Published:Updated:

“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”
“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”

“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”

பிரீமியம் ஸ்டோரி

வரைப்பற்றிப் பெரிய அறிமுகம் தேவையில்லை. இறுக்கமாக இருக்கும் தமிழக அரசியல் சூழலை அவ்வப்போது கலகலப் பாக்குபவர். ஒரே ஒரு தெர்மாகோல் மூலம் உலக ஃபேமஸ் ஆனவர். ஆமாம், அவரேதான்...செல்லூர் ராஜு!  மழைக்காக வருண ஜெப யாகம் நடத்தி முடித்து உற்சாகமாக இருந்தவரிடம் பேசினேன்.

“அதிரடியாகப் பேசிவந்த தாங்கள் தற்போது அதிகமாகப் பேசுவதில்லையே..?’’

 “தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்கு எதிராக வந்தது ஒரு காரணம். காமராசரைப் போன்ற எளிமையான முதலமைச்சர் எடப்பாடியார், மக்களுக்காகப் பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தும், அமைச்சர்களும் அதிகாரிகளும் மக்களுக்காகக் கடுமையாக உழைத்தும், மக்கள் இப்படியொரு தீர்ப்பை அளித்துவிட்டார்களே என்ற வருத்தத்தால்தான் நான் அதிகம் பேசுவதில்லை.”

“நாடாளுமன்றத்தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் தி.மு.க பலமான கட்சியாக மாறியுள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலாவது அ.தி.மு.க வெற்றிபெறுமா?’’

“என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். தி.மு.க-வின் வெற்றி நிரந்தரமானது அல்ல. அது ஒரு காற்றடைத்த பலூன் போலதான். மாயையிலிருந்து மக்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள்.’’

“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”

“தேர்தல் நேரத்தில் நீங்கள் அதிகமாக விமர்சித்த கமல், மீண்டும் பிக்பாஸ் நடத்த வந்துவிட்டாரே?’’

“அவர் ஆளும்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வர முடியாது. நல்ல நடிகர், மாபெரும்  கலைஞர்,  திறமையானவர். ஆனால்  அவர் துறையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். அவரால் முழுநேர அரசியல் வாதியாக முடியாது. அது மட்டுமல்லாமல், அவர் அரசியலுக்கு வந்த நேரம் சரியில்லை. வயதான காலத்தில் வந்திருக்கிறார். அரசியல் என்பது சாதாரணமானது அல்ல, நீண்ட நெடிய பொதுவாழ்க்கை கொண்டவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். எந்த அனுபவமும் இல்லாமல் அவர் அரசியலுக்கு வந்ததால் வெற்றி பெற முடியாது என்று அவரின் அபிமானி என்ற முறையில் கூறினேன்.”

“ஆடிட்டர் குருமூர்த்தி அடிக்கடி அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறாரே?’’

  “அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை, அவர் எந்த அடிப்படையில் எங்களை விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை.முதலமைச்சரும், அமைச்சர்களும் பொறுப்போடு மக்கள் பணி செய்துவருகிறோம். அப்படியிருக்கும் போது அண்ணன் குருமூர்த்தி எங்களை எதற்காக விமர்சனம் செய்ய வேண்டும்?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைய உண்மையான  காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?’’

“மதச்சார்பற்ற அணி என்ற மாயையைத் தி.மு.க-வினர் உருவாக்கியதில் பலர் பலியாகி விட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கிறோம். நாங்கள் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர், கிறித்துவர்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது வரை இஸ்லாமியர் கிறித்துவ மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறோம். புனிதப்பயணம் செல்ல மானியம் வழங்குகிறோம், பள்ளிவாசல் மேம்பாட்டுக்கு நிதி அளிக்கிறோம். சிறுபான்மை மக்களுக்குக் கடன் வழங்குகிறோம், நோன்புக்கஞ்சிக்கு இலவச அரிசி வழங்குகிறோம். அப்படியெல்லாம் செய்தும் பொய்ப் பிரசாரத்துக்கு பலியாகிவிட்டார்கள். அதுதான் காரணம்.’’

“காமராசரைப்போன்று எளிமையானவர் எடப்பாடி!”

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து மக்களைக் கவரக்கூடிய தலைவராக அ.தி.மு.க-வில் யாரைச் சொல்வீர்கள்..?’’

   “அவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனாலும், மக்கள் சேவையின் மூலமாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்று நம்புகிறோம்.’’

‘`தாங்கள் பொறுப்பு வகிக்கும் கூட்டுறவுத்துறை செய்த சாதனை?’’

 ‘`மிகப்பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. இதுவரை 23 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. 80,00,000 விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்கிறோம். தி.மு.க ஆட்சியில் வெறும் 9,13,60,000 ரூபாய்தான் நிதி வழங்கினார்கள்.  எங்கள் துறையில் பொது விநியோகத்திட்டம் மூலம் 32,924 நியாயவிலைக் கடைகள் நடத்துகிறோம். தி.மு.க ஆட்சியில் கொடுத்த இலவச அரிசியை சாப்பிட முடியாது. ஆனால், இப்போது அரிசி முதல் அனைத்துப் பொருள்களும் தரமாக  வழங்குகிறோம். ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்க ஸ்மார்ட் கார்டு கொடுத்துள்ளோம். விரைவில் பயோ மெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரப்போகிறோம். 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. கூட்டுறவு வங்கிகளையும், தொடக்கக் கூட்டுறவு வங்கிகளையும் கணினி மயமாக்கிவிட்டோம்,  அதுபோல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் சேவையுடன் நடைபெற்றுவருகின்றன. இந்த சாதனைகளோடு இன்னொரு சாதனையும் சொல்கிறேன், நாடு விடுதலை அடைந்த பிறகு கூட்டுறவுத்துறையில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் ஒரே அமைச்சர் நான் மட்டும்தான்.’’

‘`தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்க, தாங்கள் சொல்லும் ஐடியா என்ன?’’

‘`தொலைநோக்குப் பார்வையோடு ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர்ச் சேகரிப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நீர்நிலைகளை அனைவரும் பாதுகாக்கவேண்டும், தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்க எடப்பாடியார் கொண்டு வந்த குடி மராமத்துத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.’’

‘`சமீபத்தில் தங்களை பாதித்த நிகழ்வு?’’

‘`நாடாளுமன்றத்தேர்தல் தோல்விதான் மிகவும் பாதித்தது. அம்மா வழியில்  ஏகப்பட்ட சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்த முதலமைச்சர் எடப்பாடியார் மக்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்படியிருந்தும், பொய்ப்பிரசாரத்தால் இப்படி ஆகிவிட்டதே என்று மனம் பாதித்தது.’’

‘`கடைசியாகப் பார்த்த சினிமா எது?’’

“சினிமா பார்க்கும் பழக்கம் உண்டு. ஆனால், தேர்தல் வேலையில் பிஸியாக இருந்ததால் எந்தப் படமும் பார்க்கவில்லை, கடைசியாக ‘கோலமாவு கோகிலா’ பார்த்தேன்.”

‘`சமூக ஊடகங்களில் தங்களை தெர்மாகோல் விஞ்ஞானி, நாசா விஞ்ஞானி என்று  கிண்டல் செய்வதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்..?’’

 “ஜாலியாக எடுத்துக்கொள்கிறேன், அந்த ஒரு செயல்தான் என்னை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது. இன்று தெர்மாகோல் என்று கூகுளில் தேடினாலே என் பெயரும் வருகிறது என்றால் பெருமைதானே! தெர்மாகோல்தான் செல்லூரில் பிறந்த என்னை உலகம் முழுக்கத் தெரியவைத்திருக்கிறது.”

அதுசரி!

-செ.சல்மான், படங்கள்: வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு