Published:Updated:

`கூட்டணி என்பது வேறு; லட்சியம் என்பது வேறு’ - அ.தி.மு.க கூட்டணி குறித்து வாசன் விளக்கம்!

`கூட்டணி என்பது வேறு; லட்சியம் என்பது வேறு’ - அ.தி.மு.க கூட்டணி குறித்து வாசன் விளக்கம்!
`கூட்டணி என்பது வேறு; லட்சியம் என்பது வேறு’ - அ.தி.மு.க கூட்டணி குறித்து வாசன் விளக்கம்!

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே இணைந்த நிலையில் நேற்று ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் இணைந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் த.மா.கா-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்நிலையில், இன்று கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த இந்தச் சந்திப்பில், ``தேர்தல் கூட்டணி என்பது வேறு. கட்சியின் லட்சியம் என்பது வேறு. மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதன் அடிப்படையில் த.மா.கா செயல்பட்டு வருகிறது. தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சியாக இருக்கிறோம். நாட்டின், பாதுகாப்பு, வளர்ச்சி, நலன் இதில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். 

தற்போது எங்களின் செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எண்ணிக்கை என்பதைக் காட்டிலும் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். குறைகளை நிறைகளாக்க மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு, தேச வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றி பெறும். இந்தக் கூட்டணியின் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் போட்டியிடுகிறது’’ என்றார்.