Published:Updated:

"நான் உயிரோடு இருப்பேனானு தெரியலையே!"- மகனுக்காக கலங்கும் அற்புதம்மாள்

"நான் உயிரோடு இருப்பேனானு  தெரியலையே!"- மகனுக்காக கலங்கும்  அற்புதம்மாள்
"நான் உயிரோடு இருப்பேனானு தெரியலையே!"- மகனுக்காக கலங்கும் அற்புதம்மாள்

``ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்ட  நிலையிலும், அந்த மனு மீது எந்த முடிவும்எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் தமிழக ஆளுநர். பேரறிவாளன் மற்றும் நளினி தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும், இதுவரை 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பரவலான தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபோன்ற எந்தவோர் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விவகாரம் தொடர்பாக, அமைதி காத்து வருகிறார். ஆளுநரின் அமைதியால் சிறையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களின் உறவினர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி 7 பேர் விடுதலை குறித்துப் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராகுல், 7 பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ``இந்த விவகாரத்தில் சட்டரீதியாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அதனை ஏற்போம். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை" என்றார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், ``7 பேர் விடுதலை குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருப்பதைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்டேன். `சட்ட ரீதியாக என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்கிறேன்' என்று அவர் கூறியிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. சட்டரீதியாக என்று அவர் கூறத் தேவையில்லை. `ஆளுநர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நேரடியாகக் கூறியிருந்தால், அவர் சொன்ன பதில் பொருத்தமானதாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு `சட்டத்தின் முடிவுப்படியே' என்று ஏன் அவர் பேச வேண்டும்? அவர்கள் விடுதலை குறித்து மாநில அரசு முடிவுசெய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட பிறகு ராகுல் ஏன் சட்டத்தைப் பற்றிப் பேசவேண்டும்?  

இந்தக் கருத்து பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கான அவரின் பேச்சாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் அனைவருமே எங்களை ஏமாற்றுகிறார்கள். பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே என் மகன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இல்லை என்பது தெரிய வருகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. இங்குள்ளவர்கள் கொள்கை முடிவு என்று கூறுகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, `உங்கள் மகனை உங்களிடம் சேர்ப்பேன்' என்று உறுதி கூறினார். அந்த வார்த்தையை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் பின்பற்றினார்களா? அதைச் செய்துவிட்டு மக்களவைத் தேர்தலைச்  சந்தித்து இருந்தால் மிகவும் கண்ணியமாக இருந்திருக்கும். வெறும் தீர்மானம் மட்டும் இயற்றிவிட்டால் போதுமா? ஆட்சியாளர்களின் மவுனத்தால் என்னுடைய நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. என் மகன் என்னிடம் வரவில்லை என்றால் நான் உயிரோடு இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று தழுதழுத்தக் குரலில் குறிப்பிட்டார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை என்பது, அற்புதம்மாள் என்ற ஒரு தாய்க்கு மட்டும் ஏற்பட்ட பாசப் போராட்டம் அல்ல; நீதி தேவதையின் தீர்ப்புக்குப் பிறகும் நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய அறப்போராட்டம் ஆகும்...!