Published:Updated:

மார்க்ஸ் என்றால் மூலதனம்... மார்க்ஸுக்கு இவர்கள் இருவரும் மூலதனம்! #RememberingKarlMarx

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மார்க்ஸ் என்றால் மூலதனம்... மார்க்ஸுக்கு இவர்கள் இருவரும் மூலதனம்! #RememberingKarlMarx
மார்க்ஸ் என்றால் மூலதனம்... மார்க்ஸுக்கு இவர்கள் இருவரும் மூலதனம்! #RememberingKarlMarx

மார்க்ஸ் என்றால் மூலதனம்... மார்க்ஸுக்கு இவர்கள் இருவரும் மூலதனம்! #RememberingKarlMarx

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கார்ல் மார்க்ஸ் என்றால், அடர்த்தியான தாடி, இறுக்கமான முகம், மடிப்பும் சுருக்கமுமான பழைய கோட் போன்றவைதான் நம் மனதில் தோன்றும். கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம், மூலதனம் போன்ற அவரின் கோட்பாடுகளும் விவாதங்களும், சிந்தனைகளும் அணுகுவதற்கு சற்றே கடினமாகத் தோன்றலாம். வாழ்வின் இறுதிவரை கடும் வறுமையில்  உழன்றவர். அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதமில்லாத துயரம், அவரது வாழ்வெல்லாம் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு நாடாகத் தஞ்சம் அடைவது, அடக்குமுறையையும் சிறையையும் எதிர்கொள்வது என மார்க்ஸின் வாழ்வே போராட்டங்களால் நிரம்பியது. அவர்தம் செயல்பாடுகள், ஒருபோதும் அடக்குமுறையால் முடங்கிவிடவில்லை. மார்க்ஸ் என்னும் மூலதனமே நவீன உலகின் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தகைய மார்க்ஸின் செயல்பாட்டுக்குக் காரணம், இருவர். ஒருவர், அன்புக் காதலியும் ஆசை மனைவியுமான ஜென்னி. மற்றொருவர் ஆருயிர் நண்பர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ். மார்க்ஸின் வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியிருந்தாலும், காதலும் தோழமையும் அவரை புத்துணர்வுடன் இயங்க வைத்தன. மக்களுக்கு மார்க்ஸ்தான் மூலதனம் என்றால், மார்க்ஸுக்கு இவர்கள் இருவர்தான் மூலதனம்.

மார்க்ஸின் பக்கத்து வீட்டில் வசித்த பணக்கார பிரபு வம்சத்துப் பெண் ஜென்னி. மார்க்ஸின் தந்தைக்கும் ஜென்னியின் தந்தை ஃபாலனுக்கும் நல்ல நட்பு. மார்க்ஸின் இளவயது வழிகாட்டிகளில் ஃபாலனும் ஒருவர். ஜென்னிக்கு, மார்க்ஸின் மீது அதீத காதல். ஜென்னி அழகானவள்; பணக்காரக் குடும்பத்துப் பெண். மார்க்ஸோ சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பொலிவற்றவர்; முரடர். தந்தை வழக்குரைஞர் என்பதால் நடுத்தரக் குடும்பம். அந்தஸ்து, வயது (மார்க்ஸைவிட நான்கு வயது மூத்தவர்) என எந்த பேதமும் தன் காதலுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருந்தார் ஜென்னி. மார்க்ஸும் ஜென்னியை விரும்பினார். சுற்றி இருந்தவர்கள் பொறாமையில் கடிந்துகொண்டனர். இதில், மார்க்ஸின் தந்தைக்குத்தான் பயம். அவர்கள் எப்பேர்பட்ட குடும்பம், குறிப்பாக நண்பர் என்ன நினைப்பார் என வருந்தினார். ஆனால், இந்த நிகழ்வுதான் ஜென்னியால் மார்க்ஸின் வாழ்வில் ஏற்பட்ட முதல் தூண்டுதல். எப்படியாவது, அவர்களுக்கு இணையாக உயர வேண்டும் என்ற நோக்கில் தன் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினார். பெர்லினில் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்கும் வரை ஏழு ஆண்டுகள் இருவரும் பிரிந்திருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் அனுப்பிய கடிதங்கள், பிரிவின் துயரை மறக்கச் செய்தன.

மார்க்ஸ் - ஜென்னி திருமணம் இக்கட்டான சூழ்நிலையில்தான் நிகழ்ந்தது. படிப்பை முடித்து தகுதியோடு இருந்த மார்க்ஸுக்கு, பேராசிரியர் வேலை கிடைக்கவில்லை. `ரைன்லாந்து கெஜட்' என்ற பத்திரிகையில் பணியில் சேர்கிறார். ஆராய்ச்சிப் படிப்பிலேயே தத்துவம், பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை வடிவமைத்து ஆச்சர்யங்களை ஏற்படுத்தியவர் மார்க்ஸ். இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அரசை விமர்சித்து எழுதிய மார்க்ஸ், தனிக்கவனம் பெற்றார்.

ஒருகட்டத்தில் மார்க்ஸை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது அரசு. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எல்லாமுமாக இருந்த தந்தை இறந்துவிட்டார். தாயாரோ, `நன்றாக வர வேண்டிய பையன். பத்திரிகை, அது இதுவென்று சென்றுவிட்டதாக' மார்க்ஸை முழுவதுமாக வெறுத்தார். தன் சொத்தில் பங்கு கிடையாது என்று மார்க்ஸை ஒதுக்கித் தள்ளினார். (தாய் இறந்த பிறகே அவர் சொத்திலிருந்து சிறு பகுதி மார்க்ஸுக்குக் கிடைத்தது.) நண்பர் உதவியுடன் பாரிஸில் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஆகிறார். நாடு, குடும்பம், உடைமை அனைத்தையும் இழந்து இருள் சூழ்ந்திருந்த மாக்ஸின் வாழ்வில் ஒளியாய் திகழ்ந்தவர் ஜென்னி. 

முறையான வீடு இல்லை, நிலையான வருமானம் இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சிறிய மனக்கசப்புகூட இல்லாமல் மார்க்ஸுக்கு துணை நின்றார் ஜென்னி. மார்க்ஸின் முதன்மைச் செயலர் ஜென்னிதான். அவரின் எழுத்தில்கூட ஜென்னி பலமுறை ஆலோசனை கூறியுள்ளார். இருவரும் வாழ்வில் அடைந்த பெருந்துயர், லண்டனில் வசித்த ஆரம்ப நாள்கள். சாக்கடை ஓடிய  குறுகியக் குடியிருப்பு. துயர் தீராத வறுமை. விளைவு தன் நான்கு குழந்தைகளைப் பலிகொடுத்தார்கள். உணவு உண்ணாத ஜென்னியால் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால்கூட தர முடியவில்லை. `என் குழந்தை பிறக்கும்போது தொட்டில் இல்லை. இறக்கும்போது சவப்பெட்டி இல்லை’ என்று தன் தோழிக்கு எழுதுகிறார் ஜென்னி. ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ், பிர்சஸ்ஸல்ஸ், மீண்டும் பிரான்ஸ், ஜெர்மனி, இறுதியாக லண்டன் என்று வாழ்க்கை, மார்க்ஸைத் துரத்திக்கொண்டேதான் இருந்தது. ஜென்னியின் இறப்பு வரை எதனாலும் அவர் இயக்கத்தைத் தடைசெய்ய முடியவில்லை. ஜென்னி இல்லாமல் அவரால் இருக்க முடியாது. ஜென்னி இறந்து சில மாதம்தான் மார்க்ஸ் வாழ்ந்தார்.

ஜென்னி தனது 42 வது வயதில் தாய் வீட்டுக்குச் சென்றபோது இவ்வாறு கடிதம் எழுதுகிறார், `நான் இங்கு தனியாக இருந்துவருகிறேன். நீயும் நிச்சயம் தனிமையை உணர்வாய் என எண்ணுகிறேன். நான் படும் துன்பத்தைப்போல்தான் என்னைப் பிரிந்து வாழும் நீயும் அடைவாய். உன் அருகில் இருந்து எப்போதும் உன்னுடன் அன்பு ததும்ப உரையாடிக்கொண்டிருப்பது போன்ற உணர்வையே நான் இங்கு பெற்றுவருகிறேன். என் முன்னால் நீ அமர்ந்து புன்னகை சிந்திக்கொண்டிருப்பதுபோலவும், நான் உன்னைத் தொட்டு புளகாங்கிதம் அடைவதுபோலவும் எண்ணி இன்புறுகிறேன். தலை முதல் பாதம் வரை உன்னை அன்புடன் வருடி முத்தமிட்டு மகிழ்கிறேன். அப்போது உன் காதில், `என் அன்பே... நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? என்கிறேன்.' இவ்வாறு அந்தக் கடிதம் முடிகிறது. என்னிடமிருந்து கம்யூனிசத்தைக் கற்றுக்கொள்ளும் முன், முதலில் காதலைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று தன் வாழ்வின் மூலம் வெளிப்படுத்துகிறார் மார்க்ஸ். அதுதான் அவர் இயங்கியலும்கூட.

மார்க்ஸ் பிறந்த ரைன்லாந்து மாகாணத்தில் பிறந்தவர் ஏங்கெல்ஸ். தந்தை, மான்செஸ்டரில் நூற்பாலை அதிபதி. அதன் கிளை ஃபார்மெனில் இருந்ததால், ஏங்கெல்ஸ் இளமை ஃபார்மேனில் கழிகிறது. முதலாளி வீட்டுப்பிள்ளையாய் இருந்தாலும், ஏங்கெல்ஸ் சிந்தனையெல்லாம் தொழிலாளர்கள் மீதே இருந்தது. படித்து முடித்த பிறகு, `பிசினஸில் உதவியாய் இருந்தால்தான் சொத்தில் பங்கு' என்று அப்பா கட்டளையிட, மான்செஸ்டர் செல்கிறார். போகும் வழியில் கொலோன் என்ற இடத்தில் மார்க்ஸை முதன்முதலில் (1842) சந்திக்கிறார். 1843-ம் ஆண்டு பாரிஸில் இரண்டாம் முறை சந்திக்கும்போது இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்படுகிறது. பிறகு, பொருளாதாரரீதியிலும் கோட்பாட்டுரீதியிலும் இறுதிவரை மார்க்ஸின் துணை நின்றார் ஏங்கெல்ஸ்.

மார்க்ஸ் தன்னை கம்யூனிஸ்டாகக் கருதும் முன்பே, ஏங்கெல்ஸ் தன்னை கம்யூனிஸ்டாக அறிந்துகொண்டார். மான்செஸ்டரில் இருக்கும்போது, தொழிற்புரட்சி விளைவால் நிகழ்ந்த சுரண்டல்களையும் சூறையாடல்களையும் ஆய்வுசெய்தார். இதன் முடிவுகள் `இங்கிலாந்தில் பாட்டாளி வகுப்பின் நிலைமை' என்ற நூலாக வெளிவந்தது. மேலும், இவர் எழுதிய `அரசியல் பொருளாதாரம் மற்றும் திறனாய்வுக் குறிப்புகள்' என்ற நூல்தான் மார்க்ஸுக்கு அரசியல், பொருளாதாரம் குறித்த ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. தொடர்ந்து இருவரும் பல நூல்கள் இணைந்து பணியாற்றினார்கள். அவற்றில் குறிப்பிட வேண்டியவை, உலகப் பொதுவுடைமைக்கான வழிகாட்டியாக அறியப்படுகிற `கம்யூனிஸ்ட் அறிக்கை.' தன் வாழ்நாள் உழைப்பில் எழுதிய `மூலதனம்' முதல் பாகம் வெளிவந்த சில நாளில் இறந்துவிடுகிறார் மார்க்ஸ். அடுத்தடுத்த பாகங்களை வெளியிட்டு, மார்க்ஸின் அனைத்து பணிகளையும் தொகுத்து, இந்த உலக மக்களிடம் மார்க்ஸை முழுமையாகக் கொண்டுசேர்த்தவர் ஏங்கெல்ஸ்.

தலைவன் என்றால், அவன் முழுவதும் தனித்து இயங்குபவன். அவனுக்கென தனிப்பட்ட எந்த நாட்டமும் இருக்கக் கூடாது என்று அறியப்பட்ட சூழலில் மார்க்ஸ் பயணிக்கிறார். மார்க்ஸுக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் ஜென்னியும் ஏங்கெல்ஸும். நட்பும் காதலும் மார்க்ஸின் நெடும் பயணத்துக்குத் துணை நின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு