Published:Updated:

`இவர்களின் அன்பைக்கூட சந்தேகத்துடன்தான் பார்க்கணும்! - பொள்ளாச்சி விவகாரத்தில் ராமதாஸ்

சகாயராஜ் மு
`இவர்களின் அன்பைக்கூட சந்தேகத்துடன்தான் பார்க்கணும்! - பொள்ளாச்சி விவகாரத்தில் ராமதாஸ்
`இவர்களின் அன்பைக்கூட சந்தேகத்துடன்தான் பார்க்கணும்! - பொள்ளாச்சி விவகாரத்தில் ராமதாஸ்

"பெண்களின் பாதுகாப்புக்காக, அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்; பொது இடங்களில் சாதாரண உடையில் பெண் காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கூறிவருகிறேன். இந்த யோசனையை இப்போதாவது அரசு செயல்படுத்த வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

"கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், நயவஞ்சகக் கும்பலால் காதல் ஆசை காட்டி வீழ்த்தப்பட்ட  பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள்குறித்து வெளியாகிவரும் செய்திகள், மனத்தை பதைபதைக்கவைக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்கள்; எள் முனையளவும் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள் ஆவர்.

பெண்கள் போற்றப்படவேண்டியவர்கள்... வணங்கப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிகக் கொடூரமான முறையில் மிருகங்களைப் போன்று நடந்துகொண்டவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணைகுறித்து ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கும்,  பின்னர் சிபிஐ-க்கும் மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி பிரிவினர், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது.

இவ்வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ள சிபிஐ எந்தத் தொய்வுமின்றி, பாலியல் கொடூரர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, கூட்டுச் சதிசெய்து கொடூரம் இழைத்தவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின்  எதிர்பார்ப்பு ஆகும். இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை சிபிஐ விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களின் பின்னணிகுறித்து ஆராயும்போது, அவர்கள் அனைவரும் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்; சீரழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் மிகவும் வேதனையளிக்கிறது. விழிப்புடன் இருக்கவேண்டியவர்கள், விளக்கை நம்பிய விட்டில் பூச்சிகளாய் கயவர்களை நம்பி சீரழிந்திருக்கின்றனர். அவர்கள், ஏற்கெனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சிகள், அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். இது, மனக் காயங்களை மேலும் ரணமாக்குமே தவிர, மருந்து போடாது. எனவே, இந்த விஷயத்தில் காட்சி ஊடகங்களும்  காணொலிகளைச் சமூக ஊடங்களில் பரப்புவோரும், சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அடையாளம் வெளிப்படாத அக்குழந்தைகளுக்கு, குடும்பத்தினர் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

இத்தகைய கொடூரங்களுக்கு, சம்பந்தப்பட்ட மனித மிருகங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் ஏமாளித்தனத்தையும் மட்டும் காரணம் காட்டிவிட்டு, நாம் கடந்துபோய்விட முடியாது. பொள்ளாச்சி கொடூரத்துக்கு சமுதாயமும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்கள்குறித்தும், கெட்ட விஷயங்கள்குறித்தும் நமது அடுத்த தலைமுறையினருக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தவறியிருக்கிறோம். இது சமூகத்தின் தவறு.

காதல் என்ற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றில், 12.05.2011 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில்,‘‘எங்களின் பார்வையில் 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண்கள் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுமிகள், ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டு, அதற்காகப் பின்னர் வருத்தப்படுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானதாகும்.

மனித நேயமும் மாண்புகளும், மனசாட்சியும் அறமும் மறித்துப்போய்விட்ட இன்றைய உலகில் அனைவரும், குறிப்பாகப் பெண்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லும் பெண்கள், வீட்டிலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் வீடு திரும்புவது வரை கன்னிவெடிகளுக்கு நடுவில்தான் பயணிக்கவேண்டியிருக்கிறது. எதிர்பாராத விதமாக கன்னிவெடிமீது அடியெடுத்து வைத்தால், உயிரையே இழக்க நேரிடுவதைப் போன்று, பெண் குழந்தைகள் பருவ வயதில் தவறான முடிவெடுத்தால், வாழ்க்கையையே இழக்கவேண்டியிருக்கும் என்பதை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் நயவஞ்சகர்களால் எளிதில் வீழ்த்தப்படுவதற்கு இன்னொரு காரணம், அவர்களுக்குத் தேவைப்படும் அன்பும் அரவணைப்பும் பெரும்பாலான பெற்றோர்களிடம் கிடைக்காததுதான். பொருள் தேடல், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளிடம் பெற்றோர்கள் நேரம் செலவிடுவதில்லை. இதனால், பல குழந்தைகளுக்கு தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள்குறித்து மனம் விட்டுப் பேசுவதற்குக்கூட ஆளில்லை. இந்த இடைவெளியைத்தான் நயவஞ்சகர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூரர்களால் நம்பவைத்து சீரழிக்கப்பட்ட பெண்களில் பலரும் இத்தகைய சூழலில் வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற கூற்றுகளை மறுக்க முடியாது.

ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும், அவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல், பணிக்காகவும் பொருளுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள், சித்திரங்களை வாங்க கண்களை விற்பவர்களாகத்தான் இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் அவற்றுக்கு சென்றுதிரும்பும் வழியில் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், எதிர்கொள்ளும் பிரச்னைகளாக இருந்தாலும், அவற்றைத் தயக்கமின்றி குடும்பத்தினரிடம் கூறலாம்; அவர்கள் தீர்வு கூறுவர் என்று பெண்பிள்ளைகள் நம்பும்  ஆரோக்கியமான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகளின் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பது செல்பேசிகள் ஆகும். அனைத்து தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்பேசிகள்தான். எனவே, அழிவின் ஆயுதமான செல்பேசிகள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில்  கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை, தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இதை, உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரின் அறிவுரையாகக் கருதி, அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பெண் குழந்தைகள், அவர்களின் பதின்வயதில் எந்த மனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. படிக்கும் வயதில் உயர்கல்வியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும்தான் அவர்களின் இலக்காக இருக்க வேண்டும். அறிமுகமற்றவர்களின் அன்பைக்கூட சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்க வேண்டும். காதல் நாடகமாடி வாழ்க்கையைச் சீரழிக்க முயலும் வஞ்சகர்களிடம் விழிப்புடன் விலகியிருக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்குக் கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறும் பெற்றோர்கள், ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களைச் சகோதரிகளாக நினைத்து மதிக்கும் மாண்பை ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் விதைக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் 'மகளிர் மட்டும்' பேருந்துகளை இயக்க வேண்டும்; பொது இடங்களில், சாதாரண உடையில் பெண் காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கூறிவருகிறேன். இந்த யோசனைகளை இப்போதாவது அரசு செயல்படுத்த வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக, பெண்களை மயக்கும் கயமைப் போக்கைக் கைவிட்டு, மதிக்கும் போக்கை  நமது இளைஞர்களுக்குக் கற்பிக்க சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களும் முன்வர வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.