Published:Updated:

`என் மொழிபெயர்ப்புக்குப் பாராட்டுல்ல குவியுது!’ - `ராகுல் டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலு

`என் மொழிபெயர்ப்புக்குப் பாராட்டுல்ல குவியுது!’ - `ராகுல் டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலு
`என் மொழிபெயர்ப்புக்குப் பாராட்டுல்ல குவியுது!’ - `ராகுல் டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலு

அதுபற்றி எனக்குக் கவலையில்லை. மெஜாரிட்டி ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் என்ன என்பதைப் பாருங்கள். மோடியின் பேச்சை மொழிப்பெயர்த்துப் பேசிய ஹெச்.ராஜாவுடன் என்னுடைய மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பாருங்கள். எது சிறந்ததென்று உங்களுக்கே தெரியும்

தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கும் ராகுலுக்கும் இடையே நடந்த உரையாடல் இந்திய அளவில் பேசுபொருளானது. தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேசிய கருத்துகளும் அவ்வாறே அமைந்தது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் ராகுலின் பேச்சுகுறித்து எவ்வித விமர்சனங்களும் எழாத நிலையில், இறுதி நிகழ்வாக நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசிய ஆங்கில உரையை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தார். ராகுல் பேசியது ஒன்றாகவும், தங்கபாலு மொழிபெயர்த்தது வேறொன்றாகவும் பல இடங்களில் அமைந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்...

ராகுல் காந்தி: I respect the people of tamil nadu.
தங்கபாலு: நரேந்திர மோடி தமிழக மக்களின் எதிரி.

ராகுல்: Anil Ambani never made an aircraft in his life.
தங்கபாலு: அனில் அம்பானி உண்மையைப் பேசுகிறவர் அல்ல..

இதையடுத்து ராகுலின் பேச்சையும், அதற்கு தங்கபாலுவின் மொழிபெயர்ப்பையும் தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரலையாகப் பார்த்த தமிழக மக்கள், உடனடியாக அதை விமர்சிக்கத் தொடங்கினர். `ஒருவேளை தங்கபாலு, ஏதாவது பதற்றத்தில் இருந்தாரோ என்னவோ, அதனால்தான் சில வாக்கியங்களைத் தவறாக மொழிபெயர்த்து இருக்கலாம்' எனத் தோன்றவே அதுபற்றி தங்கபாலுவிடம் பேசினோம்.

அப்போது தங்கபாலு, ``நான் எதற்குப் பதற்றமடையப் போகிறேன். மொழிபெயர்ப்பு என்பது எனக்கொன்றும் புதிதல்ல. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், ராகுல் காந்தி எனப் பலருடைய உரையையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மேடையில் பேசியுள்ளேன். அந்தத் தலைவர்களின் அபிமானத்திற்கு உரியவனாக நான் எப்போதும் இருந்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறேன். நாகர்கோவிலில் நேற்று ராகுலின் பேச்சை நான்தான் மொழிபெயர்க்க வேண்டும் எனக் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது. அதைப்  பணிவுடன் ஏற்றுக்கொண்டு திறம்பட என் பணியைச் செய்தேன்" என்றார். மேலும் அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

``மேடையில் ராகுல் காந்தி பேசியதற்கும் உங்கள் மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததே?"

``அந்தக் களத்தில் நீங்கள் இருந்திருந்தால் நிலைமை என்னவென்று தெரிந்திருக்கும். என்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் முகத்தில் ஒவ்வொருமுறையும் தோன்றிய மலர்ச்சி, கைதட்டல், அவர்கள் செய்த ஆரவாரம் போன்றவையே என் பேச்சு எந்தளவுக்கு அவர்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஆதாரம். சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனம் செய்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. `மெஜாரிட்டி ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் என்ன' என்பதைப் பாருங்கள். பிரதமர் மோடியின் பேச்சை மொழிபெயர்த்துப் பேசிய ஹெச்.ராஜாவுடன் என்னுடைய மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பாருங்கள். எது சிறந்தது என்று உங்களுக்கே தெரியும்".

``மக்கள் ரசித்தது இருக்கட்டும். ராகுல் பேசியதைப் பிழையாக மொழிபெயர்த்தது விட்டோமே எனத் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏதேனும் மெல்லியதாகத் தோன்றியதா?"

``என்னுடைய  தலைவர் என்ன பேசினாரோ, அதைத்தான் நான் மொழிபெயர்த்தேன். அவர் ஒரு தனித்துவமான தலைவர். அவருடைய கருத்துகள் தனித்துவமானவை. அதை மக்களின் மொழியில், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மொழிபெயர்த்துப் பேசினேன். அதை பிழையாக நான் உணர என்ன இருக்கிறது?"

``நீங்கள் மொழிபெயர்த்த விதம் குறித்து உங்களுக்கு வந்த எதிர்வினை எப்படி இருந்தது?"

``பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. நிறைய பேர் அலைபேசியில் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட, `ஆங்கிலப் பேச்சை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும் என அவசியமில்லை; கருத்து மாறாமல் இருந்தால் சரிதான்'  எனப் பாராட்டி உள்ளார்". 

``ராகுல்காந்தி இனி தமிழகம் வரும் ஒவ்வொருமுறையும்  நீங்கள்தான் தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்வீர்களா?"

``அதுகுறித்து கட்சிதான் முடிவெடுக்கும். எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சை என் தமிழ் சொந்தங்களுக்கு மொழிபெயர்த்துக் கூற நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்". 

அடுத்த கட்டுரைக்கு