக்கும்.

மணல் அள்ளித்தரும் கான்ட்ராக்ட் மூலமாகத்தான் சேகர் ரெட்டிக்கு 34 கோடி ரூபாய் வருவாய் வந்தது என்றால், அதற்கு உரிய கணக்கைக் காண்பிக்க வேண்டிய கட்டாயம் பொதுப்பணித் துறைக்கு இருக்கிறது. அந்தத் துறையின் அமைச்சர்களாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மாறி மாறி இருந்திருப்பதால் இரு வருமே இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக சேகர் ரெட்டியைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத் தில் சி.பி.ஐ, வருமானவரித் துறை என இரண்டு துறைகளுமே சரியாகச் செயல்படுவார் கள் என்றே நம்புகிறோம்’’ என்றார்.

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டுகளிலும் சேர்த்து மணல் விற்ற வகையில் அரசுக்குக் கிடைத்த வருவாய் 603 கோடி ரூபாய். சராசரியாக 120 கோடி ரூபாய். ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2016-2017 நிதியாண்டில் மணல் விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் 86.33 கோடி ரூபாய் மட்டுமே. அதேசமயம், இந்த ஆண்டில் இரண்டே இரண்டு மாவட்டங்களில் மணல் அள்ளித்தரும் உரிமையைப் பெற்றிருந்த சேகர் ரெட்டியின் வருமானமோ 493 கோடி ரூபாய்.

‘‘மணல் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும் ஆளுங்கட்சியினரும் கொள்ளையடித்ததுபோக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும்தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது’’ என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிக்கைவிட்டது அப்போதுதான்.

மணல் விற்றதாக எந்தக் காலத்திலும் சேகர் ரெட்டியால் கணக்குக் காண்பிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்கி றார் சமச்சீர் வளர்ச்சிக் கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோவை லோகநாதன். மணல் கடத்தலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் இவர், இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், நூற்றுக்கணக்கான பக்கங்களுக்குத் தகவல் களை வாங்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தின் அனைத்து ஆற்றுப்படுகைகளிலும் அரசின் குவாரிகளில் மணல் அள்ளிக் கொடுப்ப தற்கு யார் யாருக்கு ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறது என்ற தகவல்களை நாங்கள் வாங்கியிருக்கிறோம். ஆறுமுகசாமி, பழனிச்சாமி எனப் பலரின் பெயர்கள் அதில் இருக்கின்றன. சேகர் ரெட்டி பெயரில் ஒப்பந்தம் கொடுத்ததாகத் தகவல் இல்லை. அதனால் அவரிடம் பிடிபட்ட பணத் துக்கு மணல் விற்பனையை ஒரு வருவாயாகக் காண்பித்துத் தப்பவே முடியாது’’ என்றார்.

அ.தி.மு.க மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘‘சேகர் ரெட்டியை விடுவிக்கும் முயற்சி, பி.ஜே.பி-யிடம் ஓ.பி.எஸ் கை ஓங்குவதையே காட்டுகிறது. இந்த வழக்கில் சேகர் ரெட்டி விடுதலையாகி விட்டால் பன்னீருக்கு பெரும் நிம்மதியாகிவிடும். அதன்பின் அவர் அதிரடி அரசியலில் இறங்க வாய்ப்புண்டு’’ என்றார். ஆக, அடுத்த சில நாள்களுக்கு ரெட்டியை வைத்தே அ.தி.மு.க அரசும் அரசியலும் நகரப்போகிறது. பன்னீரின் அடுத்த தர்மயுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் போலிருக்கிறது!

- சேவியர் செல்வகுமார், எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘‘ஆமாம்... அது தொழிலில் சம்பாதித்தப் பணம்தான்!’’

சேகர் ரெட்டியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘ரெய்டில் சிக்கிய 34 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் உங்களது பிசினஸ் வருமானத்தில் வந்தவை என்று வருமானவரித் துறை சொல்லியிருக்கிறதே?’’

‘‘ஆமாம்! என் பிசினஸ் தொடர்பான கணக்குகளை ஆராய்ந்துதான் வருமானவரித் துறை அப்படிச் சொன்னது. வருமானவரித் துறை ரெய்டு நடத்திய பிறகு, எங்கள் நிறுவனத்தின்மீது டெல்லி பினாமி கோர்ட்டில் வழக்கு நடந்தது. வருமானவரித் துறை தாக்கல் செய்த ரிப்போர்ட்டில் அப்படிச் சொல்லியது. அதை ஏற்று 2018-ல் வழக்கும் தள்ளுபடி ஆனது. அந்தத் தகவல்தான் இப்போது வெளிவந்திருக்கிறது.’’

சேகர் ரெட்டி ரிலீஸ்! - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

‘‘மணல் அள்ள... யார்டு நடத்த... உங்களிடம் உரிமம் இருக்கிறதா?’’

‘‘மணல் விற்பனையை அரசே செய்கிறது. யார்டு நடத்த மட்டும் தனியாருக்கு லைசென்ஸ் தருகிறார்கள். இவை எதிலும் எங்களுடைய எஸ்.ஆர்.எஸ் மைனிங் கம்பெனிக்குத் தொடர்பு இல்லை. யார்டில் இருந்து மணலை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதுதான் நாங்கள் செய்த பிசினஸ்.  இந்த கம்பெனியில் மூன்று பேர் பார்ட்னர்கள். ஒருவர் - ராமச்சந்திரன், இன்னொருவர் - ரத்னம். இந்த இருவரும்தான் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுவந்தார்கள். எங்களைப் போன்று பலரும் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். ஆனால், எங்களிடம் வாகனங்கள் நிறைய இருந்தன. 500 லாரிகள், 300 பொக்லைன்கள் என்று பெரிய அளவில் பிசினஸ் செய்துவந்தோம். எங்களிடம் சுமார் 1,500 வேலையாட்கள் அந்தக் காலகட்டத்தில் பணியில் இருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பணப் பரிவர்த்தனை எல்லாமே புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள்தான். ரெய்டுக்கு முந்தினநாள்வரை எந்தெந்த தேதிகளில் வரவு செலவு நடந்தது என்பதற்கான கணக்குகளை மிகச் சரியாக வைத்திருந்தோம். எங்கள் பிசினஸில் கிடைத்த வருமானத்தில் ரெய்டுக்கு முன்பு வங்கியில் எட்டுக் கோடி ரூபாய் புதிய நோட்டுகளைச் செலுத்தினோம். மீதிப் பணத்தை வங்கியில் செலுத்தப்போனபோது, ‘ஒரு நாளைக்கு இவ்வளவுதான் வாங்கிக் கொள்வோம். ரொம்ப பிஸி’ என்று சொல்லிவிட்டார்கள். எனவேதான், 34 கோடிக்குப் புதிய நோட்டு களை எங்கள் தொழில் தொடர்பான இடங்களில் வைத்திருந்தோம். வங்கியில் பணம் செலுத்துவதற் காக வைத்திருந்த பணம்தான் அவை. வேறு எந்தத் தவறான வழியிலும் வந்தவை அல்ல. இன்னும் சொல்லப்போனால், ரெய்டுக்கு முன்பே 31 கோடி ரூபாய் அட்வான்ஸ் வரியாகச் செலுத்தியிருக்கிறோம். ரெய்டு முடிந்த இரண்டு மாதத்தில் 22 கோடி ரூபாய் கட்டியிருக் கிறோம். எல்லாமே வெளிப்படையான பணப் பரிவர்த்தனைதான். சிலர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு மாதத்தில் 34 கோடி ரூபாய் புதுப் பணம் எப்படி வரும் என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். டாஸ்மாக்கில் ஒரு நாள் நிகர வருமானம் சுமார் 30 லிருந்து 40 கோடி ரூபாய். பெரிய ஜவுளிக்கடையில் அன்றாட கலெக்‌ஷன் பல கோடிகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, அவற்றை வங்கியில் செலுத்த வைத்திருந்ததால், அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டலாமா? இப்படித்தான், எங்களிடம் 34 கோடி ரூபாய்க்குப் புது நோட்டுகள் இருந்தன. அவைதான் ரெய்டின்போது கைப்பற்றப்பட்டன. புதுப்புது வதந்திகளைப் பரப்பிவிடுவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது’’ என்றார்.