
ஒரே நாடு... ஒரே தேர்தல்! - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா?
‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ முழக்கம் பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்த நிலைப்பாடு நீண்ட காலமாகவே பி.ஜே.பி-க்கு இருக்கிறது. கடந்த 2018, ஜனவரியிலேயே பிரதமர் மோடி, இதுகுறித்து “நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை தேவை” என்றார். தற்போது ஆட்சி அமைந்து, நடைபெற்ற முதல் மக்களவைக் கூட்டத் தொடரிலும் ஜனாதிபதி உரையில், ‘‘ ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ கொள்கையால், நாடு வேகமாக வளரும். அனைத்து எம்.பி-க்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதுதொடர்பில் என்ன சொல்கிறார்கள் இவர்கள்... பார்ப்போம்!

நாராயணன்,
செய்தித் தொடர்பாளர், பி.ஜே.பி
“மாநிலங்களுக்கான பல்வேறு திட்டங்களை ஆய்வுசெய்து, மக்கள்நலப் பணிகளைச் செய்ய ஏதுவாகத்தான் ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ முறையைத் தேர்ந்தெடுத்தோம். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில விஷயங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்த காரணத்தினாலே அனைத்து மாநிலங்களிலும் திடீர் திடீர் என்று தேர்தல் வரத் தொடங்கியது. 1983-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தான பார்வைகளை முன்வைத்தபோது, ‘நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கலாம்’ என்று பரிந்துரைத்தது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் ஆணையங்கள் இதே கொள்கையை முன்னெடுத்தன.

குறிப்பாக, பி.ஜே.பி 25 வருடங்களாகவே இந்தத் திட்டத் துக்குத் தன்னுடைய இசைவைத் தெரிவித்துவருகிறது. காரணம், மத்தியில் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஓர் அரசு, மாநில அரசுடன் கூட்டாட்சி முறையின் அடிப்படையில் இயங்க வேண்டும். இதனால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஐந்து வருடங்களும் முழுமையாக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றலாம். இந்த வாய்ப்பைக் கடந்த 40 வருடங்களாக நாம் இழந்துவருகிறோம். இனியாவது அது நடக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடந்தால் மாநிலங்களில் நிலையான அரசு இருக்கும். மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு இருக்கும் என்பதால், அந்தந்த மாநிலத்துக்குரிய வளர்ச்சித் திட்டங்களில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். மத்திய, மாநில அரசுகள் தனித்துச் செயல்படும்போது பொருள், நேர விரயம் அதிகமாகிறது. இதன் அடிப்படையில்தான் ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ கொள்கையை பி.ஜே.பி வலியுறுத்துகிறது.”
பேராசிரியர் அருணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
“இந்தக் கொள்கை கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. ஜனநாயக மாண்புக்குக் கேடானது. மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால், பிரசாரத்தில் தேசியப் பிரச்னைகள்தான் முன்னுக்கு வரும். மாநிலப் பிரச்னைகள் பின்னுக்குப்போகும்.
மாநிலங்களில் ஒரு கட்சியையும் மத்தியில் இன்னொரு கட்சியையும் ஆட்சியில் அமரவைக்கும் மக்களின் தேர்வும் சுதந்திரமும் இதனால் பறிக்கப்படும். இப்போதுகூட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி-க்கும் மக்கள் வாக்களித்தார்கள். அந்த வித்தியாசம் மழுங்கடிக்கப்படும். முக்கியமாக, மக்களவையிலோ, சட்டசபையிலோ ஓர் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டால் அந்த மாதிரி சூழ்நிலையில் மீண்டும் தேர்தல் நடத்து வார்களா, மாட்டார்களா? ஏனெனில், ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ விதிகளின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தலை நடத்த முடியும். ‘அதுவரை அந்த மாநிலத்தில் யாருடைய ஆட்சி?’ என்கிற கேள்விக்கு ‘நிதி ஆயோக்’ ஓர் ஆலோசனையைச் சொல்லியிருக்கிறது. அதாவது, மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் அங்கே ஜனாதிபதி ஆட்சியாம்... மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் கவர்னர் ஆட்சியாம். கவர்னர் ஆட்சி என்பது மத்திய அரசின் நேரடி ஆட்சி. எவ்வளவு விபரீதமான யோசனை இது.

1955 - 56-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது அதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ‘மாநில சட்டமன்றங்களே தேவையில்லை... டெல்லியில் நாடாளுமன்றம். அதற்குக் கீழ் பஞ்சாயத்து அமைப்பு. நடுவில் உள்ளவை பிரிவினைக்கு வழிவகுக்கும்’ எனத் தீர்மானம் போட்டனர். மாநிலங்களின் தனித்தன்மையை அழித்து இந்தியா என்கிற ஒற்றைப் புள்ளியில், அதுவும் ஆர்.எஸ்.எஸ் கீழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இவர்களின் நீண்டகால நோக்கம். அதைத்தான் இப்போது செயல்படுத்தத் துடிக்கிறார்கள்!’’
‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ குறித்து இன்னும் பரவலான விவாதங்கள் அனைத்து தரப்பிலும் தேவை. ஏன் வேண்டும், ஏன் வேண்டாம்... என வெளிப்படையான கேள்விகளை முன்வைக்கும்போதுதான் இதுகுறித்து மேலும் தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்கும்!
- தமிழ்ப்பிரபா