அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எஸ்.ராமதாஸ், சேலம்-30.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பதுண்டா?


கைக்காட்சிப் பெட்டி வந்துவிட்டதே!

கழுகார் பதில்கள்!

அ.ராஜாரஹ்மான், கம்பம், தேனி மாவட்டம்.
‘போராட்டம் நடத்தி அனைவரும் சிறையில் இருந்தால், கருத்து வேறுபாடுகள் மறைந்து காங்கிரஸ் கட்சி வலிமை அடையும்’ என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?


ஏற்கெனவே ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கும் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் சிறை தயாராகத்தான் இருக்கிறது. இவர்தான் நீதிமன்றத்தில் தடை வாங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரு வேளை கூட்டமாகப்போய் பயிற்சி எடுத்துக்கொண்டால்  ‘வலி’ தெரியாமல் இருக்கும் என்று நினைத்துப் பேசியிருப்பாரோ!

கழுகார் பதில்கள்!

@மு.கனகராஜ், புஞ்சைபுளியம்பட்டி.
குடியரசுத் தலைவர் பதவியைச் சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் என்று மாற்றி மாற்றி அளிக்கின்றனர். பிரதமர் பதவியையும் அப்படி வழங்குவதுதானே சமூகநீதி?


நிச்சயமாக. ஆனால், அப்படி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் கவர்னர், குடியரசுத் தலைவர் பதவிகளையெல்லாம் காலங்காலமாக ‘ரிசர்வ்’ செய்து வைத்துள்ளனர் நம் அரசியல்வாதிகள். ‘சாதி இல்லை, மதம் இல்லை’ என்று மேடைகளில் முழங்கும் இந்த அரசியல்வாதிகள், முதல்வர் மற்றும் பிரதமர் போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் மட்டும் ‘பட்டியலினம்’ என்றழைக்கப்படும் சாதிக்காரர்களை மறந்தும் அமரவிட மாட்டார்கள். அதெல்லாம் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ என்றழைக்கப்படும் சாதிகள் மற்றும் அதற்கு மேலான அடுக்குகள் என்றழைக்கப்படும் சாதிகளில் இருந்துதான் ஆரம்பமாகும். இதை காங்கிரஸ் காலத்திலிருந்து ஒரு ஃபார்முலாவாகவே பின்பற்றுகின்றனர். எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.

@காந்தி, திருச்சி.
தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே உரசலா?


உரசலுக்குக் காரணம், வேறு எங்காவது ‘மெர்சலா’ என்பதுதான் தெரியவேண்டும்.

@ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
நேரு, இந்திரா காந்தி காலத்தில் தமிழக எம்.பி-க்கள் இதுபோல் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்து கோஷங்கள் எழுப்பியதுண்டா?


தமிழில் மட்டுமல்ல, தத்தமது மொழிகளில் பதவிப்பிரமாணம் எடுப்பது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருப்பதுதான். ஆனால், கோஷங்கள் எழுப்பும் சூழல் எழுந்ததில்லை. இந்தத் தடவை, ஒட்டுமொத்தமாகத் தமிழ் ஓங்கி ஒலித்ததற்குக் காரணம், வடஇந்திய எம்.பி-க்கள் சிலர் வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டதுதான். ‘வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் கட்டிக்காக்க வேண்டும்’ என்று பேசும் மோடி உள்ளிட்ட வடஇந்தியத் தலைவர்கள், இதுபோன்ற விஷயங்களில் தங்களின் கவனத்தைத் தீவிரமாகச் செலுத்தவேண்டும். ‘சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பேதம் எங்கும் இல்லை, எதிலும் இல்லை’ என்கிற நிலையை உறுதிப்படுத்த வேண்டும். அதுதான், மோடி உருவாக்க நினைக்கும் ‘ஒரே இந்தியா’வையும் இறுதிப்படுத்தும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம்.
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு உண்டா?


‘அரசியலே’ பெரிய நடிப்புதானே?

கழுகார் பதில்கள்!

@ஏ.எஸ்.ஆரோக்கியம், திண்டுக்கல்.
இ.வி.எம் (வாக்குப்பதிவு எந்திரங்கள்) பற்றிய சர்ச்சைகளுக்குத் தீர்வு எப்போது?


‘நாட்டில் இனி தேர்தலே இல்லை’ என்று முடிவெடுக்கும்போதுதான்.

@க. பூமிபாலன், கோவை.
24 மணி நேரமும் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கும் (உண்மையாகவே) அரசியல் தலைவர்கள் யாரேனும் உண்டா?


உண்மையாகவே மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பவர்கள், 24 மணி நேரமும் மெனக்கெடவே மாட்டார்கள்.

@வெங்கட்.
‘பஸ் டே’ தேவையா?


தாங்கள் தினம்தோறும் பயணிக்கும் பஸ்ஸுக்கும் அதன் ஓட்டுநர், நடத்துநருக்கும் மரியாதை செய்வதற்காக யாராலோ உருவாக்கப்பட்டது இந்த நல்ல வழக்கம். ஆனால், சிலபல ஆண்டுகளாகவே சில தீயசக்திகள் இதை ‘வன்முறைக் கொண்டாட்டம்’ என்பதாக மாற்றிவிட்டன. உணர்ச்சிவசப்படும் மாணவர் கூட்டமும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டது. அதனால்தான் ‘பஸ் டே தேவையே இல்லை’ என்று தடை செய்துவைத்துள்ளது போலீஸ்.

@எஸ்.பஷீர் அலி, பேராவூரணி.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியைத் தமிழில் வர்ணிக்கும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த், வீரர்களையும் சரி, பார்வையாளர்களையும் சரி ஒருமையில் வர்ணிப்பதும் கொச்சை மொழியில் கமென்ட் அடிப்பதும் எந்த வகையான நாகரிகம்?


கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மட்டுமல்ல, தொலைக்காட்சி, சினிமா, ரேடியோ, மீடியா பிரபலங்களில் பலரும்கூட சென்னைத் தமிழைப் பக்காவாகப் பேசுகிறவர்கள்தான். அவர்களில் பலரும் இதேபோலத்தான் பேசுகிறார்கள். ‘சென்னைத் தமிழே கொச்சையான மொழி’ என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில்தான் இவர்களுடையப் பேச்சுகள் அமைகின்றன என்பது வேதனையே. அனைத்து மொழிகளிலுமே ‘கொச்சை’ இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இடம், பொருள், ஏவல் உண்டு. இல்லாவிட்டால் நாகரிகம் என்பதற்கே அர்த்தம் இல்லை.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல் மாவட்டம்.
தமிழிசைக்கு மந்திரி பதவியைக் கொடுத்து தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்க்காமல், நிர்மலாவுக்குப் பதவி தந்தது சரியில்லைதானே?


தமிழ்நாடு கோட்டா என்றெல்லாம் நிர்மலாவுக்குப் பதவி வழங்கப்படவில்லை. அது வேறு கதை என்பதால் ஒப்பீட்டை விட்டுவிடலாம். தமிழிசைக்கு மந்திரி பதவி கொடுத்தால் தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடாது, கத்திக்கத்தி தொண்டைத் தண்ணீர்தான் தீர்ந்துவிடும். உண்மையிலேயே பாவம்தான் தமிழக பி.ஜே.பி. காற்றடிக்கும்போது மாவு விற்கிறார்கள். மழையடிக்கும்போது உப்பு விற்கிறார்கள். தமிழகத்தில் எதை விற்கவேண்டும்... எப்படி விற்கவேண்டும் என்பதை இத்தனைக்குப் பிறகும் புரிந்துகொள்ளவில்லை. ‘பினாமி வியாபாரி’களை வைத்துக்கொண்டே மறுபடி மறுபடி யோசிக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

@வடபழனி, ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.
சென்னைக்கு மழை வருமா, வராதா?


சரி, மழை வந்து மட்டும் என்ன செய்யப் போகிறோம்?

@கி.ரவிக்குமார், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.
கழுகாருக்குச் சென்னையில் தேவையான அளவு குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறதா?


கழுகாரின் தேவையே குறைவுதானே!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
தன்னுடைய கட்சிக்குத் தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத நிலையில், ‘விரைவில் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி ஏற்படும்’ என்று  எந்த நம்பிக்கையில் பிரதமர் பேசுகிறார்?


திரிபுரா மாநில ஆட்சியைப் பிடித்த பாணியில், ‘ஸ்வாஹா’ திட்டம் ஏதும் தீட்டி வைத்திருப்பாரோ?

@கே.எஸ்.குமார், விழுப்புரம்.
விஜயகாந்தின் சொத்துகள் ஏலத்துக்கு வந்துவிட்டனவே?


பாவம், ஐந்தரை கோடி ரூபாய் கடனைக்கூட கட்ட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது கொடுமையே!

@அ.சுகுமார், காட்டுக்கானூர்.
தண்ணீர் பிரச்னை பற்றி தினகரன் பாணியில் சிரித்தே நீண்ட பேட்டி (?) அளித்து ஒப்பேற்றிவிட்டாரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி?


தினகரனாலும் வளர்க்கப்பட்டவர்தானே?

@மா.உலகநாதன், திருநீலக்குடி, திருவாரூர் மாவட்டம்.
‘துக்ளக்’ குருமூர்த்தி அடிக்கடி அ.தி.மு.க-வைச் சீண்டிக்கொண்டே இருக்கிறாரே?


அவருக்கு இல்லாத உரிமையா?

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!