அலசல்
சமூகம்
Published:Updated:

பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!

பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!

பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!

‘பி.ஜே.பி-யில் ஜி.கே.வாசன் சேரப்போகிறார்... தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பி.ஜே.பி-யுடன் இணைக்கப் போகிறார்’ போன்ற செய்திகள் அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. இவை வதந்திகள் என்று கூறப்பட்டாலும் நெருப்பு இல்லாமல் புகையாதே என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். த.மா.கா-வில் என்னதான் நடக்கிறது?

காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா-வை ஜி.கே.வாசன் ஆரம்பித்தபோது, அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் இப்போது த.மா.கா-வில் இல்லை. குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், சாருபாலா தொண்டைமான், கோவை மகேஸ்வரி, திருச்சி ராஜசேகரன், தஞ்சாவூர் ராம்குமார் உட்பட பலரும் த.மா.கா-விலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

‘‘தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவர், மத்தியில் கேபினெட் அமைச்சர் எனச் செல்வாக் குடன் இருந்த வாசனுக்கு இப்படியொரு நிலையா?’’ என, ஒரு காலத்தில் ஜி.கே.வாசனுடன் சேர்ந்து அரசியலில் பயணித்த சிலர், நம்மிடம் கவலையுடன் பேசினார்கள்.

“ஜி.கே.மூப்பனார், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்கத் தலைவர். மதச்சார்பற்றக் கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவரின் மகன் ஜி.கே.வாசனோ, மூப்பனாரின் கொள்கை நிலைப்பாடுக்கு மாறாக, பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தார். ஒரு சீட் மட்டும் வாங்கி, அதிலும் தோற்றுவிட்டார். அவரைவிட்டு நாங்கள் விலகி வந்துவிட்டோம். ஆனாலும் த.மா.கா-வை பி.ஜே.பி-யில் இணைக்கப் போகிறார்கள் என்று வரும் செய்திகளைக் கவலையுடன் பார்க்கிறோம்.

பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு, தனிப்பட்ட உறவுகளில் ஏற்பட்ட உரசல் என ஏதோ ஒரு காரணத்துக்காக காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிக்காத தலைவர்களே இல்லை. ராஜாஜி, காமராஜர், கக்கன், சி.சுப்பிரமணியம், குமரிஅனந்தன், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி எனப் பலரும் தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்தான். ஆனாலும், தங்களை காங்கிரஸ்காரர்களாக மட்டுமே அவர்கள் அடையாளப்படுத்திக்கொண்டனர்.

ஒருமுறை த.மா.கா பொதுக்குழுக் கூட்டத்தில், ‘மம்தா பானர்ஜியைப் போல நாமும் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்தால்தான், நம்மால் தமிழ்நாட்டில் வளர முடியும்’ என்று மூப்பனாரிடம் சிலர் சொன்னார்கள். அதற்கு, ‘காங்கிரஸை எதிர்த்து இந்தக் கட்சியை நடத்த வேண்டும் என்றால், இந்தக் கட்சியே எனக்கு அவசியம் இல்லை’ என்று சீறினார் மூப்பனார். காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்று புதிய கட்சிகளை ஆரம்பித்த தலைவர்களெல்லாம், மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்துவிட்டனர். ஆனால், ஜி.கே.வாசனின் த.மா.கா-வுக்குப் போன பலர் வேறு கட்சிகளுக்குப் போய்விட்டனர். அதேசமயம், த.மா.கா-விலிருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு சிலர் திரும்பிவந்துள்ளனர். ஆனால், அவர்களை ஏளனமாகவும் துரோகிகளாகவும் காங்கிரஸ் கட்சியில் பார்க்கின்றனர். ‘த.மா.கா-விலிருந்து வந்தவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது’ என்று சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள். த.மா.கா-வின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஊடகப் பிரிவின் தலைவர் கோபண்ணாவிடம் கேட்டோம். “1996-ல் த.மா.கா தொடங்குவதற்கு வலுவான காரணம் இருந்தது. 2014 வரை கேபினெட் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், அகில இந்திய செயலாளர், 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வாசன் வகித்தார். ஆனால், காங்கிரஸைவிட்டு வெளியேற என்ன நியாயமான காரணம் இருந்தது என்பதை இதுவரை வாசன் விளக்கவில்லை. த.மா.கா-வில் இருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, தாய் வீட்டுக்கு வாருங்கள் என்று அவர்களை அழைக்கிறோம். த.மா.கா-விலிருந்து வந்தவர்கள் என்பதற்காக, யாரும் இங்கு பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை” என்றார்.

பி.ஜே.பி-யில் இணைகிறதா த.மா.கா? - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்!

இதுகுறித்துப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “‘நான் மாநிலக் கட்சி.... இதன் அகில இந்திய தலைவர் அன்னை சோனியா காந்தி’ என்று தலைவர் மூப்பனார் சொன்னார். அதுதான் எங்கள் நிலைப்பாடு. அதிலிருந்து நீங்கள் (வாசன்) புரண்டால், நாங்கள் இங்கு இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு த.மா.கா-விலிருந்து வந்து விட்டோம். மதச்சார்பற்ற அரசியல், சமூகநீதி, பொருளாதார வளர்ச்சி, நாடாளுமன்ற ஜனநாய கம் ஆகிய நான்கும் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகள். இவற்றில் நம்பிக்கைகொண்ட வர்கள், காங்கிரஸ் கட்சியில்தான் இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து ஜி.கே.வாசனிடம் கேட்டபோது, “பி.ஜே.பி-யில் த.மா.கா-வை இணைக்கப்போவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. பி.ஜே.பி-யுடன் எங்கள் கட்சியை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கும் வாய்ப்பு இல்லை. தற்போது த.மா.கா பெரிய கட்சியாக இல்லை என்றாலும் இதற்கென ஒரு மரியாதை இருக்கிறது. இன்னும் அதை வளர்ப்பதற்கான நடவடிக்கை களை நாங்கள் எடுத்துவருகிறோம்” என்றார் நிதானமாக.

- ஆ.பழனியப்பன்