Published:Updated:

"அ.தி.மு.க, தி.மு.க தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?"

ந.பொன்குமரகுருபரன்
"அ.தி.மு.க, தி.மு.க  தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?"
"அ.தி.மு.க, தி.மு.க தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?"

அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சிகள் செலவழிக்க உத்தேசித்திருக்கும் தொகை எவ்வளவு? வேட்பாளர்களிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள்? போன்ற விவரங்களை அறிய, அறிவாலயத்துக்கும் ராயப்பேட்டைக்கும் விசிட் அடித்தோம். 

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுவதால், அறிவாலயமே பரபரப்பாக இருந்தது. ஒரு வேட்பாளர் 30 கோடி செலவழிக்கும் சக்தி இருந்தால் மட்டுமே நேர்காணலில் உட்கார முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க-வினர் கூறுகின்றனர். தொகுதிக்குள் வேட்பாளருக்கு உள்ள செல்வாக்கு, அவர் சார்ந்துள்ள சமூகத்தினரின் எண்ணிக்கை எல்லாவற்றையும் சேர்த்து, அவர் செலவழிக்கும் நிலையில் உள்ளாரா? என்பதுவும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் ஒருவர், இம்முறையும் 'சீட்' கேட்டு விண்ணப்பித்துள்ளார். கடந்தமுறை போட்டியிட்டபோது, தனக்கு 12 கோடி கடன் ஏற்பட்டதாகவும், இம்முறை வாய்ப்பளித்தால் கடனில் இருந்து மீண்டுவிட முடியும் என்றும் கூறியுள்ளார்.  ''இப்போது இருக்கும் நிலைமையே வேறு, உங்களால் செலவுகளைச் சமாளிக்க முடியாது. சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்'' என பக்குவமாகப் பேசி அனுப்பிவிட்டதாம் நேர்க்காணல் குழு. ஆளுந்தரப்பு அசூரத்தனமாக பணத்தை இறக்கும். அதற்கு நிகராக இல்லாவிட்டாலும், போட்டிபோடவாவது வலுஇருக்க வேண்டும் என்று நினைக்கிறது அறிவாலயம். 

ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றோம். ஒவ்வொரு தொகுதியும் அந்தந்த மாவட்ட அமைச்சர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செலவுக்கு அவர்களே பொறுப்பேற்பதால், தங்கள் ஆதரவாளர்களையே வேட்பாளராக நிறுத்த தலைமையை நெருக்கிவருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக, 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்குத் தனியாக பதினோரு இலக்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். வேட்பாளருக்கு  உள்ள செல்வாக்கு, அ.ம.மு.க-வினரின் பாதிப்பு தொகுதியில் எப்படி இருக்கும், அவர் சார்ந்த சமூகத்தினரின் எண்ணிக்கை, குற்ற வழக்குகள் உள்ளதா என்பனவும் அ.தி.மு.க நேர்காணலில் 'செக்' செய்யப்படுகிறது. 

அ.ம.மு.க-வைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தது 4 கோடியாவது செலவழிக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இம்மூன்று கட்சிகளுமே, அன்றாட தேர்தல் செலவுகளை வேட்பாளரே கவனித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டது. கடைசி ஐந்து நாள்களுக்கு மட்டும் தேவைப்படும் தொகையைத் தலைமையிலிருந்து அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்துக்கு மிகப்பெரிய சவாலாக இந்த பொதுத்தேர்தல் விளங்கப்போகிறது என்பதில் ஐயமில்லை.